Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கட்டண கழிப்பிடத்தில் அதிக தொகை குத்தகைதாரருக்கு அபராதம்

Print PDF

தினமலர்      15.05.2010

கட்டண கழிப்பிடத்தில் அதிக தொகை குத்தகைதாரருக்கு அபராதம்

கோவை : சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலுள்ள மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூலித்ததால் குத்தகைதாரருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டிலுள்ள கட்டண கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க ஒரு ரூபாயும், மலம் கழிக்க 2 ரூபாயும் வசூலிக்க வேண்டும் என்பது மாநகராட்சி விதிமுறை.இதை மீறிய குத்தகை தாரர் ரஹமத்துல்லா, சிறுநீர் கழிக்க மூன்று ரூபாயும், மலம் கழிக்க ஐந்து ரூபாயும் வசூலித்து வந்தார். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவிற்கு தகவல் வந்தது.நேரில் சென்ற உதவி கமிஷனர் லோகநாதன், நிர்வாக அலுவலர் துரைராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி விதிமுறைப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமான தொகை வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா குத்தகைதாரர் ரஹமத்துல்லாவிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 'இனி வரும் காலத்தில், இது போன்ற நடவடிக்கை தொடர்ந்தால் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் பிரச்னை: தமிழக அரசுக்கு மனு அனுப்பினால் பரிசீலிக் கப்படும்

Print PDF

தினமணி    17.05.2010

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் பிரச்னை: தமிழக அரசுக்கு மனு அனுப்பினால் பரிசீலிக் கப்படும்

உதகை, மே 16: உதகை நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை ஒருமுறை வரன்முறைப்படுத்தும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளதாக மத்திய தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.

மேலும், இதற்காக மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினால், இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மத்திய அரசின் நிதியின் கீழ் ரூ.5 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 114வது மலர்க்காட்சியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஆ.ராசா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

அவர் பேசியதாவது:

உதகையில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர்க் காட்சி மிக முக்கியமானது. ஆண்டுதோறும் மலர்க் காட்சிக்கு மட்டுமின்றி, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இச்சிறிய மாவட்டத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இம்மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்பட்டபோது தமிழக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளும் பாராட்டியுள்ளன. திமுக அரசு கலைஞர் காப்பீட்டுத் திட்டம், குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றுதல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் முதல் தலைமுறை மாணவருக்கு கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

உதகை நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பான பிரச்னை தற்போது உச்சநீதி மன்றம் வரை சென்றுள்ளது. இப்பிரச்னையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கோடும் கையாள வேண்டும். வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். இருப்பினும் இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் பாதுகாக்கும் நோக்கில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை ஒரு முறை வரன்முறைப்படுத்தும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது.

எனவே, இப்பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பரிசீலனை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கலாம். அந்த மனுக்கள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு தமிழக அரசும் தயாராகவே உள்ளது. இந்த ஒருமுறை அளிக்கப்படும் வாய்ப்பு தவிர, மீண்டும் விதி மீறல்கள் இருக்கக் கூடாது.

இத்தகைய முடிவு மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் வருத்தமளிப்பதாகவும் உள்ளது. உதகை அரசினர் தாவரவியல் பூங்காவை தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்படுத்தி வரும் நேரத்தில், மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.5 கோடி பெற்று இப்பூங்காவை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராசா குறிப்பிட்டார்.

தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், தோட்டக்கலைத் துறை இயக்குநர் டாக்டர் சந்திரமோகன், தமிழக அரசின் முன்னாள் தலைமைக்கொறடா பா.மு.முபாரக் உள்ளிட்டோரும் பேசினர்.

 

மாநகராட்சி வளாகத்தில் வலம் வரும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை

Print PDF

தினமணி    14.05.2010

மாநகராட்சி வளாகத்தில் வலம் வரும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை

சேலம், மே 13: சேலம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உலாவும் இடைத் தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி எச்சரித்துள்ளார்.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் குடிநீர், சொத்து, வருமான வரி செலுத்துதல் மற்றும் பிறப்பு இறப்புச் சான்றிதழ், கட்டட அனுமதி சான்றிதழ் பெறுதல் போன்றவற்றுக்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில், தேவையான சான்றிதழ் உடனடியாக கிடைக்கப் பெறாமல் அலைக்கழிக்கப்படும் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சான்றிதழ் வாங்கிக் கொடுப்பது, விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பது போன்ற பணிகளை இடைத்தரகர்கள் செய்து வந்தனர்.

மைய அலுவலகத்துக்குள் இடைத்தரகர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவே இங்குள்ள இரண்டு நுழைவு வாயில்களில் ஒன்று கடந்த சில மாதங்களாகப் பூட்டப்பட்டு கிடந்தது. இந்நிலையில் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகரித்தது.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, மைய அலுவலகங்களில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பிரிவு அலுவலகங்கள் எதிரிலும் கூடி நின்ற பொதுமக்களிடம் அவர்கள் எதற்காக நிற்கின்றனர்?, என்ன பிரச்னை என்று கேட்டார். மேலும் அங்கிருந்த இடைத்தரகர்களை அவர் எச்சரித்தார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சியில் பொதுமக்களுக்கு ஏதாவது பணிகள் நடைபெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையே அணுக வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னைச் சந்தித்து முறையிடலாம். மைய அலுவலகத்தில் இதுபோல் உலாவும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

 

 


Page 425 of 506