Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

2 புரோட்டா கடைகளுக்கு பூட்டு

Print PDF

தினமணி 06.05.2010

2 புரோட்டா கடைகளுக்கு பூட்டு

திருநெல்வேலி,மே 5: திருநெல்வேலி நகரத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 2 புரோட்டா கடைளை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பூட்டினர். மேலும் ஹோட்டல்கள், டீ கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாநகரத்தில் உள்ள ஹோட்டல்கள், புரோட்டா கடைகள், டீ கடைகள், சாலையோர உணவகங்கள் ஆகியவற்றில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன், மாநகர சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநகர சுகாதார அலுவலர் கலு. சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர். சங்கரலிங்கம், காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, முருகேசன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் திருநெல்வேலி நகரம் ரத வீதிகள், கூலக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்.

மொத்தம் 25 ஹோட்டல்கள், உணவகங்களில் இச் சோதனை நடைபெற்றது. மேலும் 100-க்கும் மேற்பட்ட டீ கடைகள், புரோட்டா கடைகள், சாலையோர உணவகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதில் தெற்கு மற்றும் வடக்கு ரத வீதிகளில் உள்ள 2 புரோட்டா கடைகள் உணவுக் கலப்பட தடைச் சட்டத்தின் அனுமதி இன்றியும், உரிமம் இல்லாமலும் செயல்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர். இதேபோல, சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட் டிருந்த வடை உள்ளிட்ட உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அழித்தனர். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தால் கடைக்காரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

 

சபாஷ்! அதிகாரி ஆய்வு; குத்தகை ரத்து : கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம்

Print PDF

தினமலர் 06.05.2010

சபாஷ்! அதிகாரி ஆய்வு; குத்தகை ரத்து : கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம்

கோவை : கோவை, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில், கூடுதல் கட்டணம் வசூலித்த கழிப்பிட குத்தகையை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.கோவை, காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட்களில் மாநகராட்சி சார்பில் கழிப்பிடம் கட்டப்பட்டு, வருடந்தோறும் குத்தகைக்கு விடப்படுகிறது. இவற்றில் வசூலிக்க வேண்டிய கட்டணத்தையும் மாநகராட்சி நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. இதன்படி, சிறுநீர் கழிக்க ஒரு ரூபாய், குளிக்க 3 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்து, இது குறித்த அறிவிப்புப் பலகையையும் அந்தந்த கழிப்பிடங்கள் முன்பாக மாநகராட்சி நிர்வாகம் வைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை எந்த கழிப்பிட குத்தகைதாரரும் வாங்குவதில்லை; அதற்கான ரசீதும் கொடுப்பதில்லை.

தமிழகம் முழுக்க இந்த பிரச்னை இருந்தாலும், ஒரு சில உள்ளாட்சி நிர்வாகங்கள் உறுதியான நடவடிக்கை எடுத்து, இந்த முறைகேட்டைத்தடுத்துள்ளன. கோவையில், இதுபோன்ற முறைகேடு, பல ஆண்டுகளாக நடந்து வந்தாலும், தற்போதுள்ள கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். வாகன நிறுத்துமிடம், கட்டணக் கழிப்பிடங்களில் நடந்து வந்த கழிப்பிட முறைகேடுகளைக் கண்டு பிடித்த கமிஷனர், குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். சில நாட்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்கும் குத்தகைதாரர்கள், மீண்டும் வேலையை காட்டி விடுகின்றனர்.

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில், கடந்த ஆண்டில் புதிய கட்டணக் கழிப்பிடம் கட்டப்பட்டு, இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து குத்தகைக்கு விடப்பட்டது. வேலுச்சாமி என்பவர், ஆண்டுக்கு 8 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கு இதை ஏலம் எடுத்து கட்டணம் வசூலித்து வருகிறார். கடந்த மார்ச் மாதத்துடன், குத்தகைக்காலம் முடிவுக்கு வந்து விட்டாலும், மறு ஏலம் விடும் வரையிலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு குத்தகைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைப்பயன் படுத்தி, இந்த கழிப்பிடத்தில், சிறுநீர் கழிக்க 2 ரூபாய், குளிக்க 10 ரூபாய் என இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

அதற்குரிய ரசீதும் தரப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையில், தொகை இருந்த இடம் மறைக்கப்பட்டிருந்தது. அதில் புகார் தெரிவிக்க கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனரின் தொடர்பு எண் தரப்பட்டிருந்ததால், ஏராளமான புகார்கள் குவிந்தன. கடந்த வாரத்தில், 7வது வார்டு கவுன்சிலர் (மா.கம்யூ.,) கனகமணியும், நேரடியாக இந்த முறைகேட்டைப் பார்த்து, கமிஷனரிடம் புகார் கூறியுள்ளார். கமிஷனர் உத்தரவின்படி, நேற்று காலையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் லட்சுமணன், நேரடியாக அங்கு சென்றுள்ளார்.

சிறுநீர் கழிக்கப்போவதாக ஒரு ரூபாய் கொடுத்த அவரிடம், அங்கிருந்த ஊழியர், 2 ரூபாய் கேட்டு தகராறு செய்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு கட்டணம் என்று அவர் கேட்டதற்கு, உண்மையில் அவர்கள் வாங்கும் அதிக கட்டணத்தையும் அந்த ஊழியர் கூறியுள்ளார். இதனால், கட்டண முறைகேடு நடப்பதை உறுதி செய்த உதவி கமிஷனர் லட்சுமணன், உடனடியாக அந்த குத்தகைதாரரின் குத்தகையை ரத்து செய்வதாகக் கூறி, அந்த ஊழியரை அங்கிருந்து வெளியேற்றினார். மாநகராட்சி ஊழியர் ஒருவரை உடனே வரச் செய்து, அவரை அங்கு கட்டணம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை, அங்குள்ள பயணிகள் பலரும் நேரடியாகப் பாராட்டினர். இதேபோல, மற்ற கழிப்பிடங்களிலும், 'பார்க்கிங்' பகுதிகளிலும் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முறைப்படுத்துதல் அவசியம்! தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டாண்ட்களில் கட்டணக்கழிப்பிடங்களில் பகிரங்க கட்டண முறைகேடு நடக்கிறது. இதைத்தடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் 'கிடைப்பதை' வாங்கிக்கொண்டு, கண்டு கொள்ளாமல் உள்ளனர். மாநிலம் முழுவதும் கழிப்பிடங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து, அவற்றில் விளம்பரம் செய்துகொள்ள அனுமதித்தால், கட்டண முறைகேடு தடுக்கப்படும்; மக்கள் 'காசை கொடுத்து நோயை வாங்கும்' அவஸ்தையும் தவிர்க்கப்படும்.

Last Updated on Thursday, 06 May 2010 08:07
 

பன்றி வளர்ப்போருக்கு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 06.05.2010

பன்றி வளர்ப்போருக்கு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

கடலூர் : கடலூர் நகரில் பன்றி வளர்ப்போர்கள் வரும் 9ம் தேதிக்குள் தாங்களாகவே பன்றிகளை நகரை விட்டு அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நகராட்சி பகுதியில் பொது சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை, அதனை வளர்ப்பவர்களே நகரை விட்டு அகற்றிக் கொள்ள வேண்டும் என நகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நகரில் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனை வரும் 9ம் தேதிக் குள் அவர்களாகவே அப்புறப்படுத்த வேண் டும். இல்லையெனில் வரும் 10ம் தேதி நகராட்சி சார்பில் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, அதனை வளர்ப் போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


Page 427 of 506