Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லை புதிய பஸ் நிலைய வாகன காப்பகத்தில் ஸ்மார்ட் கார்டு சேவை தொடக்கம்

Print PDF

தினமணி 30.04.2010

நெல்லை புதிய பஸ் நிலைய வாகன காப்பகத்தில் ஸ்மார்ட் கார்டு சேவை தொடக்கம்

திருநெல்வேலி, ஏப். 29: தமிழக மாநகராட்சிகளிலேயே முதன் முதலாக திருநெல்வேலியில் வாகன காப்பகத்தில் "ஸ்மார்ட் கார்டு' சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்தை தனியார் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். இந்தாண்டு மிகவும் குறைந்த விலைக்கு தனியார் குத்தகைக்கு கேட்டதால், அதை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துவிட்டு வாகன காப்பகத்தை தானே நடத்த முடிவு செய்தது. அதன்படி, கடந்த 1 ஆம் தேதி முதல் இந்த வாகன காப்பகத்தை மாநகராட்சி நிர்வாகமே நடத்தி வருகிறது.

வாகன காப்பகத்தை மாநகராட்சி நிர்வாகம் நிர்வகிக்க தொடங்கிய உடன் முறைகேடுகளைத் தடுக்கவும், வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்கவும் கணினிமயமாக்கப்பட்டது. அதை மேலும் நவீனமாக்கும் வகையில் தற்போது ரூ. 4.5 லட்சம் செலவில் "ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையின் தொடக்க விழா ஆணையர் கா. பாஸ்கரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயர் கா. முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

மேயர் அ.லெ. சுப்பிரமணியன், சேவையைத் தொடங்கி வைத்தார்.

தமிழகத்திலேயே திருநெல்வேலி மாநகராட்சியில்தான் இந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது.

வாகன காப்பகத்தை மாதம் முழுவதும் பயன்படுத்த விரும்புவோருக்கு, சிவப்பு ஸ்மார்ட் கார்டும், ஒரு நாள் பயன்படுத்துவோருக்கு மஞ்சள் ஸ்மார்ட் கார்டும் வழங்கப்படுகின்றன. மாதாந்திர அட்டைக்கு இரு சக்கர வாகனத்திற்கு ரூ. 90 வாகன காப்பக கட்டணமாகவும், அட்டைக்குரிய வைப்புத் தொகையாக (திரும்பப் பெறக் கூடியது) ரூ. 50 என மொத்தம் ரூ. 140 வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் பயன்பாட்டுக்கு 24 மணி நேர கட்டணமாக ரூ. 3 வசூலிக்கப்படுகிறது. ஆட்டோவுக்கு ஒரு நாள் கட்டணமாக ரூ. 5-ம், காருக்கு ரூ. 10-ம் வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர கட்டணம் 30 நாள்களுக்கு சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் ஜெய் சேவியர், மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகம்மது மைதீன், உதவி ஆணையர் (பொறுப்பு) து. கருப்பசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர், மேயர், ஆணையர் உள்ளிட்டோர் வாகன காப்பகத்தை ஆய்வு செய்தனர்.

 

குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் கடும் நடவடிக்கை

Print PDF

தினமணி 30.04.2010

குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் கடும் நடவடிக்கை


திருத்தணி, ஏப். 29: திருத்தணி நகரில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் செண்பகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:

திருத்தணி நகரின் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய பல்வேறு விதமான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது திருத்தணியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்கிட, நகராட்சி செயற்பொறியாளர் தலைமையில் உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், பிட்டர், குழாய் ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருத்தணி நகரின் பல இடங்களில் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களது மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும் மூன்று ஆண்டு குடிநீர் வரியையும் அபராதமாக செலுத்த நேரிடும். அபராதம் அனைத்தும் செலுத்திய பிறகு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்க ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்படும். எனவே பொதுமக்கள் யாரும் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்ச வேண்டாம் எனவும் திருத்தணி நகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

திண்டிவனம் நகராட்சியில் டெண்டருக்கு ஒப்புதல்:தினமலர் செய்தியால் விரிவான விவாதம்:ஒரு கோடி ரூபாய் செலவில் அலுவலக கட்டடம்

Print PDF

தினமலர் 30.04.2010

திண்டிவனம் நகராட்சியில் டெண்டருக்கு ஒப்புதல்:தினமலர் செய்தியால் விரிவான விவாதம்:ஒரு கோடி ரூபாய் செலவில் அலுவலக கட்டடம்

திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான டெண் டர் பணிக்கு மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.திண்டிவனம் நகர மன்றக் கூட்டம் சேர்மன் பூபாலன் (தி.மு..,) தலைமையில் நேற்று காலை நடந்தது. ஆணையர் முருகேசன், நகர மன்றத் துணைத் தலைவர் கவிதா முரளிதரன் (தி.மு..) மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.கூட்டம் துவங்கியவுடன், சலவாதி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் ரவிச்சந்திரன்(தி.மு..,) தீர்மானம் கொண்டு வந்தார். இங்கு மேம்பாலம் கட்டுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன், சுடுகாட் டிற்கு செல்வதிலும் பிரச்னை ஏற் படும் என்று சேர்மன் பூபாலன் கூறினார். இதையடுத்து இந்த தீர் மானம் ஏகமனதாக நிறைவேறியது.பின்னர் நடந்த விவாதம் வருமாறு:சேர்மன்: கவுன்சிலர்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியில் வந்து பேசக் கூடாது.

ஆணையர்: நகராட்சிக்கு வருவாய் ஆதாரத்திற்காக கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.நகரில் ரோடு வசதி, கால்வாய் வசதி போன்றவற்றை செய்யாமல், வரி வசூல் மட்டும் செய்யப்படுவது குறித்து பா..., கவுன்சிலர்கள் ஜெயராஜ், முரளி தாஸ் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

அப்பாஸ்மந்திரி(.தி.மு..,): சேர்மன் எங்களுக்கு அம்மா போல், நீங்கள் அடிக்கலாம். நாங்கள் கோபப்படலாம், பின்பு எங்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றார்.

சேர்மன்: நான் அம்மா போல அல்ல, அய்யா போல் என்று கூறுங்கள்.

பூபால்(வி.சி.,): வார்டுகளில் உள்ள குறைகளால் பொதுமக்கள் கவுன்சிலர்கள் மீது வெறுப்படைகின்றனர். அதன் வெளிப்பாடுதான் இங்கு கவுன்சிலர்கள் கோபப்படுகின்றனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.கூட்டத்தில் நகராட்சி அலுவலகம் கட்ட ஆறு முறை டெண்டர் விட்டப் பின்பு புதுச்சேரி காளிதாஸ் என்பவரின் ஒப்பந்த புள்ளி தகுதி வாய்ந்ததாக ஏற்கப்பட்டது. அவர் மதிப்பீட்டை விட 13.86 சதவீதம் அதிகமாக கொடுத்துள்ளார். இதை குறைத்து 9.70 சதவீதம் அதிகமாக செய்ய ஒப்புதல் கடிதம் பெறப்பட்டுள்ளது.எனவே ஒரு கோடி ரூபாய் செலவில் நகராட்சி அலுவலக கட்டடம் கட்ட மன்றம் ஒப்புதல் அளித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து நான்குமுறை மன்றக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்த நகராட்சி ஆணையர் முருகேசன் நேற்று நடந்த கூட்டத் தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்றக் கூட்டத்தில் தினமலர் பத்திரிகையை காண்பித்து பூபால் (வி.சி.,) பேசியதாவது:நகரில் உள்ள சுகாதார சீர்கேடுகளை தினமலர் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்பட வில்லை. அவர்கள் நூறு ரூபாய் சம்பள உயர்வு கேட்டு 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். அதற்கு முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்.

இதே கருத்தை அ.தி.மு.., கவுன்சிலர் அப்பாஸ் மந்திரியும் வலியுறுத்தினார்.ஆணையர் முருகேசன் பதிலளிக்கையில், திண்டிவனம் நகராட்சிக்கு சிறப்பு அனுமதி வழங்கி மேலும் பணியாளர்களைநியமிக்க அரசை கேட்டுள்ளோம். சுய உதவிக் குழுவினர் டெண்டர் போட்டு தான் 80 ரூபாய்க்கு வேலை செய்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு சம்பளம் உயர்த்தி தரலாம் என்று கூறினார்.மேலும் தினமலர் செய்தியின் காரணமாக சுகாதாரப் பிரச்னை குறித்து விரிவான விவாதம் நடந்தது.

Last Updated on Friday, 30 April 2010 07:37
 


Page 429 of 506