Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மார்ச் இறுதிக்குள் பாதாள சாக்கடை பணிகளை முடிக்கவேண்டும்: ஆட்சியர் உத்தரவு

Print PDF

தினமணி              18.12.2013

மார்ச் இறுதிக்குள் பாதாள சாக்கடை பணிகளை முடிக்கவேண்டும்: ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை வரும் ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்து சாலைப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியர் இரா.நந்தகோபால் உத்தரவிட்டார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் ரூ.40.34 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆட்சியர் இரா.நந்தகோபால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். காட்பாடி சாலையில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பார்வையிட்ட அவர், "தோட்டப்பாளையம் நேஷனல் திரையரங்கு அருகே நடைபெறும் பணிகளை ஜனவரி 2014 இறுதி வாரத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும். மாநகராட்சியில் தற்போது பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 15 சதவீதப் பணிகளை மார்ச் இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். அத்துடன் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளை, குறிப்பாக முக்கிய சாலைகளில் உடனடியாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலைப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்' என்று அவர் ஆணையர் ஜானகி ரவீந்திரனிடம் கேட்டுக் கொண்டார்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளுக்கு சாலை அமைக்கும் பணிக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார். பழைய புறவழிச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் கேட்டுக் கொண்ட ஆட்சியர், புதிய பஸ் நிலையத்தில் சுகாதாரத்தைப் பேணுமாறு கேட்டுக் கொண்டார். பஸ் நிலைய வாயில்களில் பஸ்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தினுள் செல்ல வேண்டும். பஸ்கள் நிறுத்துமிடங்களில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும்.

பஸ்களை அதற்கான இடங்களில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஆட்டோக்கள் அனைத்தையும் ஒரேஇடத்தில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

பஸ்கள் வந்து செல்லும் நேரங்கள், அவை செல்லும் வழி உள்ளிட்ட விவரப் பலகையை கட்டாயம் வைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

Print PDF

தினகரன்            17.12.2013

மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்

சென்னை, : வில்லிவாக்கத்தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தை இடித்து, நிலம் மீட்கப்பட்டது.

வில்லிவாக்கம் பெருமாள் கோயில் தெற்கு மாடவீதியில், சத்துணவு கூடம் உள்ளது. இதன் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை, தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் அந்த நபரிடம் விளக்கம் கேட்டபோது, அது தனது இடம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மாநகராட்சி சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து, நேற்று காலை 8வது மண்டல செயற் பொறியாளர் முனியப்பன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிக்கு வந்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து, நிலத்தை மீட்டனர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அதிகாரிகள் வந்ததால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டடம் அகற்றம்

Print PDF

தினமணி              17.12.2013

மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டடம் அகற்றம்

சென்னை வில்லிவாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினர்.

சென்னை வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சத்துணவுக்கூடம் உள்ளது.

இது மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் இந்த இடத்தில் புதிய சத்துணவுக் கூடம் அமைக்கப்பட்டது.

ஆனால் பழைய சத்துணவுக் கூடம் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்த இடத்தை வில்லிவாக்கம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாரதிபாஸ்கர் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியதாகத் தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புக் கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அப்போது பாரதிபாஸ்கர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தடையாணையை நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.

இதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை காலை போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புக் கட்டடத்தை ஜே.சி.பி. வாகனம் மூலம் அகற்றினர்.

 


Page 46 of 506