Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

இளநிலை உதவியாளர் தட்டச்சுப் பணியாளர்களுக்கு நடந்த நேர்முகத்தேர்வு

Print PDF

தினமலர்             13.12.2013

இளநிலை உதவியாளர் தட்டச்சுப் பணியாளர்களுக்கு நடந்த நேர்முகத்தேர்வு

மதுரை:மதுரை மாநகராட்சியில், இளநிலை உதவியாளர் தட்டச்சுப் பணியாளர்களுக்கு நடந்த நேர்முகத்தேர்வு, இதுவரை இல்லாத அளவிற்கு, நேர்மையுடன் நடத்தி முடித்தார் கமிஷனர் கிரண்குராலா. சிபாரிசு கடிதங்கள், குப்பைக்குச் சென்றன. மாநகராட்சியில், கண்கூடாக நடக்கும் அபத்தங்களில் ஒன்று, பணி நியமனம்.

விரும்பியவர்களுக்கு, விரும்பிய இடத்தில், விரும்பியதை பெற்று பணியமர்த்தும் கலாசாரம், காலம் தொட்டே நடந்து வருகிறது. முந்தைய கமிஷனர் நந்தகோபால் இருந்த போது, காலியாக இருந்த 40 இளநிலை உதவியாளர் தட்டச்சுப்பணியாளர் பணிக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், அறிவிப்பு வெளியாகி; 175 பேர் நேர்முகத்தேர்வில் பங்கேற்க, அழைப்புவிடுக்கப்பட்டது. 32 வயதிற்குட்பட்டவர்களை மாநகராட்சி கேட்டது; அவர்கள் அனுப்பியதோ, 40 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதிலும், சிலர் 50ஐ கடந்தவர்கள். நேர்முகத்தேர்வுக்கு ஏற்பாடு செய்யும் நேரத்தில், வேலூர் கலெக்டராக நந்தகோபால் மாறுதலானார். புதிய கமிஷனராக கிரண் குராலா பொறுப்பேற்றதும், நேர்முகத்தேர்விற்கு ஏற்பாடு நடந்தது.

நேற்று காலை நேர்முகத்தேர்வு தொடங்கியது. அழைத்ததில், 50 பேர் "ஆப்சென்ட்'; 125 பேர் வந்திருந்தனர்."அவருக்கு கொடுத்தாச்சு... அங்கே பார்த்தாச்சு... நமக்கு முடிஞ்சு போச்சு... அடிக்கிற இடத்துல அடிச்சாச்சு...' என, "மனக்கோட்டை' கட்டி வந்தவர்களுக்கு, "ஆப்பு' அடித்தார், கமிஷனர். இதுவரை இப்படியொரு நேர்முகத் தேர்வு நடந்திருக்க வாய்ப்பில்லை. முதலில், சான்றிதழ் சரிபார்ப்பு, அதன் பின், "டைப் ரைட்டிங் மிஷினில்' தமிழில் 10 நிமிடம், ஆங்கிலத்தில் 10 நிமிடம், "டைப்' செய்ய வேண்டும். பின், கம்ப்யூட்டரில், தமிழில் 10 நிமிடம், ஆங்கிலத்தில் 10 நிமிடம் "டைப்' செய்ய வேண்டும்.

அதன் பிறகு தான், மற்றவை. கமிஷனரின் இந்த உத்தரவைக் கேட்டு ஆடிப்போன மாநகராட்சி பணியாளர்கள், "சார்... நம்மிடம் ஒரு "டைப் மிஷின்' கூட இல்லை; அதுவும் இல்லாமல், நமக்கு "டைப் ரைட்டிங்'கில் வேலை இல்லை,' என்றனர். "தகுதியான பணியாளர்கள்தான், நமக்கு வேண்டும்; நம்மிடம் இல்லையென்றால், வெளியில் வாடகைக்கு வாங்குங்க...' என, கமிஷனர் உத்தரவிட, அவசரம் அவசரமாக "மிஷின்கள்' தேடி கொண்டுவரப்பட்டன. தேர்வை, கமிஷனர், தன் அறையில் இருந்தபடி, வீடியோ மூலம், தேர்வை பார்வையிட்டார். சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த கருத்தரங்கு கூடம், கம்யூட்டர்கள் வைத்திருந்த மேயர் கலந்துரையாடல் அரங்கில், "கேமரா' வசதியில்லை என, அதிகாரிகள் கூறியபோது, "கேமரா வைத்த பின், நேர்முகத் தேர்வை தொடங்குங்கள்,' என கூறிவிட்டார்.

அதனால், அவசரமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றையும், அறையிலிருந்தபடி கமிஷனர் பார்வையிட்டார். முதல் நாள் இரவிலிருந்தே, கமிஷனர் அறை நோக்கி, நிறைய சிபாரிசு கடிதங்கள் வந்தன; அவை அனைத்தும், "குப்பைத் தொட்டிக்கு' சென்றதுடன், நேற்று முன்தினம் முதலே, பிறரை சந்திப்பதையும் கமிஷனர் தவிர்த்தார். இதனால், "திறமைக்கு வாய்ப்புக்கு கிடைக்கும்,' என, தேர்வுக்கு வந்தவர்கள், மகிழ்ச்சியடைந்தனர்.

 

தொழில்–சொத்து வரிகள் மூலம் கோவை மாநகராட்சியின் வரிவருவாய் அதிகரிப்பு

Print PDF

தினத்தந்தி           12.12.2013

தொழில்–சொத்து வரிகள் மூலம் கோவை மாநகராட்சியின் வரிவருவாய் அதிகரிப்பு

கோவை, - சொத்து வரி, தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

வரி வருவாய் அதிகரிப்பு

கோவை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி, மற்றும் குடிநீர் கட்டணம், அபாயகரமான பொருட்களை பாதுகாப்புடன் வர்த்தகம் செய்வதற்கான அனுமதி கட்டணம், மற்றும் மாநகராட்சி வணிக வளாக வாடகை, காலியிட வரி, வீடுகள் கட்டுவதற்கான வரைபட அனுமதி ஒப்புதல் ஆகியவற்றின் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது.

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, வீடு கட்டுவதற்கான திட்டவரைவு அனுமதி ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செலுத்தவும், ஆன்லைன் மூலம் ஒப்புதல் பெறுவதற்கான வசதியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டது. வரி செலுத்தாதவர்களின் பட்டியலும் ஆய்வு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமியின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கோவை மாநகராட்சியின் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

ரூ.157 கோடி

இதன்படி கடந்த ஜூன் மாதம் மட்டும் வரி வருவாய் கடந்த ஆண்டைவிட 2 சதவீதம் அளவுக்கு குறைந்து இருந்தது. அதன்பின்னர் தொடர்ந்து வரி வருவாய் உயர்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை மொத்தம் ரூ.157 கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24.15 சதவீதம் அளவுக்கும், மே மாதம் 30.07 சதவீதம் அளவுக்கும், ஜூலை மாதம் 21.28 சதவீதம் அளவுக்கும், ஆகஸ்டு மாதம் 59.43 சதவீதம் அளவுக்கும், செப்டம்பர் மாதம் 32.32 சதவீதம் அளவுக்கும், அக்டோபர் மாதம் 55.64 சதவீதம் அளவுக்கும், நவம்பர் மாதம் 32.68 சதவீதம் அளவுக்கும் வரி வருவாய் உயர்ந்துள்ளது.

எண்ணிக்கையும் அதிகரிப்பு

தொழில் வரி, சொத்துவரி உயர்ந்துள்ளதுடன், வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதன் காரணமாக வருவாய் உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் விடுபட்ட கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளும் சொத்துவரி செலுத்தும் பட்டியலுடன் புதிதாக இணைக்கப்பட்டது. இதன்படி கடந்த 2012–13–ம் ஆண்டில் சொத்துவரி செலுத்தும் பட்டியல் 23,510 அளவுக்கு புதிதாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில் மட்டும் 18 ஆயிரத்து 391 எண்ணிக்கை சொத்துவரி செலுத்தும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருவாய் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் சொத்து வரி வருமானம் ரூ.11 கோடியே 77 லட்சம் உயர்ந்துள்ளது.

உடனடியாக செலுத்தும் வசதி

காலியிட வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 4,994 அளவுக்கு கூடுதலாக உயர்ந்துள்ளது. தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மற்றும் பிற அரசு துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கலந்துபேசி தொழில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

மாநகராட்சி வரி வருவாய் உயர்ந்து இருப்பதன் காரணமாக, மாநகராட்சிக்கு கடன் உதவி அளிக்கும் வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் மாநகராட்சியின் திரும்ப செலுத்தும் வசதி அதிகரித்து இருப்பதன் மூலம் திட்ட மேம்பாடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டுகோள்

Print PDF

தினகரன்           12.12.2013

கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டுகோள்

புதுச்சேரி, : கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுவை சுகாதாரத்துறை செயலர் ராகேஷ்சந்திரா வெளி யிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையின் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கு விட்டுவிட்டு மழை பெய்வதாலும், வரும் காலங்களில் மழை பெய்ய இருப்பதாலும் மேலும் புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மக்களிடையே ஒரு சில இடங்களில் உள்ளதாலும் பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீட்டிலும், வீட்டை சுற்றிலும் மற்றும் பொது இடங்களிலும் தேவையற்ற பழைய டயர்கள், உடைந்த பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆட்டுஉரல்கள் மற்றும் தேங்காய் ஓடுகள், சிமெண்ட் தொட்டிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி அதில் டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் அப்புறப்படுத்துமாறும், காய்ச்சல் இருப்பின் அருகிலுள்ள அரசு மருத் துவமனைகளில் மருத்துவர் ஆலோசனையை பெற்று பயன்பெற வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல் அனைத்தும் டெங்கு காய்ச்சல் அல்ல. காய்ச்சல் இருப்பின் மருத்துவ ஆலோசனை அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Page 49 of 506