Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

டிச. 31-க்குள் பாதாளச் சாக்கடை இணைப்புபெற ஆணையர் வேண்டுகோள்

Print PDF

தினமணி 01.12.2009

டிச. 31-க்குள் பாதாளச் சாக்கடை இணைப்புபெற ஆணையர் வேண்டுகோள்

மதுரை, நவ. 30: மதுரை மாநகரில் பாதாளச் சாக்கடை இணைப்பு பெறாமல் உள்ள வீட்டு, வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் டிச. 31-ம் தேதிக்குள் இணைப்பை பெறுமாறு மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு இணைப்பு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாநகராட்சியில் தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மூலம் மதுரையில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நகரில் பாதாளச் சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகும் வீடுகள், வணிக வளாகப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாநகராட்சி மழைநீர் கால்வாயுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் கால்வாய் நிரம்பி அப்பகுதிகளில் பெரும் சுகாதாரக் கேடான நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பாதாளச் சாக்கடை திட்டம் அனைத்து வார்டுகளிலும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாளச் சாக்கடை இணைப்பு வழியாக மட்டுமே வெளியேற்றப்படவேண்டும்.

மதுரை மாநகரில் பாதாளச் சாக்கடை இணைப்பு பெறாமல் உள்ள வீட்டு, வணிக உரிமையாளர்கள் டிச. 31-ம் தேதிக்குள் இணைப்பைப் பெறவேண்டும்.

அவ்வாறு இணைப்பு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரித்துள்ளார்.

 

சிங்கப்பூர் அரசு அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

Print PDF

தினமணி 27.11.2009

சிங்கப்பூர் அரசு அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

சிங்கப்பூரில் உள்ள நதிகள் மேம்பாட்டு பணிகளை வியாழக்கிழமை பார்வையிடுகிறார் துணை முதல்வர் மு.. ஸ்டாலின்.

சென்னை, நவ. 26: ஆறுகளை தூய்மைப்படுத்துவது குறித்து சிங்கப்பூர் அரசு அதிகாரிகளுடன் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள துணை முதல்வர் மு.. ஸ்டாலின், அந்நாட்டின் பொதுநல வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆறுகளை தூய்மைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

1977-ம் ஆண்டுக்கு முன்பு முற்றிலும் மாசுபட்டிருந்த சிங்கப்பூர் ஆற்றை 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் அரசு தூய்மைப்படுத்தியது. அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள்.

சுத்தப்படுத்திய பிறகு ஆற்றின் கரையோரங்களில் வணிக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆற்றை அழகுபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

சிங்கப்பூர் ஆற்றுக்குள் கடல் நீர் புகாமல் இருப்பதற்காக கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையை ஸ்டாலின் பார்வையிட்டார். படகில் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று ஆற்றின் ஓரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும் ஸ்டாலின் பார்வையிட்டார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு துணை முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினார்.

சிங்கப்பூர் ஆறு தூய்மைப்படுத்தப்பட்டது போல சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காகவே ஸ்டாலின் சிங்கப்பூர் அரசு அதிகாரிகளிடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

 

திண்டுக்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி 25.11.2009

திண்டுக்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் திடீர் ஆய்வு

திண்டுக்கல், நவ. 24: திண்டுக்கல் நகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

திண்டுக்கல் நகராட்சி பகுதி 2 திட்டத்தின் கீழ் ஒத்தகண் பாலம் சாண எரிவாயு தகன மேடை பணி முடிவடைவது எப்போது என்ற கட்டுரையையும், போதிய நிதி இருந்தும் நகராட்சி வளர்ச்சிப் பணிகள் தாமதமாக நடந்து வருவதையும் சுட்டிக் காட்டி மூன்று தினங்களுக்கு முன் தினமணி செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை அடுத்து திண்டுக்கல் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, திடீர் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையத்தில் இடிந்துள்ள சுற்றுச் சுவரை பார்வையிட்ட ஆட்சியர், அதனை பொது நிதியிலிருந்து உடனே கட்டுவதற்கும், பஸ் நிலையத்திற்குள் உள்ளே பாழடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்கவும், பஸ் நிலையத்திற்கு உள்ளே ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினார்.

ஒத்தகண் பாலம் அருகே உள்ள எரிவாயு தகன மேடையைப் பார்வையிட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் பணியை முடித்திடவும், அவ்வளாகத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பாலத்தின் கீழ் நடைபெற்று வரும் ஓடை கட்டும் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

நாகல் நகரில் உள்ள சந்தையைப் பார்வையிட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.

பின்னர் காந்தி மார்க்கெட்டைப் பார்வையிட்ட ஆட்சியர், அதனை சீரமைக்க அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மார்க்கெட்டில் வியாபாரிகள் வைத்துள்ள வாடகை பாக்கிகளை நகராட்சி வசூலிக்க கேட்டுக் கொண்டார்.

குமரன் பூங்காவைப் பார்வையிட்ட ஆட்சியர், பூங்காவை மேம்படுத்த, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சுற்றுலாத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நகராட்சிப் பகுதிகளில் கழிவு நீர் வடிகால் வசதி அமைத்து தர முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள ஆணையருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன், நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சிப் பொறியாளர் ராமசாமி, உதவிப் பொறியாளர்கள் வெற்றிச்செல்வி, அன்னலட்சுமி, நகர்நல அலுவலர் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

நகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்ட தினமணி, உடனடியாக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மா.வளளலார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:32
 


Page 481 of 506