Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருப்பத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF

தினமணி 24.09.2009

திருப்பத்தூர் பேரூராட்சிக் கூட்டம்

திருப்பத்தூர், செப். 23: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை தலைவர் சாக்ளா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு செயல் அலுவலர் அமானுல்லா, துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய தலைவர் சாக்ளா, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானத்தை அலுவலர்களோ, அதிகாரிகளோ மதிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

செயலர் அமானுல்லா; அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

துணைத் தலைவர், கார்த்திகேயன்: வார்டு 9-ல் உள்ள தோப்புத் தெருவை வள்ளல் ரெங்கசாமி பிள்ளைத் தெரு என மாற்ற வேண்டும் என்றார்.

சோமசுந்தரம்: பூமாயி அம்மன் கோயில் ஊருணியைச் சுற்றி கம்பி வேலி அமைக்கக் கோரினார்.

யாசின்; 15-வது கல்லாகுழித் தெருவில் மண் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றுமாறு கூறினார்.

சரவணப்பெருமாள்; 17-வது வார்டு அச்சுக்கட்டு குடோன் எதிரில் மழைநீர் செல்லமுடியாமல் தேங்கியுள்ளது என்றார்.

பதிகண்ணன்; தனது வார்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை இட மாறுதல் செய்யக் கோரினார்.

செயல் அலுவலர்; கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.

மேலும், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் நமது பேரூராட்சியின் பங்கு தொகை ரூ. 147 லட்சம் செலுத்தப்பட வேண்டியுள்ளதால், குடிநீர்க் கட்டணத் தொகையை குடியிருப்புகளுக்கு ரூ. 50-லிருந்து 100 ஆகவும், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 100-லிருந்து 200 ஆக உயர்த்தவும் மற்றும் புதிய இணைப்புகளுக்கு வைப்புத்தொகை, குடியிருப்புகளுக்கு ரூ. 5000 ஆகவும், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10,000 ஆகவும் உயர்த்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 24 September 2009 06:20
 

மேலப்பாளையம் நவீன ஆடறுப்பு மையம்: மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு

Print PDF

தினமணி 24.09.2009

மேலப்பாளையம் நவீன ஆடறுப்பு மையம்: மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு

திருநெல்வேலி, செப். 23: மேலப்பாளையம் நவீன ஆடறுப்பு மையத்தை நடத்த மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு திருநெல்வேலி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இம் மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை (செப். 24) நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் கா. பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முக்கியமாக மேலப்பாளையத்தில் ரூ. 55 லட்சத்தில் கட்டப்பட்டு ஓராண்டாக மூடிக்கிடக்கும் ஆடறுப்பு மையத்தைத் திறக்க அவசரக் கூட்டப் பொருளில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

ஆடறுப்பு மையத்தை நடத்தவும், பராமரிக்கவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதில் நீதிமன்றம் மாநகராட்சிக்கு எதிராக தடை பிறப்பிக்கவில்லை.

இதையடுத்து மாநகராட்சி மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு செய்துள்ளது. இதில் தற்போது தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள மாமன்றத்தின் அனுமதி கேட்டு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

மேலும் ஆடறுப்பு மையத்தைப் பராமரிக்க, அதை ஒப்பந்தம் எடுக்க உள்ளோர் பின்பற்ற வேண்டிய 33 விதிமுறைகள் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இங்கு ஆடு ஒன்றுக்கு ரூ. 20 கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் அத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மாநகர்ப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் செய்வது, புதிய திட்டங்கள் நிறைவேற்றுவது என பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன.

Last Updated on Thursday, 24 September 2009 06:11
 

குடிநீர் கட்டணம் கூடுதலானால் மண்டல அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் .

Print PDF

தினமணி 22.09.2009

குடிநீர் கட்டணம் கூடுதலானால் மண்டல அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் .

சென்னை, செப்.21: ""குடிநீர் கட்டணம் கூடுதலாக வந்தால், அந்தந்த மண்டல அலுவலகங்களில் புகார் அளிக்கலாம்'' என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

மீட்டர் பொருத்தாத குடியிருப்புகளைவிட, மீட்டர் பொருத்திய அடுக்குமாடி குடியிருப்புகளில் மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் அளித்த விளக்கம்:

கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து மீட்டர் பொருத்தப்பட்ட குடியிருப்புகளில் குடிநீரின் மாத உபயோக அளவு 10 ஆயிரம் லிட்டராக இருக்கும்போது, ஆயிரம் லிட்டருக்கு ரூ. 2.50 வீதம் வசூலிக்கப்படும்.

10 ஆயிரம் லிட்டரிலிருந்து 15 ஆயிரம் லிட்டர் வரை ஆயிரம் லிட்டருக்கு ரூ. 10 எனவும், 15 ஆயிரம் லிட்டருக்கு மேல் 25 ஆயிரம் லிட்டர் வரை ஆயிரம் லிட்டருக்கு ரூ. 15 எனவும், 25 ஆயிரம் லிட்டருக்கு மேல் பயன்படுத்தும்போது ஆயிரம் லிட்டருக்கு ரூ. 25 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரே இணைப்பு வழங்கப்படுவதால், பெரும்பாலும் அதிகபட்ச படிமுறையான (ஸ்லாப்) ஆயிரம் லிட்டருக்கு ரூ. 25 என்ற கட்டண விகிதத்தில் வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று , 1.1.2008 தேதியிலிருந்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழங்கும் குடிநீரின் அளவை அங்குள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தற்போது கட்டணம் வெகுவாக குறைந்துள்ளது.

இந்த புதிய முறைப்படி அல்லாமல், பழைய முறைப்படி கணக்கிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அந்தந்த மண்டல அலுவலகங்களில் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Last Updated on Tuesday, 22 September 2009 05:46
 


Page 490 of 506