Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடியாத்தத்தில் ராபின்சன் குளம் சீரமைப்பு பணிகள் நகராட்சி தலைவர் அமுதா நேரில் ஆய்வு

Print PDF

தினத்தந்தி             07.12.2013

குடியாத்தத்தில் ராபின்சன் குளம் சீரமைப்பு பணிகள் நகராட்சி தலைவர் அமுதா நேரில் ஆய்வு

குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் சுமார் 7.61 ஏக்கர் பரப்பளவில் ராபின்சன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வாரி, மழைநீர் சேகரிப்பு, சுற்றிலும் பூங்கா, விளையாட்டு திடல், நடைபாதை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

ராபின்சன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற அரசின் தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரோட்டரி சங்கத்தின் பங்களிப்புடன் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் குப்பை தூர்வாரும் பணி தொடங்கியது. தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அரசின் கட்டமைப்பு, இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதி மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு, கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளது. இதில் தற்போது ரூ.30 லட்சம் செலவில் குளத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.அமுதா நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது ஆணையாளர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி, நகரமன்ற துணை தலைவர் மோகன்ராஜ், கவுன்சிலர்கள் எஸ்.கே.சுரேஷ், வி.என்.கார்த்திகேயன், கம்பன், ரவி, ஏ.கார்த்தி, பணி மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ஆவடி நகராட்சி பகுதிகளில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கியது

Print PDF

தினத்தந்தி             07.12.2013

ஆவடி நகராட்சி பகுதிகளில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கியது

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் உத்தரவின் பேரில் ஆவடி நகராட்சி கமிஷனர் மோகன் தலைமையில் சுகாதார அலுவலர் பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலை ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல், மீன் கடை, பூ கடை, காய்கறி கடை, பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மற்றும் பயன்படுத்திக்கொண்டிருந்த 40 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள சுமார் 125 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினார்கள்.

‘‘ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஒரு வார காலம் இந்த பணிகள் நடைபெறும்’’ என கமிஷனர் மோகன் தெரிவித்தார்.
 

வர்த்தக விளம்பரங்கள் அகற்றம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர்         06.12.2013

வர்த்தக விளம்பரங்கள் அகற்றம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

கோவை:கோவை மாநகர எல்லைக்குள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வர்த்தக விளம்பரங்களை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகர எல்லைக்குள் அனைத்து ரோடுகளில், ரோட்டின் இரு பக்கமும் தனியார் வர்த்தக விளம்பரங்கள், கண்கவர் வண்ண விளக்குகளுடன் வைக்கப்பட்டன. ரோட்டோரங்களிலும், தனியார் கட்டடங்களிலும் வர்த்தக விளம்பரங்கள் புற்றீசல் போன்று முளைத்தன.

நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் கண்கவர் விளம்பரம் செய்வது, விபத்துகளுக்கு வழிவகுப்பதால், விளம்பரங்கள் வைக்க சுப்ரீம் கோர்ட் ஆட்சேபனை தெரிவித்தது. மேலும், இந்திய சாலைக்குழும விதிகளுக்கு முரணாக ரோட்டின் மையத்திலும், ரோட்டோரத்திலும் விளம்பரங்கள் வைக்கப்பட்டன.

"அனுமதி விளம்பரம் வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்; தனியார் கட்டடங்கள் மேல்தளத்தில் அனுமதியின்றி விளம்பரம் வைத்தால், கட்டடத்துக்கு வர்த்தக ரீதியாக வரி விதிக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, ரோட்டின் மையத்தடுப்பில் இருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டன. ரோட்டோர விளம்பரங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி காலாவதியானதும், அவற்றை உடனடியாக அகற்ற, முந்தைய கலெக்டர் உத்தரவிட்டார்.

கலெக்டர் மாற்றத்துக்கு பின், மீண்டும் விளம்பரங்களின் ஆக்கிரமிப்பு தலைதூக்கியது. ரோட்டின் மையத்தடுப்பில் இருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டாலும், ரோட்டோரங்களை ஆக்கிரமித்துள்ள விளம்பரங்கள் அகற்றப்படவில்லை. தனியார் கட்டடங்களிலும் விளம்பரங்கள் முளைத்தன. இது குறித்து, "தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மாநகராட்சி கமிஷனர் லதா ஆகியோர் உத்தரவின்படி, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், மாநகர எல்லைக்குள் இருக்கும் வர்த்தக விளம்பர போர்டு மற்றும் பிளக்ஸ் விளம்பரங்களை, இரண்டு நாட்களாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி ஐந்து மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 147 வர்த்தக விளம்பரங்களை நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் அகற்றியுள்ளனர். தனியார் கட்டடங்களில் வர்த்தக விளம்பரம் வைத்தால், சொத்துவரி விதிப்பு வகை மாற்றம் செய்யப்படும் என, கடுமையாக எச்சரித்துள்ளனர்.
மாநகருக்கு வெளியில்...

கோவை மாநகராட்சியின் தொடர் நடவடிக்கைகளால், வர்த்தக விளம்பரங்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளன. ஆனால், மாநகர எல்லையை கடந்ததும், முக்கிய ரோடுகளில், விளம்பரங்களின் ஆக்கிரமிப்பு அதிகமுள்ளது. ரோட்டோரத்திலும், விவசாய நிலங்களிலும், தனியார் கட்டடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அகற்ற, கலெக்டர் உத்தரவிட வேண்டும். 

 


Page 54 of 506