Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விதிமீறல் கட்டட 'சீல்' அகற்றியவர் மீது புகார்

Print PDF

தினமலர்           05.12.2013 

விதிமீறல் கட்டட 'சீல்' அகற்றியவர் மீது புகார்

மடிப்பாக்கத்தில் விதிமீறல் கட்டடத்துக்கு வைக்கப்பட்ட 'சீல்' அனுமதி இன்றி அகற்றப்பட்டது குறித்து, போலீசில் புகார் செய்ய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம் பஜார் சாலையில் மனை எண், 7,8 ஆகியவற்றுக்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட, மூன்று மாடி வணிக கட்டடத்தில், விதிமீறல் இருப்பதாக, கடந்த நவ.,27ம் தேதி, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, அனுமதி இன்றி 'சீல்' அகற்றப்பட்டதாக புகார் எழுந்தது.

அதன் எதிரொலியாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கட்டடத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்பட ஆதாரங்களை சேகரித்தனர்.

அதுகுறித்த அறிக்கை சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது அனுமதி கிடைத்தவுடன், போலீசில் புகார் செய்ய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

 

நான்கு மாசி வீதிகளில் சாக்கடை கழிவுகளை தினமும் அகற்ற வேண்டும்: அலுவலர்களுக்கு மேயர் உத்தரவு

Print PDF

தினமணி           04.12.2013

நான்கு மாசி வீதிகளில் சாக்கடை கழிவுகளை தினமும் அகற்ற வேண்டும்: அலுவலர்களுக்கு மேயர் உத்தரவு

நான்கு மாசி வீதிகளிலும் நடைபெறும் பாதாளச் சாக்கடை பணியால், சாலைகளில் சாக்கடை தேங்காதவாறு தினமும் கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அகற்ற வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்.

மாநகராட்சி தெற்கு மண்டலம் கூடலழகர் பெருமாள் கோவில் தெற்கு மாட வீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் ஓடிவருகிறது. இதனால் அப் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆணையர் கிரண் குராலா தலைமையில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஆய்வு மேற்கொண்டார்.

இந்த அடைப்புகளை 2 நாளில் சீர்செய்து கழிவு நீர் பாதாள சாக்கடையில் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். மேலும் அவர் கூறுகையில், 2 நாள்களில் இந்த அடைப்பை சரிசெய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நான்கு மாசி வீதிகளில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடியும்வரை, முந்தைய சாக்கடைகள் நிரம்பி சாலைகளில் தேங்காதவாறு உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். தினமும் கழிவுநீர் உறிஞ்சு வாகனம் மூலம் மேனுவல்களில் கழிவுநீரை உறிஞ்சி அப்புறப்படுத்த வேண்டும். இப் பணிக்கென தனியாக ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டு கண்காணிப்பு செய்ய வேண்டும்.  காமராஜபுரம் அண்ணா கிழக்குத் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டு அடைப்பையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும், என்றார்.

  இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர் சாலைமுத்து, நகரப் பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், சின்னம்மாள், பிஆர்ஓ சித்திரவேல், வேலைக் குழுத் தலைவர் கண்ணகி பாஸ்கரன், மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ராயபுரம் ரயில் நிலையத்தை இடிக்கக் கூடாது: சிஎம்டிஏ

Print PDF

தினமணி            04.12.2013

ராயபுரம் ரயில் நிலையத்தை இடிக்கக் கூடாது: சிஎம்டிஏ

ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்கு ரயில் நிலைய கட்டடத்தை இடிக்க அனுமதி அளிக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) தெற்கு ரயில்வே முன் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையம் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இருப்பதால், அந்தப் பட்டியிலில் இருந்து நீக்குமாறு சிஎம்டிஏவிடம் தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த ரயில் நிலைய கட்டடத்தை பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என்று சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.

2012-2013 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சென்னை ராயபுரம் ரயில் நிலையம் 4-ஆவது ரயில் முனையமாகவும், தாம்பரம் ரயில் நிலையம் 3-ஆவது ரயில் முனையமாகவும் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் 2013-2014-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்காக நிதியும் ஒதுக்கப்படவில்லை.

ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்றுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2012-ஆம் ஆண்டு கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்தனர்.

ரயில்வே துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லூநர் குழு ராயபுரம் ரயில் நிலையத்தை 2012-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி ஆய்வு செய்தது. அப்போது ராயபுரத்தில் ரயில் முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற வேண்டுமென்றால் அதன் பாரம்பரியமிக்க கட்டடத்தை இடிக்க வேண்டும். இப்போது இந்த ரயில் நிலையம் பாரம்பரியமிக்க கட்டடங்ளை உள்ளடக்கிய சென்னை பெருநகர வளர்ச்சி குழும பட்டியலில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் இருந்து ரயில் நிலையம் நீக்கப்பட்டால் மட்டுமே ரயில் முனையமாக மாற்றும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள முடியும்.

இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும பாரம்பரியமிக்க கட்டடங்களின் பட்டியலில் இருந்து ராயபுரம் ரயில் நிலையத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கடந்த சில வாரத்துக்கு முன்பு இது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதற்கான கூட்டத்தில் தெற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில், ராயபுரம் ரயில் நிலையத்தை பாரம்பரியச் சின்னத்தில் இருந்து அகற்ற முடியாது என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

ராயபுரம் ரயில் நிலையம் வழியாக தற்போது 15 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றுகொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர்களால் 1856-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ராயபுரம் ரயில் நிலையம். இது, நாட்டிலேயே 3-ஆவது பழமையான ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Page 57 of 506