Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி சான்றிதழ் மூலம் வேலை பார்த்த மேலும் 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Print PDF

மாலை மலர்            04.12.2013

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி சான்றிதழ் மூலம் வேலை பார்த்த மேலும் 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

சென்னை, டிச. 4 - சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய ஆசிரியர்–ஆசிரியைகள் சிக்கியுள்ளனர்.

10–ம் வகுப்பு, பிளஸ்–2 படித்து விட்டு ஆசிரியர் பயிற்சி படிக்காமலேயே, படித்ததாக போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த போலி ஆசிரியர்கள் மாநகராட்சி பள்ளிகளில் வேலை செய்து பல லட்சம் சம்பளமாக பெற்றுள்ளனர்.

போலி ஆசிரியர்கள் பட்டியலில் முதல் கட்டமாக 8 பேர் இடம் பெற்றனர். அவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போலி ஆசிரியர்களில் 3 பேர் முருகன், ராஜா, குப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் மாநகராட்சி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.மேலும் 5 போலி ஆசிரியர்களை போலீசார் தேடி வந்தனர்.

அவர்கள் தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெற்றனர். இதையடுத்து போலி ஆசிரியர்கள் சத்தியவாணி, எழில்மாறன், சத்தியவேலு, தினகரன், சுகுமாறன், ஆகியோரை இணை ஆணையர் (கல்வி) சஸ்பெண்ட் செய்துள்ளார். இதுவரை மொத்தம் 8 போலி ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் எழில் மாறனும் – சத்தியவாணியும் கணவன்– மனைவி ஆவர்.

போலி சான்றிதழ் கொடுத்து வேலை பார்த்து சம்பளம் பெற்ற இவர்களின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் இதுவரை முறைகேடாக பெற்ற சம்பள பணத்தை திரும்ப பெறுவது குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

8 போலி ஆசிரியர்களும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெற்றுள்ளனர். அந்த பணத்தை முறைப்படி திரும்ப பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி கல்வி அதிகாரி தெரிவித்தார்.

 

'பொதுமக்கள் அழைத்தால் போனை எடுங்கள்'அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுரை

Print PDF

தினமலர்          02.12.2013

'பொதுமக்கள் அழைத்தால் போனை எடுங்கள்'அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுரை

சென்னை:பொதுமக்கள், அலைபேசியில் தெரிவிக்கும் புகார்களை, ஊழியர்கள் அலட்சியம் காட்டாமல், கேட்டு, நிவர்த்தி செய்ய நடவடிக்கை, எடுக்க வேண்டும் என்று, மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில், அடிப்படை வசதிகள், சம்பந்தமான புகார்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அலைபேசியில் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு புகார் தெரிவிக்க அதிகாரிகளை அழைத்தால், பெரும்பாலான நேரங்களில் அவர்கள் எடுத்து பேசுவதில்லை. இதனால், களத்தில் உள்ள புகார்கள், அதிகாரிகளுக்கு தெரியா மலேயே உள்ளது.

தொடர் புகார்

இதுகுறித்து, தொடர்ந்து புகார்கள் எழவே, பொதுமக்களின் அழைப்புகளை தவறாமல் எடுத்து பேசவும், தவிர்க்க முடியாத பட்சத்தில், மீண்டும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசி, புகார்களை கேட்டு, நடவடிக்கை எடுக்கவும், பணியாளர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகராட்சி, அனைத்து துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை, பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது, அந்த அழைப்புகள் தவறவிடப்படுகின்றன. இதனால், பொதுமக்களிடம் புகார்களை பதிவு பெற முடியாமல் போகிறது.

நடவடிக்கை

தவற விட்ட, அழைப்புகளை, பணியாளர்கள், மீண்டும் தொடர்பு கொண்டு பேச வேண்டும். புகார்களை பதிவு செய்து, அதன் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

சாலை அமைக்கும், பணிகளை மேற்கொள்ளும் போது, தெருவில் வீடுகள் உள்ள மட்டத்தை பொறுத்து, பழைய சாலையை தோண்டி எடுத்து, வீடுகளின் மட்டத்திற்கு ஏற்ப சாலை அமைக்க வேண்டும். அப்போது தான், வீடுகளுக்குள் மழைநீர் செல்லாமல் இருக்கும். இவ்வாறு, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

 

அம்மா உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமலர்          02.12.2013

அம்மா உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

திருவொற்றியூர்:'தினமலர்' செய்தி எதிரொலியாக, திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள மலிவுவிலை உணவகங்களை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவொற்றியூர் மண்டலம், 14 வார்டுகளிலும் உள்ள மலிவு விலை உணவகங்களில், இருந்த ஆர்.ஓ., கருவிகள் பழுதடைந்தன.

இதனால், உணவகங்களில் சுத்திகரிக்கப்படாத, தண்ணீரை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி வருவாய் துறை மற்றும் நிதித் துறை துணை ஆணையர், வினய் ஐ.ஏ.எஸ்., திருவொற்றியூர், மண்டல உதவி கமிஷனர், காங்கேயன் கென்னடி, செயற்பொறியாளர்கள் காளிமுத்து, உமாபதி, உதவி செயற்பொறியாளர் மோகன் ஆகியோர், ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உணவகங்களில், பழுதான ஆர்.ஓ., கருவியை, புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.

 


Page 59 of 506