Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கால்நடை வளர்க்க உரிமம் கட்டாயம் திருச்சி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

Print PDF

தினமலர்             30.11.2013 

கால்நடை வளர்க்க உரிமம் கட்டாயம் திருச்சி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

திருச்சி: ""திருச்சி மாநகர பகுதிகளில் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே கால்நடைகள் வளர்க்க முடியும்,'' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், திருச்சி மாநகராட்சி சட்டம், விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டம் ஆகியவற்றின் படி, திருச்சி மாநகராட்சியில் கால்நடைகள் பராமரிப்பு, கட்டுப்பாடுகள், வளர்க்கும் இடங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில், உரிம கட்டணம், அபராத கட்டணங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் திருச்சி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நகல் திருச்சி மாநகராட்சி பொது சுகாதார பிரிவில் அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அனுமதித்த இடங்கள் தவிர, இதர இடங்களில் மாடுகள், ஆடுகள், கழுதைகள் வளர்க்க கூடாது. கால்நடைகளை பாதுகாவலர் இன்றி சாலைகளில் அலைய விடக்கூடாது. அலையவிட்டால், அந்த கால்நடைகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு பொது ஏலம் விடப்படும். மாநகராட்சி எல்லைக்குள் பன்றி, குதிரைகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகள் வளர்ப்போர் 14 நாளுக்குள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி உரிமம் பெற்று மட்டுமே கால்நடைகளை வளர்க்க வேண்டும். கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிய விடக் கூடாது. பன்றி, குதிரைகளை மாநகராட்சி எல்லையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

 

வணிக வளாகம் முன் குப்பைத்தொட்டி வைத்து வரி வசூல்: நகராட்சி நூதன நடவடிக்கை

Print PDF

தினமலர்             30.11.2013 

வணிக வளாகம் முன் குப்பைத்தொட்டி வைத்து வரி வசூல்: நகராட்சி நூதன நடவடிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், தொழில் வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்படுகின்றன. இதில்,பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2,760 வணிக வளாகங்களிலிருந்து 18 லட்சம் ரூபாய் வசூலாகும்.

கடைகளுக்கு ஏற்றவாறு, குறைந்த பட்சம் 123 ரூபாய் முதல் 1,216 ரூபாய் வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வசூலிக்கப்படும். மற்ற வரியினங்கள் 100 சதவீதம் வரை வசூலாகும் நிலையில், தொழில் வரி மட்டும் ஆண்டுதோறும் 25 சதவீதம் மட்டுமே வசூலாகி வருகிறது.

ஒரு சிலர் பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் உள்ளனர். இதனால், இதுவரை 62 லட்சம் ரூபாய் வரை வணிக வளாகங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவையில் உள்ளன. நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் உத்தரவின் பேரில், நகராட்சி வருவாய் அதிகாரிகள் அதிரடியாக தொழில் வரி வசூலிக்க களம் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், கடைவீதியில் பொக்லைன் இயந்திரத்துடன் அதிகாரிகள் வரி வசூலிக்க களம் இறங்கினர். இதனால், அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரி செலுத்துவதாக கடை உரிமையாளர்கள் உறுதியளித்ததால், அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்நிலையில், கோவை ரோட்டில், தனியார் வங்கியின் முன், குப்பைத்தொட்டிகள் வைத்து, அதிகாரிகள் வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் வரும் வழித்தடத்தில், இரண்டு குப்பைத்தொட்டிகள் திடீரென வைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கி அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால், குப்பைத்தொட்டிகளில், கிடக்கும் குப்பை குவியலால், துர்நாற்றம் வீசி வருவதால், வங்கி அதிகாரிகள், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

நகராட்சி தொழில் வரி வசூலிக்க பல நூதன முறைகளை பின்பற்றி வருவது கடை உரிமையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரி பாக்கி அதிகம்: நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,"கோவை ரோட்டில் உள்ள தனியார் வங்கி செயல்படும் கட்டடத்திற்கு உரிமையாளர் வரி செலுத்தவில்லை. 7 லட்சம் ரூபாய் வரி பாக்கியுள்ளது. மேல் கட்டடத்திற்கு அனுமதி பெறவில்லை. பலமுறை தெரிவித்தும் வரி செலுத்தவில்லை. எனவே, தான் அதிரடியாக வணிக வளாகம் முன் குப்பைத்தொட்டிகளை வைத்துள்ளோம்,' என்றனர்.

 

ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மீண்டும் கடைகள் அமைக்க எதிர்ப்பு

Print PDF

தினமணி             29.11.2013

ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மீண்டும் கடைகள் அமைக்க எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட, பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் கடைகள் அமைக்க அனுமதி வழங்குவதற்கு பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  

 மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஜோசப்ராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் காளீஸ்வரி தெய்வேந்திரன், செயல் அலுவலர் அமானுல்லா, சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை சுகாதார மேற்பார்வையாளர் பாலு வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

கவுன்சிலர் முனியசாமி: பேரூராட்சி பகுதியில் இறைச்சிக்காக அறுக்கப்படும் ஆடுகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைக்க வேண்டும்.

  தேவர்சிலை பகுதியில் புதிதாக மின்கம்பங்கள் நடப்படும்போது பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இனி வரும் காலங்களில் இப் பிரச்னை மேலும் தீவிரமாகும். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகையாற்றுக்குள் ஆனந்தவல்லி அம்மன் கோயில் முதல் சோணையாசுவாமி கோயில் வரை மின்விளக்கு வசதி செய்யப்பட வேண்டும்.

கவுன்சிலர் சந்திரசேகரன்: நகரில் பல இடங்களில் மின்விளக்குகள் எரியாத நிலை உள்ளது. இவற்றை சரி செய்து நகரில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

  தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து பேசினர்.

 கடந்த ஜூலை மாதம் டி.எஸ்.பி வெள்ளத்துரை முன்னிலையில் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, பேரூராட்சி இடத்தில் இருந்த கடைகளும் அகற்றப்பட்டன. இந் நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடை வைக்க அனுமதி கேட்டு வரப்பெற்ற விண்ணப்பம் குறித்து கூட்டத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இத் தீர்மானத்துக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இத் தீர்மானம் குறித்து பேசிய கவுன்சிலர்கள் முனியசாமி, பாரிவள்ளல், சரவணன், மோகன்தாஸ் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடைகள் வைக்க பேரூராட்சி அனுமதி வழங்கக்கூடாது. அனுமதி வழங்கினால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது. மேலும் ஏராளமானோர் மீண்டும் பேரூராட்சி இடங்களை ஆக்கிரமித்து கடைகளை வைப்பார்கள் என்றனர். இதையடுத்து இத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மேலும் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர் மற்றும் செயல் அலுவலர் பதிலளித்துப் பேசுகையில் நகரில் நிலவும் குடிநீர் பிரச் னைக்கு மழை பெய்து குடிநீர் திட்டத்தில் நீர் ஆதாரம் கிடைத்தால் மட்டுமே தீர்வு  கிடைக்கும் என்றனர். அதன்பின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 60 of 506