Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் பல்லடம் ஆணையாளர் அதிரடி

Print PDF

தினத்தந்தி         26.11.2013

பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் பல்லடம் ஆணையாளர் அதிரடி

பல்லடம் மத்திய பஸ் நிலையத்தில் தாட்கோ அலுவலகம் அமைந்துள்ளது. ஆதிதிராவிடர்களுக்காக பல வருடங்களுக்கு முன் பஸ் நிலையத்தில் 10 கடைகள் கட்டப்பட்டு ஏலத்தின் மூலம் ஆதிதிராவிடர்கள் 10 பேருக்கு ஒதுக்கப்பட்டது. இதில் வாடகைக்கு கடை எடுத்தவர்கள் 50 சதவீத வாடகை தொகையை தாட்கோவுக்கும், 50 சதவீத தொகையை பல்லடம் நகராட்சிக்கும் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் நாராயணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், உதவியாளர்கள் அரிகிருஷ்ணா, செந்தில் ஆகியோர் பல்லடம் பஸ் நிலையத்தில் தாட்கோ மூலம் ஒதுக்கப்பட்ட 10 கடைகளில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் 10 கடைகளின் வாடகையை கடந்த 1998–ம் ஆண்டு முதல் செலுத்தவில்லை என்பதும், பல்லடம் நகராட்சி அந்த 10 கடைகளுக்கு வரியும் விதிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 10 கடைகளையும் அதிகாரிகள் நேற்று மாலை பூட்டி சீல் வைத்தனர்.

 

30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட் மீண்டும் ஏலம்

Print PDF

தினகரன்              25.11.2013

30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட் மீண்டும் ஏலம்

மதுரை, : சந்தை கண்காணிப்பாளர்கள் 4 பேர் மாற்றத்தை தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பில் இருந்த 30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட்கள், நவீன கழிப்பிடங்களை டிச.5ல் மீண்டும் ஏலம்விட புதிய ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி பொறுப்பிலுள்ள மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட், நவீன கழிப்பிடங்களுக்கு 2012 மார்ச்சில் ஏலம் விடப்பட்டது. இதில் விரும்பிய அனைவரும் ஏலம் கேட்க அனுமதிக்கப்படவில்லை. யாருக்கு ஏலம் என முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு, அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் கூடுதல் தொகைக்கு ஏலம் போகவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் கேட்க வந்த சிலருக்கும் உரிமம் கிடைக்கவில்லை.

இப்படி பல்வேறு குளறுபடிகளால் 30 இனங்களுக்கு யாருக்கும் உரிமம் வழங்க முடியாத நிலையில், மாநகராட்சியே நேரடியாக ஊழியர்கள் மூலம் வசூ லிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அந்தந்த மண்டலங்களில் பணியாற்றி வந்த சந்தை கண்காணிப்பாளர்களின் பொறுப்பில் இப்பணி ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இதில் குறைந்த தொகையே வசூலானதாக மாநகராட்சிக்கு கணக்கு காட்டி முறைகேடு நடைபெற்றது.

புதிய ஆணையராக கிரண்குராலா பொறுப்பேற்றதும், முதல் நடவடிக்கையாக 4 மண்டலங்களி லும் சந்தை கண்காணிப்பாளர்களை மாற்றி, பொறுப்புகளை மண்டல உதவி வருவாய் அலுவலர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இருந்தபோதும் அவர்கள் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை. இதனால் அந்த பணிகளை உதவி வருவாய் அலுவலர்கள் கையில் எடுத்துக் கொள்ளும்படி ஆணையர் கூறிவிட்டார். இதன்படி உதவி வருவாய் அலுவலர்கள் பணிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர்கள் கவனித்து வந்த 30 மார்க்கெட், டூவீலர் ஸ்டாண்ட், நவீன கழிப்பிடங்களை மீண்டும் டிசம்பர் 5ல் ஏலம் விட ஆணையர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதில் புதூர் மார்க்கெட், பெரியார் பஸ் ஸ்டாண்ட் டூவீலர் ஸ்டாண்ட்,  வெள்ளைக் கண் தியேட்டர் அருகிலுள்ள மார்க்கெட், செல்லூர் அகிம்சாபுரம் மார்க்கெட், ஜம்புரோபுரம், ஜெய்கிந்துபுரம் மார்க்கெட், திருப்பரங்குன்றம் கோவில் அருகிலுள்ள டூவீலர் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் ஈகோ பார்க் ஸ்டாண்ட், படகுதுறை உளளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த ஏலங்களை முறையாக நடத்த ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அனுமதி இல்லா கடைகளுக்கு பெட்டி தயாரிப்பு

மாநகராட்சி சார்பில் புதிதாக கடைகள் வைக்க அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு, இட மாற்றம் என்ற பெயரில் முக்கிய இடங்களில் கடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் சுமார் 200 பெட்டி கடைகள் எந்தவித அனுமதியுமின்றி பெருகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது, இவை அனைத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்ற ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் அனுமதி பெறாத பல்வேறு கடைகளுக்கு பெட்டிகள் தயாராகி வருகின்றன.

 

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.320.39 கோடி ரூபாய்: தமிழக அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிதி

Print PDF

தினமலர்               25.11.2013

பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.320.39 கோடி ரூபாய்: தமிழக அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிதி

திருப்பூர் : "திருப்பூர் மாவட்டத்தில், நான்கு நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில், 320.39 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,' என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளிலும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக, கடந்த நிதி யாண்டில், உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டது; 56.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அங்கீகாரம் பெறப்பட்டது. அதன்பின், 38.93 கோடி ரூபாய்க்கு தொழில்நுட்ப அங்கீகாரம் வழங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அனைத்து மாநகராட்சிகளிலும் நடைமுறையில் இருப்பதைபோல், அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உடுமலை நகராட்சியில் பணிகள் நடந்து வருவதால், அடுத்த கட்டமாக, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், தாராபுரம் நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற உள்ளன.

அவிநாசி, திருமுருகன்பூண்டி உட்பட மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதேபோல், திருமூர்த்தி அணை தளி வாய்க்காலை நீராதாரமாக கொண்டு, குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள், உடுமலையில் மூன்று ஊராட்சிகள் என 26 ஊராட்சிகளுக்காக, 54.70 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளும் துவங்கியுள்ளன.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நீங்கலாக, மற்ற நான்கு நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 320.39 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரித்து, அரசு அங்கீகாரத்திற்காக கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது."இதேபோல், சில குடிநீர் திட்டங்களுக்கும் நிர்வாக அனுமதி கோரி கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,' என்றனர்.

 


Page 63 of 506