Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னையில் கட்டட அனுமதிக்கு காத்திருப்போர் 909 : நிலுவைக்கான காரணங்களை ஆய்வு செய்ய உத்தரவு

Print PDF

தினமலர்             08.11.2013

சென்னையில் கட்டட அனுமதிக்கு காத்திருப்போர் 909 : நிலுவைக்கான காரணங்களை ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை : சென்னையில் கட்டட அனுமதிக்காக விண்ணப்பித்து 909 பேர் காத்திருக்கின்றனர். இத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டதன் காரணம் குறித்து, மண்டல பொரியாளர்கள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. கட்டட அனுமதி விண்ணப்பங்களை இணையம் மூலமே கொடுத்து, அனுமதி வாங்கும் அளவிற்கு எளிமையான திட்டங்கள் மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப் பட்ட பின்னும், வழக்கமான வழியில் தான் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு, விழிப்புணர்வு இன்மையே காரணமாக கூறப்படுகிறது.இந்த ஆண்டு, வழக்கமான முறையில், இதுவரை விண்ணப்பித்தவர்களில், 909 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.அம்பத்துாரில் அதிகம் இதில், அதிகபட்சமாக, அம்பத்துார் மண்டலத்தில் 135 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதை தவிர பெருங்குடி, ஆலந்துார், மாதவரம் ஆகிய விரிவாக்க பகுதிகளிலும் அதிக நிலுவை உள்ளது.

இது குறித்து, தொடர்ந்து புகார்கள் எழவே, நிலுவையில் இருக்கும் விண்ணப்பதாரர்களின் முகவரி, அலைபேசி எண், விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியல் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டு உள்ளது.புகார் அனுப்பலாம் அதையடுத்து, 'கட்டட வரைபட அனுமதி நிலுவையில் இருந்தால், விரைந்து பெற, mayor@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில், மேயரிடம் புகார்களையும், விண்ணப்பம், ஆவணங்கள் உட்பட கட்டட வரைபட அனுமதிக்கான ஆவணங்களையும் அனுப்பலாம்' என, சம்பந்தப்பட்ட, விண்ணப்பதாரர்களின் அலைபேசிகளுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப, மேயர் கூறியுள்ளார்.இத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மண்டல பொறியாளர்கள் விளக்கம் அளிக்கவும், மேயர் உத்தரவிட்டு உள்ளார்.

மண்டல வாரியாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள்

திருவொற்றியூர்- 8
மணலி- 13
மாதவரம்- 93
தண்டையார்பேட்டை- 45
ராயபுரம்- 42
திரு.வி.க., நகர்- 63
அம்பத்துார்- 135
அண்ணா நகர்- 50
தேனாம்பேட்டை- 21
கோடம்பாக்கம்- 51
வளசரவாக்கம்- 42
ஆலந்துார்- 100
அடையாறு- 106
பெருங்குடி- 71
சோழிங்கநல்லுார்- 69
மொத்தம்- 909

 

பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அடியோடு அகற்றப்பட்டன

Print PDF

தினத்தந்தி            08.11.2013

பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அடியோடு அகற்றப்பட்டன

சென்னை தியாகராய நகரில் உள்ள பாண்டிபஜார் கடைகள் அடியோடு அகற்றப்பட்டன. வணிக வளாகத்தில் கடைகள் தயாராகாததால் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

நடைபாதை கடைகள்

சென்னை தியாகராய நகர், தியாகராய சாலை, பாண்டிபஜார், உஸ்மான் சாலை, சிங்காரவேலன் சாலை, சிவபிரகாசம் சாலை ஆகிய பகுதிகளில் நடைபாதை கடைகள் அதிகம் உள்ளன. இந்த நடைபாதை கடைகளில் பல தரப்பட்ட மக்களும் வந்து தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்வது வழக்கம். இந்த நடைபாதை கடைகளினால் அந்த பகுதிகள் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆமை வேகத்தில் செல்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கடந்த 2001–ம் ஆண்டு டிராபிக் ராமசாமி என்பவர் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

அதேபோல் பாண்டிபஜார் நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும் கடைகளுக்கு பின்புறம் உள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் மறைக்கப்படுகின்றன. இதனால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறி அவர்களும் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் தலைமையில் தனி கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி நடைபாதை வியாபாரிகளிடம் நேரடி ஆலோசனை வழங்கியது. அதில் நடைபாதை வியாபாரிகள் எங்களுக்கென்று தனி வணிக வளாகம் அமைத்து தாருங்கள் என்று கூறி இருந்தனர்.

வணிக வளாகம்

அதன்படி, கடந்த 2010–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.4 கோடியே 30 லட்சம் செலவில் 3 அடுக்கு கொண்ட வணிக வளாகம் கட்டிமுடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 20–ந்தேதி நடைபாதை வியாபாரிகள் தங்கள் நடைபாதை கடைகளை காலிசெய்து விட்டு வணிக வளாகத்தில் தங்கள் கடைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நவம்பர் 2–ந்தேதி தீபாவளி என்பதால் அதுவரை நாங்கள் எங்கள் நடைபாதை கடைகளில் வியாபாரம் செய்கிறோம். தீபாவளி முடிந்ததும் நாங்களாகவே கடைகளை அகற்றி விடுகிறோம் என்று கூறினர். அதன்படி அவர்கள் கோரிக்கையை அரசு ஏற்று அவர்களுக்கு நவம்பர் 5–ந்தேதி வரை அனுமதி வழங்கியது. தற்போது 5–ந்தேதி முடிவடைந்த நிலையில் நடைபாதை கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து நேற்று முன்தினம் இரவு முதல் தங்கள் கடைகளை அகற்றினர்.

ஒரு தளத்தில் 175 கடைகள்

 தற்போது அவர்கள் வணிக வளாகத்தில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கடைகளை மும்முரமாக அமைத்து வருகின்றனர். இதுகுறித்து வணிக வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நடைபாதை கடைகள் சங்கத்தின் தலைவர்கள் கூறியதாவது:–

பாண்டிபஜார், உஸ்மான் சாலை, தியாகராய நகர், தியாகராய சாலை, சிவபிரகாசம் சாலை, டாக்டர் நாயர் சாலை, பிள்ளையார் கோவில் தெரு, சிவஞானம் சாலை, ஸ்ரீனிவாசா சாலை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து நடைபாதை கடைகளையும் தற்போது நாங்களாகவே அகற்றி விட்டோம்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வணிக வளாகத்தில் தற்போது ஒவ்வொரு நடைபாதை வியாபாரிகளும் கடைகளை அமைக்கின்றனர். இந்த வணிக வளாகம் 3 அடுக்குகளை கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் 175 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தவிப்பு

தளத்தில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகளாக பிரித்து ஏ பிரிவில் 59 கடைகளும், பி பிரிவில் 57 கடைகளும், சி பிரிவில் 59 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தளத்தில் 9 கழிவறைகளும், 3 லிப்ட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதே போல் மூன்று தளத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் காய்கறி கடைகள் வர உள்ளன.

பாண்டிபஜார் பேன்சி ஸ்டோர், ஜவுளிக்கடைக்கு மவுசு அதிகம் என்பதால் இன்று காலை முதல் இந்த வணிக வளாகத்தில் கடைகள் வந்து விட்டதா? என்று பொதுமக்கள் நிறைய பேர் வந்து பார்த்து விட்டு சென்றனர்.

பணிகள் தீவிரம்

தற்போது வணிக வளாகத்தில் வெளியே பூக்கடைக்காரர்கள் தங்கள் அன்றாட வியாபாரத்தை தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டு இருக்கின்றனர்.

இங்கு அனைத்து கடைகளின் பணி முடிய இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும். தற்சமயம் அனைத்து நடைபாதை வியாபாரிகளும் தங்கள் கடைகளை காலி செய்துவிட்டதால் இங்கு வணிக வளாகத்தில் கடைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போக்குவரத்து நெரிசல் குறைவு

இந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு விட்டதால் நேற்று எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாண்டிபஜார் பகுதி களை இழந்து காணப்பட்டது. மேலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் வாகனங்கள் அனைத்தும் சீராக சென்றன. போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை.

வியாபாரிகள் கோரிக்கை

நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

சென்னை தியாகராயநகர், பாண்டிபஜார், உஸ்மான் சாலை உள்பட அனைத்து நடைபாதை வியாபாரிகளிடமும் கடைகள் வைக்க கூடாது என்று கூறினார்கள். தற்போது நாங்களும் ஐகோர்ட்டு உத்தரவின்படி, நாங்களாகவே எங்கள் நடைபாதை கடைகளை அகற்றி விட்டோம். சென்னை மாநகராட்சி எங்களுக்கு என்று ஒதுக்கி தந்த இந்த வணிக வளாகத்தில் தற்போது எங்கள் கடைகளை அமைத்து வருகிறோம்.

இந்த நிலையில் மீண்டும் யாரும் நடைபாதை கடைகள் அமைக்காமல் மாநகராட்சி பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த வணிக வளாகத்தில் ஒவ்வொரு கடைக்காரருக்கும் விற்பனை நடக்க வேண்டும். அப்படி நடக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் எங்களை தேடி வர வேண்டும். அதற்கு தடையாக வேறு யாராவது நடைபாதைகளில் கடைகள் அமைத்தால் நாங்களும் மீண்டும் எங்கள் பழைய இடத்தில் எங்கள் கடைகளை அமைப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 

பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகள் அகற்றம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி            07.11.2013

பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகள் அகற்றம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

 சென்னை தியாகராய நகர், பாண்டி பஜார்–உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.

பாண்டி பஜார்–உஸ்மான் சாலை

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள பாண்டி பஜார்–உஸ்மான் சாலையில் 500–க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. ஏழை–பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்புமக்களும், இப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகளும் பாண்டிபஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்வது வழக்கம்.

ஐகோர்ட்டில் வழக்கு

ஒரு பக்கம் நன்மை இருந்தாலும், இந்த நடைபாதை கடைகளினால் தியாகராயநகர் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களும், வாகனஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள் என்றும் கூறி கடந்த 2001–ம் ஆண்டு ‘டிராபிக்’ ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும் நடைபாதைக் கடைகள் தங்கள் கடையை பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பாக மறைத்து நடைபாதை வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி வழக்கு தொடுத்தனர். வழக்கைதொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

வணிக வளாகம்

அந்த கமிட்டி நடைபாதை வியாபாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், நடைபாதை வியாபாரிகள் தங்களுக்கு தனியாக வணிக வளாகம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி, முந்தைய தி.மு.க. ஆட்சியில், மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து ரூ.4 கோடி 30 லட்சம் செலவில் பாண்டி பஜார் லட்சுமி காந்தா தெரு அருகில் லிப்ட் வசதி, கழிப்பறை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய 3 அடுக்கு வணிக வளாகம் 2010–ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

 இந்த நிலையில் அக்டோபர் 20–ந்தேதிக்குள் பாண்டிபஜார்–உஸ்மான் சாலை வியாபாரிகள் இடங்களை காலி செய்துவிட்டு, சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கடைகள் அகற்றம்

நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து நடைபாதை வியாபாரிகள், வணிக வளாகத்திற்கு கடைகளை மாற்றும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் தீபாவளி பண்டிகை நாட்களில் விற்பனையை முடித்து விட்டு செல்வதாக கூறி அவகாசம் கேட்டனர். இதைத் தொடர்ந்து நவம்பர் 5–ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

தற்போது தீபாவளி வியாபாரம் முடிந்து விட்ட நிலையில் நேற்று பாண்டி பஜார்–உஸ்மான் சாலையில் இருந்த நடைபாதை கடைகளை, கடை உரிமையாளர்களும், மாநகராட்சி ஊழியர்களும் அகற்றினர். இதுகுறித்து நடைபாதை வியாபாரிகள் கூறியதாவது:–

வியாபாரிகள் கருத்து

எங்களது கோரிக்கைகளை ஏற்று தீபாவளி பண்டிகை வரை எங்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிய முதல்–அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தற்போது நாங்களாகவே கடைகளை அகற்றி வருகிறோம்.

எங்களில் சிலர் சென்னை மாநகராட்சி வணிக வளாக கடைகளில் தங்கள் கடைகளை அமைத்து விட்டனர். சிலர் இன்னும் ஓரிரு நாட்களில் கடைகளை அமைக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
 


Page 74 of 506