Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பாண்டி பஜாரில் 510 நடைபாதை கடைகள் அகற்றம்

Print PDF

தினமணி            07.11.2013

பாண்டி பஜாரில் 510 நடைபாதை கடைகள் அகற்றம்

பாண்டி பஜார் பகுதியில் இருந்த நடைபாதைக் கடைகளை புதன்கிழமை அகற்றிய அதிகாரிகள்.
பாண்டி பஜார் பகுதியில் இருந்த நடைபாதைக் கடைகளை புதன்கிழமை அகற்றிய அதிகாரிகள்.

தியாகராய நகர் பாண்டி பஜார் பகுதியில் இருந்த நடைபாதை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.

சென்னையின் நெரிசல் மிகுந்த பாண்டி பஜார், உஸ்மான் சாலை, தியாகராயர் சாலை உள்ளிட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் நூற்றுக்காணக்கான கடைகள் இயங்கி வந்தன. இதனால், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில், பாண்டி பஜார் பகுதியில் உள்ள நடைபாதைக் கடைகளை அகற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கடைகளை அகற்றவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் நடைபாதை வியாபாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கூடுதல் கால அவகாசம் கேட்டதையடுத்து, நவம்பர் 5-ஆம் தேதி வரை வாய்மொழியாக அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசமும் முடிவடைந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை கடைகளை அகற்றினர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

நடைபாதை வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்ததையடுத்து, கடைகள் அகற்றப்பட்டன. அதிகாரிகள் கடைகளை அகற்ற வருவதை கண்ட, வியாபாரிகளே தங்கள் பொருள்களை அப்புறப்படுத்தினர்.

கடைகள் அமைக்க பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகள், பலகைகள் ஆகியவற்றை மட்டும் அதிகாரிகள் லாரிகள் மூலம் அகற்றினர்.

இந்த நடவடிக்கையில் அந்தப் பகுதியில் இருந்த 510 நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. இன்னும் 60 முதல் 70 கடைகள் மட்டுமே அகற்றப்படவேண்டும். அவையும் வியாழக்கிழமையன்று அகற்றப்பட்டு விடும்.

புதிய வணிக வளாகம்: நடைபாதை வியாபாரிகளுக்காக பாண்டி பஜார் பகுதியிலேயே ரூ. 4.5 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. கட்டடம் கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் கடைகள் அகற்றப்படாமலேயே இருந்தன.

நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாநகராட்சியின் நடவடிக்கைகளையடுத்து வணிக வளாகத்தினுள் கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடைகளை முழுமையாக அமைத்த வியாபாரிகள் வளாகத்துக்குள் சென்று விட்டனர். மற்றவர்கள், கடைகளை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வளாகத்தில் மொத்தம் 627 கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

85 போலீஸார்: கடைகளை அகற்ற புதன்கிழமை காலை 10 மணி அளவில் மாநகராட்சி அதிகாரிகள் பாண்டி பஜார் பகுதிக்கு சென்றனர். கடைகளை அகற்றும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு தடுக்க 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 85 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியில் கடை அமைத்த பூமாலை வியாபாரிகள்: இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 16 பூமாலை கடைகளும் அகற்றப்பட்டன. அவர்கள் கட்டடத்தின் உள்ளேயே வரிசையாக கடைகள் ஒதுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கு மாநகராட்சி மறுப்பு தெரிவிப்பதால், வளாகத்தின் உள்ளே சுற்றுச்சுவரை ஒட்டிய இடங்களில் கடைகளை அமைத்துள்ளனர்.

 

பசுமை பூங்கா மேயர் ஆய்வு

Print PDF

தினமலர்          06.11.2013

பசுமை பூங்கா மேயர் ஆய்வு

திருச்சி: பசுமை பூங்கா அமையவுள்ள இடத்தை, மேயர் ஜெயா ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில், 5 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த இடத்தை மேயர் ஜெயா ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

மூலிகைச் செடிகள், தியான மண்டபம், சிறிய அளவில் விலங்கியல் பூங்கா, ஏழு உலக அதிசயங்களின் மாதிரிகள், சிறுவர் ரயில் ஆகியவை அமைக்க ஏற்பாடு செய்யுமாறு, அதிகாரிகளை மேயர் ஜெயா வலியுறுத்தினார்.

 

கோழிக்கழிவை அகற்ற தனியாருடன் ஒப்பந்தம் : கோவை மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர்          06.11.2013

கோழிக்கழிவை அகற்ற தனியாருடன் ஒப்பந்தம் : கோவை மாநகராட்சி திட்டம்

கோவை: கோழி இறைச்சி கழிவுகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முறை நேற்று துவங்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கோழி இறைச்சி கடைகள் உள்ளன. பொதுச் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும், கோழி இறைச்சி கடைகளின் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. மேலும், கோழி இறைச்சிக் கடைகளில் இருந்து, கழிவுகளை ரோட்டோரத்திலும், குப்பை தொட்டிகளிலும் கொட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான வாகனத்தை, மேயர் வேலுசாமி நேற்று இயக்கி வைத்தார். கோவையில் தினமும் 5 முதல் 6 டன் வரையும், திங்கட்கிழமையில் 11 - 12 டன்னும் சேகரமாகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், துர்நாற்றம் ஏற்படுவதுடன், ஈ தொல்லை அதிகரிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பழநியிலுள்ள தனியார் நிறுவனத்தினர் கோழி இறைச்சி கழிவுகளை எடுத்து சென்று, இயற்கை உரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். கோழி இறைச்சி கழிவுகளை எடுப்பதற்கு, தனியார் நிறுவனத்துக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

கழிவுகளை தனியாக சேகரித்து ஒப்படைப்பதற்கு, மாநகராட்சிக்கும் அவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைகளுக்கு "சீல்'

"கோழி இறைச்சி கடைகள் உரிமம் பெறாமல் செயல்படுகின்றன. இறைச்சி கழிவுகளை ரோட்டோரத்திலும், குப்பை தொட்டியிலும் கொட்டி விடுகின்றனர். ஒவ்வொரு வார்டிலும், தனிக்குழு மூலம் கோழி இறைச்சி கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, அறிவுறுத்தப்படுகிறது. மாநகராட்சி எச்சரிக்கையை மீறி, இறைச்சி கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால், கடைகளுக்கு "சீல்' வைக்கப்படும்' என, மேயர் வேலுச்சாமி தெரிவித்தார்.

 


Page 75 of 506