Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வீடுகளில் ஆய்வு நடத்தி கையெழுத்து வாங்கி வந்தால்தான் மலேரியா தொழிலாளருக்கு சம்பளம்

Print PDF

தினகரன்         04.11.2013

வீடுகளில் ஆய்வு நடத்தி கையெழுத்து வாங்கி வந்தால்தான் மலேரியா தொழிலாளருக்கு சம்பளம்

சென்னை, : வீடுகளில் ஆய்வு செய்து, கையெழுத்து வாங்கி வந்தால்தான் மலேரியா தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

மேயர் சைதை துரைசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

மாநகரத்தில் 236 மருத்துவமனைகளிலிருந்து அறிக்கைகள் பெறப்பட்டு நோயாளிகளின் எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. மேலும், மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, சென்னையில் உள்ள 17 லட்சம் வீடுகள் 3200 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிறு வட்டமும் சுமார் 500 வீடுகளை கொண்டது. ஒவ்வொரு சிறு வட்டத்திற்கும் அனைத்து கொசு தடுப்பு வேலைகளை செய்ய ஒரு மலேரியா தொழிலாளி நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் சுமார் 80 ஆயிரம் வீடுகள் இப்பணியாளர்களால் ஆய்வு செய்யப்படும்.

ஆய்வு செய்யும் பணியாளர்கள் வீடுகளில் உள்ளவர்களிடம் ஆய்வு செய்த தற்கான கையெழுத்தை வாங்க வேண்டும். கையெழுத்து வாங்கினால்தான் அந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மாநகராட்சியின் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் டெங்கு மற்றும் கொசுவினால் பரவும் நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிங் நோய் தடுப்பு மருத்துவ நிலையத்துடன் இணைந்து டெங்கு நோய்க்கான பரிசோதனை முடிவுகளை அன்று மாலையே தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

பேரூராட்சிகளின் தணிக்கை தடைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் செயல் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

Print PDF

தினத்தந்தி            02.11.2013

பேரூராட்சிகளின் தணிக்கை தடைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் செயல் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பேரூராட்சிகளின் தணிக்கை தடைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று செயல் அதிகாரிகளுக்கு கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

பேரூராட்சிகள் துறையின் சார்பில் பேரூராட்சிகளில் நீண்ட காலங்களாக நிலுவையில் உள்ள தணிக்கை தடைகளை நீக்குவது தொடர்பான உயர்மட்ட குழுவின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மண்டல இணை இயக்குனர் (பேரூராட்சிகள்) ரத்தினவேல், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) (பொறுப்பு) கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சிகளில் நிலுவையிலுள்ள தணிக்கை தடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளின் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் பேரூராட் சிகளில் நீண்ட நாட்களாக உள்ள தணிக்கை தடைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

தணிக்கை தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி செயல் அதிகாரிகளுக்கு கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

 

மாடுகளை சாலையில் திரியவிட்டால் அபராதம்

Print PDF

தினமணி             02.11.2013

மாடுகளை சாலையில் திரியவிட்டால் அபராதம்

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாலாஜாவில் நடந்த நகராட்சி கூட்டத்தில் அதன் தலைவர் வேதகிரி தெரிவித்தார்.

வாலாஜா நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் வேதகிரி தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம்:

சரஸ்வதி மணி (காங்கிரஸ்): வாலாஜா நகரில் சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த வாரம் பஜார் வீதியில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தள்ளியதில் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் பலரும் காயம் அடைந்துள்ளனர் என்றார். இதே கருத்தை அதிமுகவை சேர்ந்த சையத் உஸ்மானும் வலியுறுத்தினார்.

இர்பான் (திமுக): வாலாஜா பஜார் வீதியில் பிளாட்பார கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுவதோடு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தலைவர் வேதகிரி: தீபாவளி பண்டிகை முடிந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் சாலைகளில் மாடுகளை திரியவிடும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் முரளி, அசோகன், ஆனந்தன், ரவி, ரங்கநாதன், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். துணைத்தலைவர் மூர்த்தி, ஆணையாளர் (பொறுப்பு) ஆனந்தஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 77 of 506