Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சியில் நுழைய "டோக்கன்'

Print PDF
தினமலர்            07.10.2013

மாநகராட்சியில் நுழைய "டோக்கன்'


மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு வருவோருக்கு "டோக்கன்' வழங்கும் முறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அமைச்சர் செல்லூர் ராஜூ, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., அண்ணாத்துரை, உயிருடன் இருக்கும் போது, இறந்ததாக மாநகராட்சியின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது தொடர்பாக, தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் ஜீவன் ரமேஷ், இடைத்தரகர் பத்மநாபன், ஒப்பந்த பணியாளர் பரங்கிரிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் பெற்றவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வழங்கியவர்கள் மீது, இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மாநகராட்சி அலுவலகம் வருவோரை, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கியது.

உள்ளே நுழைபவர்களின் விபரங்களை பதிவு செய்த பின், அவர்களுக்கு "டோக்கன்' வழங்கப்படுகிறது. அதைக் கொண்டு, சம்மந்தப்பட்ட பிரிவை நாடலாம். இது வரவேற்கக்கூடிய நடவடிக்கை என்றாலும், பாரபட்சம் இல்லாமல் கடைபிடிக்க வேண்டும். நேற்று கட்சியினர் பலர், "டோக்கன்' இல்லாமலேயே, மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதை சரிசெய்ய, கமிஷனர் நந்தகோபால் முன்வரவேண்டும்.
நாகராஜ் குழப்பம் தீர்ந்தது:

அமைச்சருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய புகாரை விசாரித்த "சைபர் கிரைம்' போலீசார், விண்ணப்பித்தவரின் பெயரை "நாகராஜன்' என கண்டறிந்தனர். மாநகராட்சியின் தினக்கூலி பணியாளர் நாகராஜன் விண்ணப்பித்திருக்கலாம் என, "சைபர் கிரைம்' போலீசார் சந்தேகிப்பதாக, தகவல் வெளியானது. பின் விசாரணையில், நாகராஜன் என்ற பெயரை போலியாக பயன்படுத்தி, சான்றிதழ் பெற்றுள்ள விபரம் தெரியவந்துள்ளது. (பணியாளர் நாகராஜனுக்கு இதில் தொடர்பில்லை). அதன்பிறகே மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
 

மாநகராட்சிக்கு வரி செலுத்தாவிட்டால் "ஜப்தி'

Print PDF

தினமணி           04.10.2013

மாநகராட்சிக்கு வரி செலுத்தாவிட்டால் "ஜப்தி'

திருநெல்வேலி மண்டலத்துக்கு உள்பட்ட மாநகராட்சிக்கு வரி செலுத்தும் நபர்கள் 2013-14 ஆம் ஆண்டுக்கான வரியை செலுத்தாவிட்டால் மாநகராட்சி ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடும் என உதவி ஆணையர் (பொறுப்பு) து. கருப்பசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் கூறியது:மாநகராட்சியின் திருநெல்வேலி மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போர் தங்களது சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, புதைசாக்கடை சேவைக் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் அக்.15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

பலரும் தங்களது சொத்துகளுக்குரிய வரியினங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்கள் உடனடியாக அந்தந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி சேவை மையங்களை அணுகி வரிகளை செலுத்த வேண்டும். வரி நிலுவை வைத்திருப்போரது குடிநீர் இணப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக ஜப்தி நடவடிக்கையிலும் மாநகராட்சி ஈடுபடவுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள வரி இனங்களை உடன் செலுத்த வேண்டும். இல்லையெனில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி, சொத்துகளுக்கு சீல் வைத்தல் மூலம் வரி வசூலிக்க நேரிடும். எனவே, திருநெல்வேலி மண்டலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் உதவி ஆணையர் து. கருப்பசாமி.

 

மதுரை மாநகராட்சி பிறப்புச் சான்றிதழ் பிரிவில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி           04.10.2013

மதுரை மாநகராட்சி பிறப்புச் சான்றிதழ் பிரிவில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை

மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பிரிவில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைத் தொடர்ந்து தனியார் ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், நிரந்தர ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.

   இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை கூறியது: மாநகராட்சி சுகாதாரத் துறையில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பிரிவில் அமைச்சர், எம்எல்ஏ பெயரில் முறைகேடாக இறப்புச் சான்றிதழ் வழங்கியது துரதிஷ்டவசமானது. இந்த முறைகேடுகள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அதேசமயம், இப்பிரிவில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான கணினி மென்பொருள் மற்றும் ரகசியக் குறியீட்டை முறைகேடாகப் பயன்படுத்தி போலியாக சான்றிதழ் வழங்கிய விவகாரம் குறித்து, நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. இக்குழுவின் முதல்கட்ட அறிக்கையை ஏற்கெனவே சமர்ப்பித்து விட்டனர். தொடர்ந்து ஆய்வு நடத்தி வரும் குழுவினர் விரைவில் முறைகேடுகள் நடைபெற்று வந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, நிவர்த்தி செய்யும் ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தரவுள்ளனர்.

   இந்த அறிக்கை பெறப்பட்டவுடன் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கும் பிரிவில் புதிய கணினி மென்பொருளை உருவாக்கி, முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் ரகசிய குறியீடுகள் மூலம் இயக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இப்பிரிவு மட்டுமின்றி மாநகராட்சியில் வருவாய்த் துறை, கணக்குப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் உள்ள தனியார் கணினி ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   இப்பிரிவுகளில் மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். முதல்கட்டமாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   மாநகராட்சி மைய அலுவலகத்தில் தேவையற்றவர்களின் நடமாட்டத்தை ஒழிக்க மேயர் பாலம், மைய அலுவலகத்தின் முக்கிய நுழைவு வாயில் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள பாதை ஆகியவை வியாழக்கிழமை முதல் அடைக்கப்பட்டுள்ளன.

    இனி, தகவல் மையம் வழியாக மட்டுமே பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மைய அலுவலகத்துக்குள் வரமுடியும். இதற்கு ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.

   மேலும், மேயர் அலுவலகம், ஆணையர் அலுவலகம், தகவல் மைய நுழைவு வாயில், முதனமை நகரமைப்புப் பிரிவு, பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்கும் பிரிவு, ஜேஎன்ஆர்எம்யு அலுவலகம், நகரப்பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும் என்றார்.

 


Page 95 of 506