Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அம்மா உணவகங்களில் சப்பாத்தி இயந்திரங்கள் அக்டோபர் 15-க்குள் பொருத்த உத்தரவு

Print PDF

தினமணி             27.09.2013

அம்மா உணவகங்களில் சப்பாத்தி இயந்திரங்கள் அக்டோபர் 15-க்குள் பொருத்த உத்தரவு

சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பொருத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒரு அம்மா உணவகம் என்ற ரீதியில் 200 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் குறைந்த விலையில் இட்லி, பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பார் சாதம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாலை வேளைகளில் குறைந்த விலையில் சப்பாத்தி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனடிப்படையில் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை கொள்முதல் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மண்டலத்துக்கு ஒன்று என 15 இயந்திரங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஒரு இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் சுமார் 3,000 சப்பாத்திகள் தயாரிக்க முடியும்.

இதன் ஒரு பகுதியாக கோபாலபுரத்தில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் ஒரு மணிநேரத்தில் 200 சப்பாத்திகள் தயாரிக்கும் வகையிலான இயந்திரம் நிறுவப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.செப்டம்பர் மாதத்துக்குள் சப்பாத்திகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயந்திரங்கள் பொருத்த தாமதமானதால் வழங்கப்படவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை பொருத்த கால தாமதம் ஆகியுள்ளது. எனவே, இயந்திரங்களை கொள்முதல் செய்து உடனடியாக நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் 15 மண்டலங்களிலும் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை நிறுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பாதாள சாக்கடை இணைப்பு பெறாவிட்டால் அபராதம்: திருச்சி மாநகராட்சி முடிவுக்கு மாமன்றம் ஒப்புதல்

Print PDF

தினமலர்           27.09.2013

பாதாள சாக்கடை இணைப்பு பெறாவிட்டால் அபராதம்: திருச்சி மாநகராட்சி முடிவுக்கு மாமன்றம் ஒப்புதல்

திருச்சி: "பாதாள சாக்கடை இணைப்பு பெறாவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும்' என்ற திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் திட்டத்திற்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரம் மற்றும் சாதாரண கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்தார். கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மனித கழிவுகள் நேரடியாக மழைநீர் வடிகாலில் விடுவதால், அதை தடுக்கும் வகையில், பாதாள சாக்கடை கட்டமைப்பு வசதி உள்ள பகுதிகளில், இணைப்பு பெறாவிட்டால் ஐந்தாயிரம் ரூபாய அபராதம் விதிக்க வேண்டும் என்ற பொருள் விவாதத்திற்கு வந்தது.

இதன் மீது தி.மு.க., கவுன்சிலர்கள் பேசுகையில், ""ஏற்கனவே உள்ள இணைப்புகளுக்கு ஏற்ப பாதாள சாக்கடை திட்டத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் அளவு சிறியதாக இருப்பதால், ஆங்காங்கே அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவு நீர் ஓடுகிறது. அடைப்பை சரி செய்ய நான்கு நாட்கள் வரை ஆகிறது. இந்த சமயத்தில் வீடுகளில் இருந்து கழிவு நீரை மழை நீர் வடிகாலில் தான் விட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கழிவுகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், அபராதம் தொகை அதிகமாக உள்ளது. மேலும், இணைப்பு பெறுவதற்கான காலகெடுவை அதிகரிக்க வேண்டும்,'' என்றனர்.

இதற்கு கமிஷனர் பதில் கூறுகையில்,"" மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதால் பிரச்னை ஏற்படுகிறது. அதனால் தான் மழைநீர் வடிகாலில் கழிவுகளை விடாமல் தடுக்கவும், செப்டிக் டேங்க்களில் இருந்தும் நேரடியாக விடாமல் தடுக்கவும் தான், பாதாள சாக்கடை இணைப்பு பெற வலியுறுத்தப்படுகிறது. அபராதம் என்பது அச்சுறுத்துவதற்காகவே, தவிர அதில் தீவிரம் காட்டப்பட மாட்டாது. பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை, தினமும் வழக்கமாக மேற்கொள்ளும் வகையில் 50 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்படவுள்ளது,'' என்றார்.

நகர பொறியாளர் சந்திரன் பேசுகையில், ""பாதாள சாக்கடை திட்டத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் அளவு சிறியதாக இருப்பதால் உடைப்புகள் ஏற்படுகிறது. இந்த பகுதிகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும் போது, உடைப்பு ஏற்படும் பகுதிகளில் டூப்ளிகேட் குழாய்கள் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது,'' என்றார்.

இதையடுத்து, அபராதத் தொகை மூன்றாயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் இதை அமல்படுத்த வேண்டும் என திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேறியது.

பாதாள சாக்கடை வசதி உள்ள மற்றும் இல்லாத பகுதிகளில் செப்டிக் டேங்குகளில் இருந்து மழைநீர் வடிகாலில் கழிவுகளை விட்டால் முதல் முறை 250 ரூபாய் அபராதமும், அதன் பிறகு ஆயிரம் ரூபாய் அபராதமும் சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த 61 முதல் 65வது வார்டுகள் மற்றும் ஏற்கனவே உள்ள வார்டுகளில் என மொத்தம் 198 இடங்களில் குடிநீர் வழங்க தனியார் லாரிகளை வாடகைக்கு அமர்த்தும் தீர்மானத்திற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து புதிதாக இணைந்த வார்டுகளுக்கு மட்டும் தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

காந்திமார்க்கெட் எதிரில் இடையூறு 8 கடை அகற்ற மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்           27.09.2013

காந்திமார்க்கெட் எதிரில் இடையூறு 8 கடை அகற்ற மாநகராட்சி முடிவு

திருச்சி: திருச்சி காந்திமார்கெட் எதிரே உள்ள கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. திருச்சி காந்திமார்கெட் எதிரே மாநகராட்சிக்கு சொந்தமான தகர கூரைகளால் ஆன 12 கடைகள் இருந்தன. இவை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டு வந்தது.

காந்திமார்க்கெட் பிரதான நுழைவு வாயில் எதிரே உள்ள போர் தியாகிகள் நினைவிடத்திற்கு இடையூறாக இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அங்கிருந்த 4 கடைகள் சமீபத்தில் அகற்றப்பட்டது. தற்போது அங்கு 8 கடைகள் உள்ளன. வெல்லமண்டி சாலையில் இருந்து காந்திமார்கெட்டிற்கு திரும்பும் பகுதியில் இந்த கடைகள் அமைந்துள்ளதால் டவுன் பஸ்கள், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமமாக உள்ளது. அதோடு கடைகளுக்கு வருபவர்களின் வாகனங்கள் ரோடில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இந்த கடைகள் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டிற்கு 55 ஆயிரத்து 104 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. எனினும் போக்குவரத்திற்கு இடையூறு இருப்பதால், இந்த 8 கடைகளையும் அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மூன்று மாத கால அவகாச அடிப்படையில் வியாபாரிகளை கடையை காலி செய்ய வலியுறுத்தி விரைவில் நோட்டீஸ் வழங்ப்படவுள்ளது.

 


Page 103 of 506