Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருச்சி நகரில் ரூ.1 லட்சம் புகையிலை பொருள் அழிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினகரன்             26.09.2013

திருச்சி நகரில் ரூ.1 லட்சம் புகையிலை பொருள் அழிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திருச்சி, : திருச்சி நகரில் தடை செய்யப்பட்ட ரூ.1லட்சம் மதிப்பிலான புகையிலை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் போன்ற பொருட்கள் விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியிலும் கலெக்டர் ஜெயஸ்ரீ உத்தரவின்பேரில், மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தலைமையில் மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அல்லி ஆகியோர் முன்னிலையில் சுகாதார அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று திருச்சியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், பெரிய கடைவீதி, நடுகுஜிலி தெரு, காந்தி மார்க்கெட் பகுதிகளில் பெட்டி கடைகள், மளிகை கடைகள், மொத்த வியாபாரி குடோன்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ரூ.1லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, புகையிலை, பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பொருட்கள் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.

 

மாநகரில் கட்டுமான கழிவுகளை கொட்ட 17 இடம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன்             26.09.2013

மாநகரில் கட்டுமான கழிவுகளை கொட்ட 17 இடம் ஒதுக்கீடு

கோவை: கோவை மாநகரில் கட்டுமான கழிவுகளை கொட்ட 17 இடங்களை ஒதுக்கீடு செய்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சி எல்லைக்குள் தனி நபர்கள், கட்டுமான உரிமையாளர்கள், அரசுத்துறையை சேர்ந்தவர்கள் பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும்போது, அதை முறையாக அகற்றாமல், சாலையோரம் ஆங்காங்கே கொட்டிவிடுகின்றனர்.

இது, வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அத்துடன், கால்வாய்களில் அடைப்பு ஏற்படுத்துகிறது. இதை தவிர்ப்பதற்காக மாநகர எல்லைக்குள் மத்திய மண்டலம் தவிர இதர நான்கு மண்டல எல்லைக்குள் கட்டுமான கழிவுகளை கொட்ட 17 இடங்களை ஒதுக்கீடு செய்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம்:

‘‘மேற்கண்ட இடங்களை தவிர வேறு எந்த இடங்களிலும் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் கட்டட இடிபாடுகளை கொட்டக்கூடாது.

மீறி கொட்டும் பட்சத்தில் கட்டட உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், அவர்களது சொந்த செலவில் கட்டட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‘‘ என கோவை மாநகராட்சி கமிஷனர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கௌண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி            26.09.2013 

கௌண்டன்யா ஆற்றில்  ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

குடியாத்தம் கௌன்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

 ஆந்திர மாநிலம் புங்கனூரில் தொடங்கி, குடியாத்தம் அருகேயுள்ள பசுமாத்தூர் வரை சுமார் 60 கி.மீ. நீளம் உள்ளது கௌன்டன்யா ஆறு. குடியாத்தம், கே.வி. குப்பம் பகுதிகளின் முக்கிய நீராதாரமாக இந்த ஆறு விளங்குகிறது. இதன் குறுக்கே தமிழக, ஆந்திர மாநிலங்களின் எல்லையான மோர்தானா கிராமத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து, சுமார் 25 கிமீ தொலைவில் பசுமாத்தூர் அருகே இந்த ஆறு, பாலாற்றில் கலக்கிறது.

 கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆற்றில் வெள்ளம் வராததால், குடியாத்தம் நகரில் ஆற்றின் இரு பக்கங்களையும் ஆக்கிரமித்து சுமார் 900 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிராமப் பகுதியில், அருகில் நிலம் வைத்துள்ளவர்கள், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நீதிமன்றங்களின் உத்தரவையடுத்து, முதல் கட்டமாக நகர எல்லைக்குள், போடிப்பேட்டையில் தொடங்கி, சுண்ணாம்புபேட்டை வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறையினர் முடிவெடுத்தனர்.

 இதையடுத்து, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற் பொறியாளர் ஜி. முரளிதரன், உதவிப் பொறியாளர் பி. கோபி, பணி ஆய்வாளர் பி. சிவாஜி, வட்டாட்சியர் எம். கஜேந்திரன், நகராட்சி ஆணையர் ஜி. உமாமகேஸ்வரி, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், நகரமைப்பு ஆய்வாளர் ஆர். நளினாதேவி, நகர அளவர் (சர்வேயர்) திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர்கள் மோகன், அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் தரணி உள்ளிட்டோர் தாழையாத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை அளவீடு செய்யும் பணியைத் தொடங்கினர்.

 இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும், நோட்டீஸ் பெற்றுக் கொண்ட 21 நாள்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்கள், தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும் பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 


Page 104 of 506