Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மடிப்பாக்கத்தில் விதிமீறல்: கட்டடத்துக்கு சீல்

Print PDF

தினமணி             03.09.2013

மடிப்பாக்கத்தில் விதிமீறல்: கட்டடத்துக்கு சீல்

மடிப்பாக்கத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) அதிகாரிகள் திங்கள்கிழமை (செப்.2) சீல் வைத்தனர்.

இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்ட செய்தி: மனை எண் 920 மற்றும் 921, பஜார் ரோடு, ராம் நகர் விரிவாக்கம், மடிப்பாக்கம் என்ற முகவரியில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 3 குடியிருப்புகளைக் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக, அதன் உரிமையாளர் தரைத் தளம் மற்றும் முதல் தளங்களை வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தியுள்ளார். மேலும் அனுமதியின்றி இரண்டாம் தளத்தையும் கட்டி வருகிறார்.

விதிகளுக்குப் புறம்பாக உள்ள அந்தக் கட்டடத்தை மாற்றியமைக்குமாறு சி.எம்.டி.ஏ தரப்பிலிருந்து அதன் உரிமையாளருக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டது.

ஆனால் அறிவிக்கை கிடைத்த பின்னரும் கட்டடத்தை மாற்றியமைக்காமல், அதனை வணிகப் பயன்பாட்டுக்காகவே உபயோகப்படுத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து திங்கள்கிழமையன்று சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அந்தக் கட்டடத்தை பூட்டி சீல் வைத்தனர்.

 

ரூ.37லட்சத்தில் 45 இடங்களில் ஏர்வால்வு பொருத்த முடிவு

Print PDF

தினகரன்              03.09.2013

ரூ.37லட்சத்தில் 45 இடங்களில் ஏர்வால்வு பொருத்த முடிவு

பொள்ளாச்சி நகரில், அழுத்தம் தாங்க முடியாமல் தண்ணீர் வெளியேறுவதால் தண்ணீர் அதிகளவு விரயமாகிறது. இதை தடுக்க 45 இடங்களில் ஏர்வால்வு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் பிரதான குழாய்கள் மூலம், நகராட்சிக்குட்பட்ட வெங் கடேசா காலனி, ஜோதிநகர், டி.கோட்டாம்பட்டி, ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்தேக்க பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேல்நிலைதொட்டிகளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், மேல்நிலை தொட்டியிலிருந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. குழாய் உடைப்பால் தண்ணீர் அதிகளவு விரயமாகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட இடங்களில், அடுத்தடுத்து குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உடைப்பு ஏற்படும் குழாயை சீரமைக்க நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும், மீண்டும் அதே பகுதியில் உடைப்பு எற்பட்டு தண்ணீர் விரயமாகிறது.

உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி சரியில்லாததால், குடிநீர் குழாய் அடுத்தடுத்து உடைப்பு ஏற்படுகிறது. குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாவதை முழுமையாக தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க, முக்கிய இடங்களில் ஏர்வால்வு பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெங்கடேசா காலனி, கோவை ரோடு, எஸ்.எஸ்.கோயில் வீதி, மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 45 இடங்களில் ஏர்வால்வு பொருத்தப்படுகிறது. அதுபோல் தாழ்வான இடத்தில் கவர்வால்வு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு அரசு மானியமாக ரூ.37லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் டென்டர் விடப்பட்டு ஏர்வால்வு மற்றும் கவர்வால்வு பொருத்தும் பணி துவங்கும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இறைச்சி கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு

Print PDF

தினகரன்              03.09.2013

இறைச்சி கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு

பொள்ளாச்சி: நகரில் இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள், அதிகாரிகள் கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சப்கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜெகடே தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகரில் மார்க்கெட் ரோடு, நேதாஜி ரோடு, நியூஸ்கீம் ரோடு, பல்லடம் ரோடு, கோட்டூர்ரோடு, திருநீலர்கண்டர் வீதி உள்ளிட்ட பல இடங்களில் ஆடு, கோழி, மாடு மற்றும் பன்றி இறைச்சி கடைகள் என மொத்தம் 87 உரிமம் பெற்ற கடைகள் உள்ளன.

இதில், பெரும்பாலான கடைகளில் திறந்த வெளியிலேயே இறைச்சிகளை தொங்க விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோயில், பள்ளிக்கூடங்கள் அருகேயே இறைச்சி கடைகள் அமைந்துள்ளன. இறைச்சி கடைகளில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரம் சீர்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்த கடைகளை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து இறைச்சிக்கடைகள் எவ்வாறு அமைய வேண்டும், அதற்குண்டான விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சப்கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

சப்கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜெகடே தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், கோவை உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ அலுவலர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், சப்கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜெகடே கூறுகையில்,‘நகராட்சிக்குபட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகள் திறந்த வெளியிலேயே அமைந்துள்ளதாகவும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுகிறது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், மாட்டு இறைச்சி கடைகளை ஒருங்கே அமைக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனினும் தற்போது, இறைச்சி வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை அறிவுறுத்தப்படுகிறது. இதை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இறைச்சி கடைகள் திறந்த வெளியில் இல்லாமல் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட வேண்டும். இறைச்சி தொங்கவிட துருபிடிக்கும் இரும்பை பயன்படுத்தாமல், ஸ்டென்லஸ் ஸ்டீல் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக இறைச்சி கடை வைத்திருப்பவர்கள் தடையில்லா சான்று பெற வேண்டும். அனுமதியின்றி இறைச்சி கடை வைக்க கூடாது. நகராட்சி எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். இறைச்சி வியாபாரிகளுக்கு விடுக்கப்படும் விதிமுறைகளை கடைபிடித்து, 3 வாரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

 


Page 113 of 506