Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஈரோடு மாநகராட்சியில் தெருவிளக்குகள் பராமரிக்கும் திட்டம்: மேயர் மல்லிகா தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி               22.08.2013

ஈரோடு மாநகராட்சியில் தெருவிளக்குகள் பராமரிக்கும் திட்டம்: மேயர் மல்லிகா தொடங்கி வைத்தார்

 

 

 

 

 

ஈரோடு மாநகராட்சியில் தனியார் பங்களிப்புடன் தெருவிளக்குகள் பராமரிக்கும் திட்டத்தை மேயர் மல்லிகா பரமசிவம் தொடங்கி வைத்தார்.

தெருவிளக்குகள் பராமரிப்பு

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெருவிளக்குகள் அமைத்து பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக தெருவிளக்குகளை தனியார் பங்களிப்புடன் பராமரிப்பு செய்ய ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு 10 ஆண்டுகள் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளது.

மேயர் தொடங்கி வைத்தார்

இந்த திட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை பிரப் ரோட்டில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஈரோடு ஆணையாளர் விஜயலட்சுமி, செயற்பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கலந்து கொண்டு தனியார் பங்களிப்புடன் தெருவிளக்குகள் பராமரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனா பழனிச்சாமி, உதவி ஆணையாளர் அசோக்குமார், கவுன்சிலர் ராதாமணிபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.18¾ கோடி

இந்த திட்டத்துக்காக மாநகராட்சி மூலம் ரூ.18 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக கோவை தனியார் நிறுவனத்தினர் மாநகராட்சி முழுவதும் தெருவிளக்குகளின் தேவை, தற்போதைய விளக்குகளின் வெளிச்சம், மின்சக்தி செலவு, புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் போன்ற விவரங்களை சேகரிக்க உள்ளனர். இந்த தணிக்கை பணி 3 மாதங்கள் நடைபெறும். தணிக்கையின் அடிப்படையில் 2–வது கட்ட பணிகள் தொடங்கும். குறிப்பாக 40 வாட்ஸ் குழல் விளக்குகளுக்கு (டியூப் லைட்) பதில் எல்.ஈ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. மின் அழுத்த கட்டுப்பாட்டு கருவி, தெருவிளக்கு கட்டுப்பாட்டு கருவி ஆகியவை புதிதாக பொருத்தப்பட உள்ளன. தனித்தனி விளக்கு ஆய்வு கருவிகளும் பொருத்தப்பட உள்ளன. தெருவிளக்குகள் எரிவதை கண்காணிக்க கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.

மேற்கண்ட திட்டங்கள் மூலம் ஈரோடு மாநகராட்சியில் தெருவிளக்கு சேவையை மேம்படுத்தவும் மின்சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படவும் உள்ளன.

 

கால்வாய்கள், குளங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி               22.08.2013

கால்வாய்கள், குளங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை 

 

 

 

 

 

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய்கள், குளங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சி.சமயமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

சுகாதார கேடு

நெல்லை மாநகராட்சிக்குள் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் குளங்களில் ஆங்காங்கே பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்களால் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை அவ்வப்போது காண நேரிடுகிறது.

இது ஒரு தவறான மற்றும் சுகாதார கேடான செயல் ஆகும். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள், வெள்ளக்காலங்களில் மழைநீர் செல்லும் வழியை அடைத்துக் கொண்டு வெள்ளச்சேதம் ஏற்படவும், குப்பைகள் மழைநீரில் நனைவதால் துர்நாற்றம் ஏற்பட்டு, பல்வேறு விதமான சுகாதார கேடுகள் ஏற்படவும் காரணமாகிறது.

நடவடிக்கை

எனவே இதுபோன்று தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் குளங்களில் குப்பைகளை கொட்டுவதை பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் குப்பைகளை அருகாமையில் உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதை மீறும் பட்சத்தில் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் நெல்லை மாவட்ட கலெக்டர் சி.சமயமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
 

மக்களைத் தேடி மாநகராட்சி முகாம்: மனுக்கள் மீது 7 நாள்களில் தீர்வு

Print PDF

தினமணி            21.08.2013

மக்களைத் தேடி மாநகராட்சி முகாம்: மனுக்கள் மீது 7 நாள்களில் தீர்வு

மதுரை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மக்களைத் தேடி மாநகராட்சி முகாமில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களில் சில மனுக்கள் மீது உடனடியாகவும், பிற மனுக்கள் மீது 7 நாள்களிலும் தீர்வு காணப்படும் என ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்தார்.

மதுரை கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி சார்பில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண் 50 முதல் 74-வது வார்டு வரையில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய மனுக்களை மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர் ஆர்.நந்தகோபால் ஆகியோரிடம் வழங்கினர்.

 இம் மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்து பேசியது: மதுரை மாநகராட்சி பகுதியில் முடிந்தளவு குடிநீர்ப் பிரச்னை தலைதூக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகத்திலுள்ள மற்ற மாநகராட்சிகளை விட மதுரை மாநகருக்கு முதல்வர் தனிக்கவனம் செலுத்தி கூடுதல் நிதிகளை ஒதுக்கி வருகிறார்.

 இதன் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் கிடைத்து வருகின்றன. இம்மாநகராட்சி பகுதியை சுகாதாரமாக பராமரிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

குப்பைகள் எங்கும் தேங்கிவிடாதவாறு தினமும் அகற்றப்பட்டு, வாகனங்கள் மூலம் வெள்ளைக்கல் குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குப்பைகளை மாநகராட்சி குப்பைத் தொட்டிகளிலோ, தெருக்களில் குப்பை வாகனங்களுடன் வரும் சுகாதாரப் பணியாளர்களிடமும் குப்பைகளை கொடுத்து, தெருக்களில் குப்பைகள் கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், என்றார்.,

முகாமுக்கு முன்னிலை வகித்த ஆணையர் ஆர்.நந்தகோபால் பேசியது: மண்டலம் வாரியாக பொதுமக்களின் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றுவதற்கு மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் நடைபெற்று வருகிறது. முதல்சுற்று முடிந்து தற்போது 2-வது சுற்று முகாம் துவங்கியுள்ளது. இம்முகாம்களில் கொடுக்கப்படும் அனைத்து மனுக்களுக்கும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரி பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு உரிய ஆவணங்களுடன் கொடுத்தால், முகாமிலேயே தீர்வு காணப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். சில கோரிக்கைகள் மீதான மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்சமாக 7 நாள்களுக்குள் தீர்வு காணப்படும், என்றார்.

முகாமில் 38 பேருக்கு நகர்ப்புற அடிப்படை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.11.55 லட்சத்துக்கான காசோலைகளும், 6 பேருக்கு கட்டட வரைபட அனுமதியும், ஒருவருக்கு சொத்து வரி பெயர் மாற்ற உத்தரவும் வழங்கப்பட்டது.

முகாமில் துணை ஆணையர் (பொறுப்பு) சின்னம்மாள், நகர்நல அலுவலர் யசோதாமணி, கல்வி அலுவலர் மதியழகராஜ், பிஆர்ஓ சித்திரவேல், வரிவிதிப்புக் குழுத் தலைவர் ஜெயபாலன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணன், காதர் அம்மாள், நூர்முகம்மது, விஜயராகவன், காமாட்சி, வீரக்குமார், சக்திவேல், காசிராமன், செல்லம், ஜெயக்குமார், தங்கவேல், ஜெகநாதன், சண்முகவள்ளி, குமார், ஜெயகீதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 122 of 506