Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூட சத்துணவுகூடங்களில் அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு

Print PDF

தினத்தந்தி              24.07.2013

ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூட சத்துணவுகூடங்களில் அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு

ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் உள்ள சத்துணவு கூடங்களை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

சத்துணவு

அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, உணவு சமைத்து, குழந்தைகளுக்கு பரிமாறும் முன்பு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர், சமையல் பணியாளர்கள் சாப்பிட வேண்டும் என்றும் அரசு ஆலோசனை வழங்கி உள்ளது.

மேலும், சத்துணவு கூடங்கள் சிறந்த கட்டிடங்களில் உள்ளனவா? சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றனவா? போதிய வசதிகள் உள்ளனவா? என்பதை சோதனை செய்து அறிக்கை அளிக்கவும் அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதுபோல் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 16 மாநகராட்சி பள்ளிக்கூடங்களிலும் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தலைமையில் மண்டல உதவி ஆணையாளர்கள் சண்முகவடிவு, அசோக்குமார், ரவிச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆணையாளர் விஜயலட்சுமி, உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

தலைமை ஆசிரியர் சாப்பிட்டார்

முன்னதாக உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் அதே பள்ளிக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுமதி மற்றும் சமையல் பணியாளர்கள் சமையல் முடித்து உணவை சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அதைப்பார்த்த அதிகாரிகள், உணவு தரமாக உள்ளதா? என்று தலைமை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் சமையல் அறைக்கு சென்று தயாரிக்கப்பட்ட உணவுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதா என்றும் பார்வையிட்டனர்.

பின்னர் அரசு வழங்கி உள்ள 36 கேள்விகளுக்கு பதில்கள் கேட்டு அறிக்கை தயாரித்தனர். இதுபோல் 16 பள்ளிக்கூடங்களிலும் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினார்கள்.

இதுபற்றி மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி கூறும்போது, ‘மாநகராட்சி பகுதியில் செயல்படும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு கூடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு உணவு சாப்பிடும் முன்னதாக தலைமை ஆசிரியர்கள் சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம்’ என்றார்.

 

ப்ளோ கண்ட்ரோல் வால்வு பொருத்தாவிடில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்

Print PDF

தினமணி              24.07.2013

ப்ளோ கண்ட்ரோல் வால்வு பொருத்தாவிடில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு ப்ளோ கண்ட்ரோல் வால்வு பொருத்தாவிட்டால் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் பி. அனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் வார்டு எண் 19, 26 மற்றும் 27 பகுதிகளுக்கான புதிய குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்து தமிழக முதல்வரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் தங்களது குடிநீர்க் குழாய் இணைப்புகளை புதிதாக அமைக்கப்பட்ட பகிர்மானக் குழாயில் ப்ளோ கண்ட்ரோல் வால்வு அமைப்புடன் குடிநீர்க் குழாய் உப விதிகளின் படி இணைக்க வேண்டும்.

பழைய குழாய்களில் இணைப்பு அமைத்துள்ள இணைப்புதாரர்களும் தங்கள் இணைப்புகளில் ப்ளோ கண்ட்ரோல் வால்வு பொருத்த வேண்டும். எனவே, புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து இணைப்புதாரர்களும் இதற்குரிய கட்டணத்தை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் 15.8.2013-க்குள் செலுத்தி ப்ளோ கண்ட்ரோல் வால்வு பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் குடிநீர்க் குழாய் இணைப்புகளை துண்டிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு உதவி செயற்பொறியாளரை 9442201305, இளநிலைப் பொறியாளரை 9442201334 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

 

மதுரையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் அகற்றப்படும்

Print PDF

தினமணி              24.07.2013

மதுரையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் அகற்றப்படும்

மதுரை மாநகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பழமையான, பழுதடைந்த கட்டடங்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருவதாகவும், இந்தக் கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

கோவில் மாநகரான மதுரை பழமையான மாநகரங்களில் ஒன்றாகும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலைச் சுற்றி மதுரை மாநகரம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு கோவிலைச் சுற்றிலும் அமைந்திருந்த மாநகரம் தற்போது பலமடங்கு விரிவடைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

அதேசமயம், மதுரை மாநகரின் முந்தைய பகுதியான மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றிலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் பல கட்டடங்களில் அப்போதைய முறைப்படி ஸ்திரத்தன்மை இல்லாத வகையில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுபோன்ற கட்டடங்களால் அருகிலுள்ள மற்ற கட்டடங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மாநகராட்சி உறுதியாக இருக்கிறது.

கோவை போன்ற சில மாநகரங்களைப் போன்று பழுதடைந்த கட்டடங்கள் இடிந்து விழுந்து விபத்துகள் ஏற்பட்டதைப் போன்ற துயரச் சம்பவங்கள் மதுரை மாநகரில் நடந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக, நகரமைப்பு பிரிவினர் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுப் பகுதி உள்ளிட்ட முந்தைய மாநகரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் 50 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இவற்றில், நூறு ஆண்டுகளைக் கடந்தும் உறுதியாக நிற்கும் மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மகால் போன்ற பல நூறு கட்டடங்களும் இருக்கின்றன. இந்தக் கட்டடங்கள் தவிர்த்து, பழுதடைந்த கட்டடங்கள் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. சப்பாணி கோவில் தெரு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இதுவரை 50 கட்டடங்கள் பழுதடைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்புப் பணி முடிந்தவுடன், பழுதடைந்த கட்டட உரிமையாளர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து நோட்டீஸ் கொடுக்கப்படும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் உரிமையாளர்கள் பழுதடைந்த கட்டடங்களை அப்புறப்படுத்தாத பட்சத்தில், மாநகராட்சி மூலம் அந்த கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்படும். இதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்படும்.    ஏற்கெனவே, மாநகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலக் கெடு வழங்கப்பட்டது. சிலர் தவிர்த்து பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருக்கின்றன.

 குறிப்பாக, பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள மேலவாசல், சுப்பிரமணியபுரம் பாலத்துக்குக் கீழ் ஏராளமான ஆக்கிரமிப்பு மரக் கடைகளும், இரும்புக் கடைகளும் அப்படியே இருக்கின்றன. ஆக்கிரமிப்புகள் தயவு தாட்சண்யம் இன்றி விரைவில் அகற்றப்படும் என்றார்.   பேட்டியின்போது, நகரப் பொறியாளர் (பொறுப்பு) அ.மதுரம், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி நகரமைப்பு அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 141 of 506