Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது தனியாரிடம் தெருவிளக்கு பராமரிப்பு

Print PDF
தினகரன்        19.07.2013

மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது தனியாரிடம் தெருவிளக்கு பராமரிப்பு


திருச்சி: திருச்சி மாநகராட்சியில் தெரு விளக்கு பராமரிப்புகளை தனியாரிடம் விடுவது குறித்த தீர்மானம் கடும் விவாதங்களுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளை 10 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து திமுக, மதிமுக, தேமுதிக கவுன்சிலர்கள் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அந்த தீர்மானம் குறித்த விவாதம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் கூட்டம் நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகிக்க, கமிஷனர் தண்ட பாணி, துணைமேயர் மரியம் ஆசிக், கோட்டத் தலைவர்கள் சீனிவாசன், மனோகரன், ஞானசேகரன், லதா, கவுன்சிலர்கள், பொறியாளர்கள், உள் ளிட்ட பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுயேட்சை கவுன்சிலர் வெங்கட்ராஜ் பேசுகையில்,தனியாரிடம் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை விடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏன் அவசரப்படுகின்றது. தனியாரிடம் ஏற்கனவே துப்புரவுப் பணிகளை ஒப்படைத்து அதில் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. அப்படியிருக்க மீண்டும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளையும் தனியாரிடம் விட்டால் அது நன்றாக இருக்காது. அதிலும் 10 ஆண்டுகளுக்கு விடக்கூடாது. அவ்வாறு விட்டால் தனியாரை கட்டுப்படுத்துவது யார்? பொதுமக்கள் தெருவிளக்கு பிரச்னை என்றால் கவுன்சிலர்களைத்தான் கேட்பார்கள். எனவே தனியாரி டம் விடும் முடிவை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

திமுக கவுன்சிலர் அன்பழகன் பேசுகையில், இந்த திட்ட மதிப்பீடு குறித்து முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன, மதிப்பீட்டு தொகையிலும் வித்தியாசம் உள்ளது. அவற்றை சரியாக குறிப்பிட வேண்டும். மேலும் இத்திட்டத்தை தனியாரிடம் விடுவது தேவையற்ற பிரச்னைகளுக்கு வழிகோலும். அப்படி தனியாரிடம் விடும்பட்சத்தில் ஒப்பந்த காலத்தை 10 ஆண்டுகளுக்கு என்பதை மாற்றி ஆண்டுதோறும் ஒப்பந்தம் விடுவது நல்லது. தனியார் பராமரிப்பு என்றால் மாநகராட்சியில் உள்ள எலக்ட்ரீசியன்களின் பணி என்ன? அதிகாரிகளின் பணி என்ன? தனியாரை கட்டுப்படுத்துவது யார்? இத்தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பை கவுன்சிலர்களிடம் விடவேண்டுமே தவிர அவசர அவசரமாக நிறைவேற்றுவது கூடாது என்றார்.

மதிமுக கவுன்சிலர் முஸ்தபா பேசுகையில், 28 ஆயிரம் டியூப் லைட்டுகள் மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டியூப் லைட் பல்பின் விலை ரூ.40. ஆனால் அதற்கு பதிலாக மாற்றப்படும் எல்இடி விளக்குகள் தலா ரூ.6 ஆயிரம் என்றால் இதில் எப்படி மின்சாரம் மற்றும் மின்கட்டண தொகை மிச்சப்படும்? என்றார்.

தனியாருக்கு விடக்கூடாது, என்பது குறித்தும், அப்படி விடுவதால் ஏற்படும் பாதகங்கள் குறித்தும் திமுக, மதிமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

அவற்றுக்கு பதில் அளித்து கமிஷனர் தண்டபாணி பேசுகையில், தனியாருக்கு விடப்படும் திட்டங்களில் சென்னை ஆலந்தூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் ஆசியாவிலேயே முதன்மையானதாகவும், சிறந்தவையாகவும் விளங்கி வருகின்றன. அந்த வகையில்தான் தனியாரிடம் விடப்படும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளும். இதன் மூலம் ஒப்பந்தந்தில் குறிப்பிட்டபடி 35 சதவிகித மின் சிக்கனத்தை காட்டினால்தான் அவர்களுக்கு உரிய ஒப்பந்த தொகை வழங்கப்படும். மேலும் இவற்றை வல்லுனர்கள் குழு மூலம் தீர பரிசீலித்துதான் அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கென எம்பவர் கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக மாநகராட்சி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் தனியார் செயல்பட முடியும். எனவே தெரு விளக்குகள் குறித்து எந்தமாதிரி பிரச்னைகள் என்றாலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருவர். அவர்களிடம் தகவல் தெரிவித்தாலே போதுமானது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காரசாரமான விவாதத்துக்கு பின்னர், தெருவிளக்குகள் தனியார் பராமரிப்புக்கு விடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஏர்காடு அதிமுக எம்எல்ஏ பெருமாள் மறைவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

பழனியில் தரம் குறைந்த 500 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி                   19.07.2013

பழனியில் தரம் குறைந்த 500 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல்

பழனியில் அரசு விதிமுறைகளுக்கு உள்படாத பிளாஸ்டிக் கேரி பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

   கடைகள் மற்றும் உணவகங்களில் 40 மைக்ரானுக்கும் குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் கேரி பைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது என்ற உத்தரவு உள்ளது. ஆனால், பழனி பஸ் நிலையம், அடிவாரம் பகுதிகளில் இதுபோன்ற மைக்ரான் குறைவாக தயாரிக்கப்பட்ட பாலித்தீன் பைகளில் பொருள்கள் விற்பதாக தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் குணசேகரன் தலைமையிலான குழுவினரும், பழனி நகராட்சி ஆணையரின் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் நெடுமாறன், சேகர், ராமசுப்பிரமணி, செந்தில்குமார், மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினரும் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

  பழனி காந்தி மார்க்கெட், காந்தி ரோடு, பஸ் நிலைய வளாகம், அடிவாரம் பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையின்போது ஏராளமான கடைகளில் 40 மைக்ரான்களுக்கும் குறைவான அளவுள்ள கேரி பைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. பல கேரி பைகளில் 40 மைக்ரான் என அச்சிடப்பட்ட நிலையில், அதற்கான தரம் இல்லாததை ஆய்வுக் கருவிகள் மூலம் கண்டறியப்பட்டது.

  சுமார் 500 கிலோ எடையுடைய இந்த கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  இவை அனைத்தும் மாட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி மறுசுழற்சி அல்லது சாலை போடும் பணிக்காக பயன்படுத்தப்படும் என, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

  இம்மாதிரியான பிளாஸ்டிக் கேரி பைகள் கடைகளில் பயன்படுத்தப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படுவது மட்டுமின்றி, அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

குறைதீர் முகாம்

Print PDF

தினகரன்         18.07.2013

குறைதீர் முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் `மக்களை தேடி மாநகராட்சிÕ எனும் குறைதீர்ப்பு முகாம் மண்டலம் தோறும் நடந்து வருகிறது. இன்று மதுரை மேற்கு மண்டலத் தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகா மில் 1 முதல் 24 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கலாம். மேயர் ராஜன்செல்லப்பா தலைமை வகித்து பொது மக்களிடம் மனுக்களை பெற உள்ளார். முகாமில் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

 


Page 142 of 506