Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பூங்காக்கள் அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

Print PDF

தினமணி              10.07.2013

பூங்காக்கள் அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

:தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ரூ. 38 லட்சம் செலவில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை, தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி 49-வது வார்டுக்குள்பட்ட கால்டுவெல் காலனியில் ரூ. 8 லட்சம் செலவில் புதிய பூங்காவும், 44-வது வார்டுக்குள்பட்ட மாசிலாமணிபுரத்தில் ரூ. 20 லட்சம் செலவில் புதிய பூங்காவும் அமைக்கப்படுகின்றன.

சிதம்பரநகரில் இடிந்த சத்துணவுக் கூடத்தை புதிதாக கட்டுவதற்கு ரூ.6 லட்சமும், 48-வது வார்டுக்குள்பட்ட இந்திரா நகரில் ரூ.10 லட்சம் செலவில் பூங்கா, ரூ.5 லட்சம் செலவில் நியாயவிலைக் கடை அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதேபகுதியில் ரூ.10 லட்சம் செலவில் சாலைப்பணிகள் மேற்கொள்ளவும், மில்லர்புரம் 50-வது வார்டு பகுதியில் ரூ.5 லட்சம் செலவில் நியாயவிலைக் கடை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை சி.த. செல்லப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, இந்திரா நகர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து பொதுமக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.

மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் க. சரவணன், மாமன்ற உறுப்பினர் தனம், அதிமுக நிர்வாகிகள் மில்லர்புரம் ராஜா, மூர்த்தி, ஜெகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்றால் கடை உரிமம் ரத்து

Print PDF

தினமணி              10.07.2013

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்றால் கடை உரிமம் ரத்து

குன்னூரில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்றவர்களுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

    மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் விற்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கவலை தெரிவித்திருந்தனர்.

   இதையடுத்து கோட்டாட்சியர் ஏ.செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர், அனைத்து வணிக நிறுவனங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைகளுக்கு ரூ.11 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.   மேலும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

   ஆய்வின்போது கிராம நிர்வாக அதிகாரி கே.செல்வராஜ், குன்னூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால் முருகன், கணேச மூர்த்தி, தண்டபாணி உள்பட பலர் உடனிருந்தனர்.
 

மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க தன்னார்வ அமைப்புகள் அணுகலாம்'

Print PDF

தினமணி              10.07.2013

மாநகராட்சி பூங்காக்களை பராமரிக்க தன்னார்வ அமைப்புகள் அணுகலாம்'

தன்னார்வ அமைப்புகள் மாநகராட்சி பூங்காக்களைப் பராமரிக்க அணுகலாம் என்று மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பூங்காக்களைப் பராமரிப்பது மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் மரம் நட்டுப் பராமரிப்பதில் பொது அமைப்புகளும் பங்கேற்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னிலை வகித்து மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:

மாநகராட்சிப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மரம் நட்டால் சிறப்பானதாக இருக்கும். மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 1,500 பூங்காக்களுக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 60 வார்டுகளில் உள்ள 165 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிப் பகுதியில் பூங்காக்களை அமைக்கவும், தன்னார்வ அமைப்புகள் மூலம் பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடங்களை தனியார் அமைப்புகள் மாநகராட்சி அலுவலர்களை ஒரு வார காலத்தில் அணுகலாம். இப் பூங்காக்களுக்குத் தேவையான தண்ணீர் வசதிகளை மாநகராட்சி வழங்கும்.

பூங்காவை ஏற்றுப் பராமரிப்பது, அமைப்பது ஆகிய பணிகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கும். பூங்கா பராமரிக்கும் அமைப்புகள் அதை தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாகக் கருதக் கூடாது.

அது மக்களின் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஆட்சியர் மு.கருணாகரன் பேசியது:

மாநகராட்சிப் பகுதியில் பூங்காவிற்கென ஒதுக்கப்பட்ட பகுதிகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால், சில இடங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. அந்த இடங்களை ஆக்கிரமிப்பவர்களை வெளியேற்றுவதும் கடினமான காரியமாக இருக்கிறது.

இதுபோன்ற பிரச்னைகள் உருவாகாமல் இருப்பதற்காகவும், அதே சமயம் இந்தப் பகுதிகளை சமூகத்திற்குப் பயனுள்ள வகையிலே கொண்டுவர வேண்டும் என்ற வகையிலும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, மண்டலக் குழுத் தலைவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள், ரோட்டரி சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 148 of 506