Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

உடன்குடி பகுதியில் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF
தினகரன்            09.07.2013

உடன்குடி பகுதியில் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை


உடன்குடி, : உடன்குடி பேரூராட்சி பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் ஊறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வழங்கப்படும் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் இணைத்து குடிநீர் உறிஞ்சுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது சட்ட விரோதமான செயலாகும். பேரூராட்சி பணியாளர்கள் திடீரென வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும்போது குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் இணைத்து குடிநீர் உறிஞ்சுவது கண்டறிப்பட்டால் உடனடியாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்மோட்டார் பறிமுதல் செய்து காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அன்னூர் வாரச்சந்தையில் ‘பிளாஸ்டிக்’ பைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அதிகாரி எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி               08.07.2013

அன்னூர் வாரச்சந்தையில் ‘பிளாஸ்டிக்’ பைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அதிகாரி எச்சரிக்கை

அன்னூரில் உள்ள வாரச்சந்தையில், பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் தலைமையில் துணைத்தலைவர் விஜயகுமார், துப்புறவு மேற்பார்வையாளர் மற்றும் துப்புறவு பணியாளர்கள் 15 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள 40 மைக்ரான் குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பற்றி செயல் அலுவலர் கூறும்போது,‘ அன்னூர் பேரூராட்சி வாரச்சந்தையில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக ரூ.1 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் முதல் முறை ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை ரூ. 2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்படும். 3 முறை பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் ’ என்றார்.
Last Updated on Tuesday, 09 July 2013 10:09
 

திருச்சி மாநகரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு

Print PDF

தினத்தந்தி             05.07.2013

திருச்சி மாநகரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கலெக்டர் நேரில் ஆய்வு

திருச்சி மாநகரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.4 லட்சத்தில்...

வடமேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், திருச்சி மாநகரத்தில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் புல்டோசர்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பொன்மலைப்பட்டி மெயின்ரோட்டில் இருந்து ரெயில்வே மைதானம் வழியாக ஜி கார்னர் வரை செல்லும் வாய்க்கால், ஸ்ரீராம் நகரிலிருந்து ஜிகார்னர் வரை செல்லும் வாய்க்கால், விமான நிலையம் அருகில் இருந்து வி.எம்.டி. ரோடு வரை செல்லும் வாய்க்கால், பொன்னேரி புரத்திலிருந்து முல்லைநகர் வரை செல்லும் வாய்க்கால், கத்தரிக்காய் வாய்க்கால், சோளம்பாறை, தியாகராயநகர் வாய்க்கால் ஆகிய மாநகராட்சிக்குட்பட்ட வாய்க்கால்கள் ரூ.4 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் தூர் வாரப்பட்டு வருகிறது.

கலெக்டர் பார்வையிட்டார்

மேலும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உய்யக்கொண்டான் வாய்க்காலில் உள்ள ஆறுகண் மதகு மற்றும் குடமுருட்டி கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், மழைக்காலத்தில் தண்ணீர் தங்குதடையின்றி செல்லவும், வெள்ள பாதிப்பு ஏற்படா வண்ணம் தடுத்திடவும், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றிட வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, நகரப்பொறியாளர் சந்திரன், பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி ஆணையர் தயாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 149 of 506