Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பாதாள சாக்கடை முடிந்த பகுதிகளில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் மேயர் பேச்சு

Print PDF
தினத்தந்தி             05.07.2013

பாதாள சாக்கடை முடிந்த பகுதிகளில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் மேயர் பேச்சு


கோவையில் பாதாள சாக்கடை முடிந்த பகுதிகளில் சாலை பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் மேயர் பேசினார்.

ஆய்வு கூட்டம்


கோவை மாநகராட்சியில் சாலை மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து துறை அலுவலர்க ளுடன் ஆய்வுக் கூட்டம் மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சி, பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைதுறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுசாமி பேசியதாவது–

கோவை மாநகராட்சியில் 466 கி.மீ நீளத்திற்கு போடப்பட்ட பாதாள சாக்கடை பணிகளில் 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. காந்திபுரம் 100 அடி சாலையில் பாலம் கட்டும்போது நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்தினை குறைப்பதற்கு தக்க திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

லட்சுமி மில்ஸ் சந்திப்பில் பாதாள சாக்கடை பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ராமநாதபுரம் முதல் புலியகுளம் வரை உள்ள சாலை, ராமநாதபுரம், சிங்காநல்லூர் சாலையில் சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும்.

திட்ட அறிக்கை

குறிப்பாக திருச்சி சாலை, அவினாசி சாலை மற்றும் இதர முக்கிய சாலைகளில் சாலையின் இரு புறமும் 1 அடி அல்லது 2 அடி மண் பகுதியாக இருந்தால், அப்பகுதியில் இருக்கின்ற மரங்களுக்கு நீர் செல்லுவதற்கு ஏதுவாக வழிமுறையை வைத்து விட்டு ஏனைய பகுதிகளில் தார்ச்சாலை அமைத்தால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எந்த துறையாக இருந்தாலும் என்ன பணி செய்கிறோம் என்பதை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மாநகராட்சியும் பிற துறையில் செய்கிற பணியை தெரிந்து கொள்வதோடு, எத்தகைய நடவடிக்கைளை எடுக்கலாம் என்று தக்க ஆலோசனைகளை வழங்க முடியும்.

போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினருடன் இணைந்து சாலை நெரிசல் மற்றும் போக்குவரத்துத் துறை எளிதாக்குவதற்கு தேவையான திட்ட அறிக்கையை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் லீலாவதி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டல தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம், பி.சாவித்திரி, மாநகராட்சி பொறியாளர் சுகுமார் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் முருகேசன் வையாபுரி மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் அபராதம்

Print PDF

தினமணி             05.07.2013

குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் அபராதம்

திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் குடிநீர் இணைப்பில், மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் ரூ. 12,500 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

   திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 3,570 குடிநீர் இணைப்புக்கள் உள்ளன. தவிர 97 பொதுக் குழாய்கள் உள்ளன. நகராட்சிக்கு மானூர் குடிநீர் திட்டத்தின்கீழ் தினசரி 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால் 14 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வழங்கப்படுகிறதாம்.

   எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து வியாழக்கிழமை நகர்மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட  கலந்துரையாடல் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

   குடிநீர் இணைப்பு பெற்றிருப்பவர்கள், குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால் ரூ. 12,500 அபராதம் விதிக்கப்படும் என அச்சடித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, அதை பெற்றுக்கொண்டதற்கான கையப்பமும், வீட்டு உரிமையைளரிடம் பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

   ஜூலை 8-ஆம் தேதி முதல் குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்தால், மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.   கூட்டத்தில் நகர்மன்றத் துணைத் தலைவர் பொ. சக்திவேல், பொறியாளர் ராமலிங்கம், பணி மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பயணிகள் நிழற்குடைகள் சீரமைப்பு

Print PDF

தினமணி             05.07.2013

பயணிகள் நிழற்குடைகள் சீரமைப்பு

திருவள்ளூர் ஜே.என்.சாலையில் சிதிலமடைந்திருந்த நிழற்குடைகள், நகராட்சி நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டன.

திருவள்ளூரின் முக்கிய நெடுஞ்சாலையான ஜே.என்.சாலையில் ஸ்டேட் வங்கி, தலைமை தபால் நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகிய பஸ் நிறுத்தங்களில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகள், மேற்கூரை இடிந்து அபாய நிலையில்

இருந்தன. இதுகுறித்து சில தினங்களுக்கு முன் "தினமணி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் துரித நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனை, தலைமை தபால் நிலையம் நிழற்குடைகளை சீரமைத்தனர்.  ஸ்டேட்வங்கி, ஆயில் மில் நிழற்குடைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 


Page 150 of 506