Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விதிமீறல் கட்டடத்துக்கு சீல்

Print PDF

தினமணி             05.07.2013

விதிமீறல் கட்டடத்துக்கு சீல்

சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வியாழக்கிழமை சீல் வைத்தது.

இது குறித்து அந்தக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதரமூர்த்தி தெருவில் விதிமுறை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்தக் கட்டடம் விதிகளை மீறியும், திட்ட அனுமதிக்கு முரணாகவும் கட்டப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட அடித்தளம் (பகுதி), தரைத்தளம், 4-வது தளம் ஆகியவற்றுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

 

புதிய குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி               04.07.2013

புதிய குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு

வந்தவாசி நகராட்சி சார்பில் ரூ.10.90 கோடி செலவில் நடைபெறும் புதிய குடிநீர் திட்டப் பணிகளை வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் நடராஜன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

வந்தவாசி நகராட்சி சார்பில் அனக்காவூரில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம் மூலம் செய்யாற்றிலிருந்து வந்தவாசி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரூ.10.90 கோடி செலவில் மேலும் ஒரு புதிய குடிநீர் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக செய்யாற்றில் 4 உறிஞ்சு கிணறுகள், அனக்காவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டி ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் நடராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ஆய்வின்போது செய்யாற்றில் உறிஞ்சு கிணறு அமைக்கும் பணி நடைபெறும் பகுதிக்கு அருகிலேயே 2 இடங்களில் தனியார் மூலம் போர்வெல் போடப்பட்டு நீர் உறிஞ்சப்படுவதை கண்ட அவர் இதுகுறித்து பொதுப்பணித் துறைக்கு புகார் தெரிவிக்கும்படி வந்தவாசி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஈ.மகாதேவனுக்கு உத்தரவிட்டார்.

வேலூர் மண்டல நகராட்சி பொறியாளர் தீனதயாளன், வந்தவாசி நகர்மன்றத் தலைவர் அப்சர் லியாகத், பணி மேற்பார்வையாளர் அமுதன் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

 

ராமநாதபுரம், சிங்காநல்லூர் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயர்

Print PDF

தினமணி               04.07.2013

ராமநாதபுரம், சிங்காநல்லூர் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயர்

ராமநாதபுரம், சிங்காநல்லூர் சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மேயர் செ.ம. வேலுசாமி வேண்டுகோள் விடுத்தார்.

கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில், மேயர் தலைமையில் அரசுத் துறை அலுவலர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் க.லதா முன்னிலை வகித்தார்.

மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மின் துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில், துறை வாரியாக மேயர் ஆய்வு செய்து பேசியது:

கோவை மாநகரில் சாலைகளைச் சீரமைத்து, போக்குவரத்தை மேம்படுத்தி எளிதாக்குவது நம்முடைய முக்கிய பணி. வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும்  பலமடங்கு அதிகரிக்கிறது. இருக்கும் சாலைகளை வைத்துக் கொண்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கோவை மாநகராட்சியில் 466 கி.மீ. நீளத்திற்கு போடப்பட்ட பாதாள சாக்கடை பணிகளில் 80 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

காந்திபுரத்தில் நாள் ஒன்றுக்கு 7000 முறை பேருந்துகள் இயக்கம் உள்ளது. எனவே 100 அடி சாலையில் நெடுஞ்சாலைத் துறை மூலம் உயர்மட்ட பாலம் கட்டும்போது காந்திபுரத்தில் போக்குவரத்தைக் குறைப்பதற்கும், எளிதாக்குவதற்கும் உரிய திட்டத்தை  நெடுஞ்சாலைத் துறையினர் தயாரிக்க வேண்டும்.

லட்சுமி மில் சந்திப்பில் பாதாள சாக்கடை பணிகள் முடியும் நிலையில் உள்ளன.  ராமநாதபுரம் முதல் புலியகுளம் வரை உள்ள சாலைப் பணிகளையும் நெடுஞ்சாலைத்  துறையினர் விரைந்து முடிக்க வேண்டும்.

ராமநாதபுரம், சிங்காநல்லூர் சாலையில் சீரமைப்பு பணிகளையும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விரைவில் முடிக்க வேண்டும். போக்குவரத்து,  நெடுஞ்சாலை, மின் துறையினர் என்ன பணி செய்கிறோம் என்பதை மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும். போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறையினர் காவல் துறையினருடன் இணைந்து சாலை நெரிசல் மற்றும் போக்குவரத்தை எளிதாக்குவதற்குத் தேவையான  திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்றார் மேயர். 

 துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் கே.ஆர்.ஜெயராமன், பி.சாவித்திரி, மாநகராட்சிப் பொறியாளர் சுகுமார்,  நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முருகேசன், வையாபுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 151 of 506