Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பெ.நா.பாளையம் அரசுப் பள்ளியில் பேரூராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF

தினமணி                03.07.2013 

பெ.நா.பாளையம் அரசுப் பள்ளியில் பேரூராட்சித் தலைவர் ஆய்வு

பெரியநாயக்கன்பாளையத்தில் குப்பிச்சிபாளையம் சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கூட்டம், திங்கள்கிழமை பள்ளி வளாகத்தில் நடந்தது. அப்போது பள்ளியை பேரூராட்சித் தலைவர் சுற்றிப் பார்த்தார்.

மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாக இருந்ததாகவும், அங்கன்வாடி குழந்தைகள் மையம், சத்துணவுக் கூடம் ஆகியவை சரியாக பராமரிக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவத்தை வரவழைத்து, உடனடியாக இக்குறைகளைத் தீர்க்க அறிவுறுத்தினார். இதனையடுத்து கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

வாரத்திற்கொருமுறை பேரூராட்சி துணைத் தலைவர், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர், அதிகாரிகள் இப் பள்ளியை பார்வையிட்டு சுகாதாரம் பேண நடவடிக்கை எடுப்பதோடு, அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு தரப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

தினத்தந்தி 04.07.2013 கோவை மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவது அம்பலம்: கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு; பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்

Print PDF

தினத்தந்தி                  03.07.2013

கோவை மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவது அம்பலம்: கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு; பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்


கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த லாரியை பொது மக்கள் சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் கொட்டப்படும் கழிவுகள்

கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கோவைக்கு கொண்டு வந்து இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் கொட்டப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகின்றது. தமிழகத்திலிருந்து கேராளவுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகள் அங்கிருந்து திரும்பும் போது கழிவுகளை அதிக வாடகைக்கு பேசி ஏற்றிக்கொண்டு வந்து கோவையில் கொட்டி விட்டு சென்று விடுகின்றன. இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த சில மாதங்களாக மருத்துவ கழிவுகள் தமிழக எல்லைக்குள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கோவை நகரை அடுத்த வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு வெளியே ஒரு லாரி நின்றிருந்தது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் அந்த லாரியிலிருந்து வெளியேறிய துர்நாற்றத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இவ்வளவு நாற்றத்துடன் அந்த லாரியில் என்ன ஏற்றிப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அந்த பகுதி மக்கள் லாரி டிரைவரிடம் விசாரித்தனர்.

கழிவுகள் ஏற்றி வந்த லாரி


இதில் அவருடைய பெயர் குப்புசாமி (வயது 35) என்றும், சேலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர் தான் அந்த லாரியின் உரிமையாளரும், டிரைவராகவும் உள்ளார் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் கோவை கணபதியை சேர்ந்த ராஜன் (40) என்பவர் தான் இதை கேரளாவிலிருந்து ஏற்றி வர சொன்னார் என்றும் வெள்ளலூர் குப்பை கிடங்கு காவலாளியிடம் அவர் ஏதோ பேசியதாகவும் ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளாததால் காலையில் வருவதாகவும் சொல்லி விட்டு சென்றதாகவும் கூறினார்.

அந்த லாரியிலிருந்து கடுமையான நாற்றம் அடித்ததால் அதில் மருத்துவ கழிவுகள் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று நினைத்த அந்த பகுதியை சேர்ந்த சுமார் 200 பேர் அந்த லாரியை முற்றுகையிட்டனர். இதனால் அதிகாலை நேரத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போத்தனூரிலும் நாற்றம்

இது பற்றிய தகவல் போத்தனூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதன் பின்னர் அந்த லாரியை போலீசார் போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள். லாரியை அங்கு கொண்டு வந்து நிறுத்தியதும் அதிலிருந்து கிளம்பிய நாற்றத்தினால் அந்த பகுதி மக்கள் வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடிக்கொண்டனர். ஆனால் சாலையில் நடந்து செல்பவர்களை மூச்சு முட்டும் அளவுக்கு நாற்றம் துளைத்தெடுத்தது.

மருத்துவ கழிவுகளை ஏற்றி வருவதற்கு உதவிய ராஜன் என்பவர் புரோக்கராக செயல்பட்டுள்ளார். அவருடைய ஏற்பாடடின்பேரில் தான் கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் கோவைக்கு ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவருடைய செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை.

போராட்டம்

இது குறித்து வெள்ளலூர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து கோவை பகுதியில் கொண்டு வந்து கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகளை அப்படியே திருப்பி அனுப்பாமல் அந்த லாரி உரிமையாளர்கள் மீதும், சரக்கை அனுப்பிய கேரள ஆஸ்பத்திரி மற்றும் தொழிற்சாலைகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 

பேரையூர், எழுமலை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் ஆய்வு

Print PDF

தினத்தந்தி                  03.07.2013

பேரையூர், எழுமலை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் ஆய்வு
 
பேரையூர், எழுமலை பேரூராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வீடுகளிலும், அரசு அலுவலகங்களிலும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்னர் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பேரூராட்சி சார்பாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகிய இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்று தகவல் கூறப்பட்டது. பேரையூரில் உள்ள 15 வார்டுகளிலும் எந்தெந்த வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி இருக்கிறது என்பதை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பேரூராட்சி பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தால் தான் பேரூராட்சி அங்கீகாரம் கிடைக்கும். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்றால் 15 நாட்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி கூறினார். உடன் பேரூராட்சி தலைவர் கே.கே.குருசாமி இருந்தார்.

எழுமலை பேரூராட்சி

எழுமலை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எம்.ராஜேந்திரன் ஆய்வு செய்தார். மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு நடத்தினார். பஸ் நிலையத்தில் சமுதாயக்கூடம் மற்றும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை பார்வையிட்டபின் மெயின் பஜாரில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பையும் பார்வையிட்டு பொதுமக்களிடம் அது குறித்து விளக்கினார்.

பேரூராட்சி மூலம் பராமரிக்கப்படும் உரப்பூங்கா மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவற்றையும் பேரூராட்சி உதவி இயக்குனர் எம்.ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அவருடன் செயல் அலுவலர் (நிர்வாகம்) இப்ராகிம், எழுமலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், அலுவலர்கள் சென்றனர்.

 


Page 154 of 506