Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர் அருகே அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது மட்டுமே நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தினத்தந்தி                  03.07.2013

ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர் அருகே அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது மட்டுமே நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் தகவல்


ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர் அருகே வணிக நோக்குடன் அனுமதியில்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே சீல் வைக்கப்படும். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:–

கோவில் மதில் சுவர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள மதில் சுவர்கள் அனைத்தும் புராதன புகழ் வாய்ந்தவையாகும். இந்த மதில் சுவர்களை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சில பழைய வீடுகள் மூன்றாம் நபர்களுக்கு கோவில் அனுமதியில்லாமல் விற்கப்பட்டு வணிக நோக்கத்துடன் பல குடியிருப்புகள் கொண்ட வீடுகளாக விதிகளை மீறி கட்டப்படும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அவ்வாறு வணிக நோக்குடன் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு கடந்த 1–ந்தேதி மாநகராட்சி வாயிலாக சீல் வைக்கப்பட்டது. இக்கட்டிடமானது கோபுரத்தை ஒட்டியும், மதில் சுவரை ஒட்டியும் கட்டி வருவதை கண்டு கோவில் நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த கோரி மதுரை ஐகோர்ட்டில் மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

சட்டப்படி நடவடிக்கை

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மாநகராட்சி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு திருச்சி மாநகராட்சி சட்டப்பிரிவுகள் மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.

அதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விதிகளை மீறி கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் மாநகராட்சி சட்டப்படி வேலை நிறுத்த அறிவிப்பும் வழங்கப்பட்டது. அதன்பின்பும் பணியினை தொடர்ந்து செய்து வந்ததால் நகர் ஊரமைப்பு சட்டப்படி அறிவிப்பு வழங்கப்பட்டு உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

அச்சப்பட வேண்டாம்

வணிக நோக்குடன் இதுபோன்ற அனுமதி இல்லாத விதிமீறலுடன் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு மட்டும் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்ரீரங்கம் மதில் சுவரை ஒட்டியுள்ள வீடுகள் சம்மந்தமாக மாநகராட்சி எந்தவிதமான கணக்கெடுப்பு பணியும் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே உள்ள பழைய கட்டிடங்களுக்கு இந்த நடவடிக்கைகள் ஏதும் பொருந்தாது. எனவே பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சமடைய வேண்டாம். தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்.

மேலும் வரலாற்று சிறப்புமிக்க இந்த புராதன கோவில் மதிற்சுவர்களை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

நெல்லை மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் 15–ந் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி                  03.07.2013

நெல்லை மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் 15–ந் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

நெல்லை மாநகராட்சிக்கு 2013–2014ம் ஆண்டில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் பாதாள சாக்கடை சேவை கட்டணம் ஆகியவைகள் செலுத்துவதற்கு கடைசி தேதி 15–7–2013 ஆகும்.

நடப்பு ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வரிகளை செலுத்தாமல் நிலுவை வைத்து உள்ளவர்களின் சொத்துக்கள் மீது ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு முதலான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை வருகிற 15–ந் தேதிக்குள் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்களில் செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்களின் பெயர்கள் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

இந்த தகவலை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) த.மோகன் தெரிவித்தார்.

 

மாநகராட்சிக்கு வரி நிலுவை வைத்திருப்போர் பட்டியல்: பொது இடங்களில் வைக்க ஏற்பாடு

Print PDF

தினமணி              02.07.2013

மாநகராட்சிக்கு வரி நிலுவை வைத்திருப்போர் பட்டியல்: பொது இடங்களில் வைக்க ஏற்பாடு

திருநெல்வேலி மாநகராட்சியில் அதிக வரி நிலுவை வைத்திருப்போர் பெயர்ப் பட்டியல் பொது இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுமென மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) த. மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சிக்கு 2013-14-ம் ஆண்டின் முதலாம் அரையாண்டிற்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி மற்றும் பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் ஆகியவற்றினை செலுத்துவதற்கான கடைசி தேதி 15.4.2013 ஆகும்.

நிகழ் ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வரியினை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்களின் சொத்துக்கள் மீது ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு முதலான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, நிலுவை மற்றும் நிகழ் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை மற்றும் பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் ஆகியவற்றினை 15.7.2013-க்குள் மாநகராட்சி கணினி வரிவசூல் மையங்களில் செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு முதலான சட்டரீதியான நடவடிக்கையினை தவிர்த்திட நிலுவைதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்த காலக் கெடுவுக்கு பின்னரும் அதிகமாக நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்களின் பெயர் பட்டியல் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் மாநகரின் முக்கிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும். மேலும், நாளிதழ்களிலும் வெளியிடப்படும் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 155 of 506