Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி கட்டடத்துக்கு சீல்

Print PDF

தினமணி              02.07.2013

அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி கட்டடத்துக்கு சீல்

கோவையில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி  கட்டடத்துக்கு மாநகராட்சியின் நகரமைப்பு அலுவலர்கள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

  கோவை கிராஸ்கட் சாலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவிக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. இக் கட்டடம் தரைத்தளத்தில் இருந்து 4-ஆவது தளம் வரை கட்டப்பட்டது. 4-ஆவது தளம் கடந்த 2010-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

  தரைத் தளத்தில் இருந்து மூன்றாவது தளம் வரை சுமார் 20 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் இருக்கும். இக் கட்டடத்துக்கு மாநகராட்சியிடம் இருந்தோ உள்ளூர் திட்டக் குழுமத்தில் இருந்தோ எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

  கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடமாக இருந்தால், உரிய அனுமதி பெறாமல் இருந்தாலும் அதை முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. அதிகபட்சமாக 50 சதவீதம் வரை விதிமீறல்கள் இருந்தால், அதை முறைப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இக்கட்டடம் முழுவதுமே விதிகளை மீறிக் கட்டப்பட்டதால் அதிகாரிகள் முறைப்படுத்த மறுத்துவிட்டனர்.

  கட்டடம் முழுவதையும் ஜவுளிக் கடைக்கு வாடகைக்கு விட்டதாகத் தெரிகிறது. கடையின் உள்புறத்தை முழுவதுமாக மாற்றும் பணி நடந்து வந்தது. இவ்வாறு மாற்றுவதற்கும் மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை.

  இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை காலையில் தரைத் தளத்தில் இருந்து 3-வது தளம் வரை சீல் வைத்தனர்.

 

"திங்கள்தோறும் மக்களைத்தேடி மாநகராட்சி முகாம்

Print PDF

தினமணி              02.07.2013

"திங்கள்தோறும் மக்களைத்தேடி மாநகராட்சி முகாம்

மதுரை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் திங்கள்தோறும் சுழற்சி முறையில் மக்களைத்தேடி மாநகராட்சி முகாம் நடத்தப்படும், என ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்தார்.

 மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில், மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

 முகாமில் ஆர்.நந்தகோபால் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் மண்டல அளவில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் மூலம், பிறப்பு இறப்பு சான்றுகள், கட்டட வரைபட அனுமதி, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னை, வரி விதிப்பு போன்றவை குறித்து உடனுக்குடன் தீர்வு காணப்படும். இனி, ஒவ்வொரு திங்கள்கிழமையும், ஒவ்வொரு மண்டலத்திலும் சுழற்சி முறையில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் நடத்தப்படும் என்றார்.

 நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா பேசுகையில், மாநகரில் முடங்கிக் கிடந்த பாதாளச் சாக்கடை  திட்டத்தை தற்போது முதல்வரின் சிறப்பு நிதியின் கீழ் செயல்படுத்தி வருகிறோம்.

 கல்வித் துறையில் தமிழகத்திலுள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு மதுரை மாநகராட்சி பள்ளிகள் முன்னோடியாக திகழ்கின்றன. சுமார் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலிருந்த மாநகராட்சி மருத்துவமனைகளை சீர்படுத்தி, நவீன கருவிகள் அமைத்து வருகிறோம். முதல்வர் உத்தரவின்பேரில் 300 வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் அனைத்து பிரிவுகளிலும் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். முந்தைய 72 வார்டு பகுதியிலுள்ள சாலைகளில் 90 சதவீதம் மேம்படுத்தப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே மேலும் 2 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட உள்ளன.

 குடிநீர், கழிவுநீர்ப் பிரச்னை உள்ளிட்ட எந்த அடிப்படை பிரச்னைகள் குறித்தும், பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம், என்றார்.

  முன்னதாக, மண்டலத் தலைவர் பெ. சாலைமுத்து வரவேற்றார். உதவி ஆணையர்  அ.தேவதாஸ் நன்றி கூறினார். துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், நகர் பொறியாளர் (பொறுப்பு) அ.மதுரம், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், நகர்நல அலுவலர் யசோதாமணி, மண்டல வருவாய் ஆய்வாளர் ப.சுரேஷ்குமார், சுகாதாரக்குழு தலைவர் முனியாண்டி, தெற்கு மண்டலக் கண்காணிப்பாளர் வரலட்சுமி, பொறியாளர்கள் ராசேந்திரன், சேகர், மாமன்ற உறுப்பினர்கள் பூமிபாலகன், முத்துக்குமார், கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

வெறிநாய்களை ஒழிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி              02.07.2013

வெறிநாய்களை ஒழிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள வெறிநாய்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

  வழக்குரைஞர் சி.எழிலரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். ராஜேஸ்வரன், டி. மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

  மனு விவரம்: மதுரை நகர் பகுதிகளில் 18,500 தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சியில் ஓரே ஒரு மையம் மட்டுமே உள்ளது. இதன் மூலம் 2 மாதங்களில் 692 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாய்களைப் பிடிக்கும் ஊழியர்களும் போதிய அளவில் இல்லை.

   இதனால் ரேபிஸ் பாதித்த நாய்களை, பொதுமக்களே விஷம் வைத்து கொன்று விடுகின்றனர். இப்படி கொல்லப்படும் நாய்களால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. எனவே. ரேபிஸ் நோய் பாதித்த நாய்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.    

  இந்த மனுவுக்கு, மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பிராணிகள் நலவாரிய விதிகள் காரணமாக, நாய்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  இந்நிலையில், பிராணிகள் நலவாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், ரேபிஸ் பாதித்த நாய்களை கொல்வது தொடர்பாக நாங்கள் எந்த வழிகாட்டுதலையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டு இருந்தது.  

   இதையடுத்து நீதிபதிகள் திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவு:  மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ரேபிஸ் பாதித்த நாய்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இந்த நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மதுரை அரசு மருத்துவமனையில் வெறிநாய்க் கடிக்கான மருந்து கையிருப்பு மற்றும் அவசர சிகிச்சை வசதி   எந்த அளவில் உள்ளன என்பது குறித்து  ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

  வழக்கில் பிராணிகள் நலவாரியத்தையும் எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 


Page 156 of 506