Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மதுரை மாநகராட்சி பகுதியில் வெறிநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Print PDF

தினத்தந்தி             01.07.2013

மதுரை மாநகராட்சி பகுதியில் வெறிநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தெருநாய்கள்

மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் எழிலரசு, வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–

சமீபகாலமாக மதுரை மாநகரில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமானோர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மதுரை மாநகராட்சி கணக்குப்படி 18 ஆயிரத்து 500 தெரு நாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு நாய் பிடிக்கும் வாகனம் மட்டுமே உள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்யவும் ஒரே ஒரு மையம் செல்லூரில் செயல்படுகிறது.

தொற்று நோய்

கருத்தடை செய்வதற்கான செலவை மதுரை மாநகராட்சியும், விலங்குகள் நல வாரியமும் பகிர்ந்து கொள்கின்றன. இருந்த போதிலும், மதுரை மாநகராட்சியில் 6 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 12 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட வேண்டியது உள்ளது. இதற்கு மதுரை மாநகராட்சியில் போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, தெருநாய்களை பிடிக்க கூடுதல் வாகனம் வாங்கவும், கருத்தடை மையத்தை அதிகப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்க வெறிநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி போடுவதற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஒழிக்க வேண்டும்

இந்த மனு நீதிபதிகள் ராஜேசுவரன், மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர்ரமேஷ்குமார் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறி இருப்பதாவது:–

மதுரை மாநகராட்சியில் வெறிநாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, வெறிநாய் கடித்து பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வெறிநாய் கடித்து பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் போதிய மருந்து உள்ளதா என்பது குறித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வெறிநாய்களை கொல்ல எந்தவித வழிகாட்டுதலும் இல்லை என்று பிராணிகள் நல வாரியம் கூறி உள்ளது. எனவே, மதுரை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள வெறிநாய்கள் மற்றும் தெருநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 9–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

நெல்லை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணத்தை 17–ந் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி             01.07.2013

நெல்லை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணத்தை 17–ந் தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

நெல்லை மாநகராட்சிக்கு 2013–2014ம் ஆண்டில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் பாதாள சாக்கடை சேவை கட்டணம் ஆகியவைகள் செலுத்துவதற்கு கடைசி தேதி 15–4–2013 ஆகும். நடப்பு ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வரியினங்களை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் சொத்துக்கள் மீது ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு முதலான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடப்பு அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை வருகிற 15–ந் தேதிக்குள் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்களில் செலுத்த வேண்டும். வரி செலுத்தாதவர்களின் பெயர்கள் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்ப்படும்.

இந்த தகவலை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) த.மோகன் தெரிவித்தார்.

 

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைத்தால் தான் கட்டிட அனுமதி வழங்கப்படும் மேயர் செ.ம.வேலுச்சாமி தகவல்

Print PDF

தினத்தந்தி             30.06.2013

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைத்தால் தான் கட்டிட அனுமதி வழங்கப்படும் மேயர் செ.ம.வேலுச்சாமி தகவல்

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு வசதி அமைத்தால் தான் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மேயர் செ.ம.வேலுச்சாமி கூறினார்.

மரக்கன்று நடும் விழா

கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மேயர் செ.ம.வேலுச்சாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பேசியதாவது:–

கோவை மாநகராட்சியில் உள்ள 63 மாநகராட்சி பள்ளி வளாகங்களில் முதல் கட்டமாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு மாநகராட்சி அரசு அலுவலகங்கள், மேல்நிலைப்பள்ளியில் வேம்பு, பூவரசு போன்ற நிழல் தரும் மரங்கள் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சுற்று சூழலை பாதுகாப்பதிலும் மரக்கன்றுகளை நடுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. மாநகராட்சியிலுள்ள அனைத்து பூங்காக்களிலும் இருக்கிற இடத்திற்கேற்றவாறு மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ளது. கோவை மாநகரை மரங்கள் அடர்ந்த பசுமை மாநகரமாக மாற்றுவதற்கு பொது மக்களும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அனுமதி வழங்கப்படும்

மாநகராட்சியில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அவசியம் ஏற்படுத்த வேண்டும். அது போல வணிக வளாகங்களில், திறந்த வெளியிடத்தில் மரம் அவசியம் வளர்க்க வேண்டும். மழை நீரை சேமிக்கவும், மரம் வளர்த்து சுற்று சூழலை பாதுகாக்கவும் மாநகராட்சி சில வழிமுறைகளை வகுத்து வருகிறது. மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தல் ஆகியவை இருந்தால் மட்டுமே வரி விதிப்பு, கட்டிட அனுமதி வழங்கப்படும். இது தொடர்பாக கோவை மாநகராட்சியில் குடியிருப்பு, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகவளாகங்கள்,திருமண மண்டபங்கள் ஆகியவற்றை கணக்கு எடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் கவுண்டம்பாளையம் 8–வது வார்டில் உள்ள எஸ்.பி.எம்.கார்டன் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 22 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மழை நீர்வடிகால் அமைக்கும் பணிக்கு மேயர் செ.ம.வேலுச்சாமி அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ரூ. 9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள சத்துணைவு மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சேலஞ்சர்துரை எம்.எல்.ஏ., ஆணையாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்த பள்ளி வளாகத்தில் 30 இடங்களில் மரக்கன்றுகளை மாணவ–மாணவிகள் நட்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் சிவராசு, துணை மேயர் லீலாவதி, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 01 July 2013 08:00
 


Page 159 of 506