Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அங்கீகரிக்கப்படாத காலனி லே அவுட்: தெற்கு தில்லி மாநகராட்சியும் ஒப்புதல்

Print PDF

தினமணி               27.06.2013

அங்கீகரிக்கப்படாத காலனி லே அவுட்: தெற்கு தில்லி மாநகராட்சியும் ஒப்புதல்

அங்கீகரிக்கப்படாத காலனி லேஅவுட்களுக்கு தெற்கு தில்லி மாநகராட்சியும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் அங்கீகாரம் பெறாத 895 காலனிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் சில ஆண்டுகளாக நடைபெற்று, கடந்த ஆண்டு செப்டம்பரில் முடிவுற்றன. தில்லி அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

895 காலனிகளில் 312 காலனிகள் தனியார் இடத்தில் இருந்ததால், அவற்றின் லேஅவுட்களுக்கு மாநகராட்சிகள் ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது.

காலனிகளை ஒழுங்குபடுத்தும் பிரச்னையில் தில்லி காங்கிரஸ் அரசுக்கும், மாநகராட்சிகளை நிர்வகிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

 தில்லி அரசு மீது மாநகராட்சிகளும், மாநகராட்சிகள் மீது அரசும் குறை கூறி வந்தன. ஆனாலும் வடக்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் எல்லைப் பகுதிகளில் தனியார் இடத்தில் இருந்த காலனிகளின் லேஅவுட்களுக்கு அந்தந்த மாநகராட்சிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தன.

இந்த நிலையில் ரஜூரி கார்டன் விரிவு, மீதாபூர் காலனிகளின் லேஅவுட்களுக்கு தெற்கு தில்லி மாநகராட்சி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இருப்பினும் இரு காலனிகளும் லேஅவுட் தயாரிப்புக் கட்டணத்தை மாநகராட்சிகளுக்குச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"இந்த இரண்டு காலனிகளின் லேஅவுட்கள் பரிசீலிக்கப்பட்டன. உள்புறச் சாலைகள் 6 மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று தீ அணைப்புத் துறை  கட்டாயப்படுத்தியுள்ளது. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று காலனி நிர்வாகங்களுக்குக் தெரிவித்துள்ளோம்' என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

மாநகராட்சி மன்றக் கூட்டம்: 72 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Print PDF

தினமணி               27.06.2013

மாநகராட்சி மன்றக் கூட்டம்: 72 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மேயர் சைதை துரைசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டம்.
மேயர் சைதை துரைசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டம்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மொத்தம் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்மா உணவகங்களுக்கு தனித்துறை அமைப்பது, நீர்வழிப் பாதைகளில் வசிப்பவர்களுக்கு கொசு வலை வழங்குவது என்பன உள்ளிட்ட 72 முக்கியத் தீர்மானங்கள் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் 200 மலிவு விலை அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது.

இந்த நிலையில் அம்மா உணவக திட்ட இயக்குநர் (கூடுதல் சுகாதார அலுவலர்) தலைமையிலான தனித்துறை (உணவுத்துறை) அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ. 2.78 கோடி ஒதுக்கப்பட்டு, புதிதாக 111 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

இந்த தனித் துறையில் உள்ள அதிகாரிகள், அம்மா உணவகங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து காண்காணிப்பார்கள்.

கொசு வலை: சென்னையில் நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவசமாக கொசு வலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொசு வலைகள் வாங்க நிதி ஒதுக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி 5 லட்சம் கொசு வலைகள் ரூ.7.50 கோடியில் கொள்முதல் செய்யப்படும். இதில் முதல்கட்டமாக 78,184 கொசுவலைகள் சுமார் ரூ. 1.17 கோடியில் வாங்க நிதி ஒதுக்கப்படும். ஒரு கொசுவலையின் விலை ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தீர்மானங்கள்

  • கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் குப்பை பதனிடுதல் திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தம் கோரியவர்களுக்கு ஒப்பந்தபுள்ளி ஆவணங்கள் வழங்குதல்.
  • புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மேம்பாலங்கள், சுரங்க நடைபாதைகள் ஆகியவற்றை அமைப்பதற்கான ஆய்வை மேற்கொள்ளவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் கலந்தறிதற்குரியவரை நியமித்தல்.
  • தெருவிளக்கு கம்பங்கள் வழியாக செல்லும் கேபிள் டிவி வயர்களுக்கு வசூல் செய்யப்படும் தொகையை உயர்த்துதல்.
  • பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை கோட்ட அலுவலகங்களிலேயே பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் முறையை அமல்படுத்துதல்.
  • 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பினாலான 2,000 குப்பைத் தொட்டிகளை கொள்முதல் செய்தல்.
  • மாவட்ட குடும்ப நலத்துறையில் உள்ள 5 மயக்க மருந்து நிபுணர் காலியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்புதல்.
  • மேயர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் பட்டியலில் மாறுதல் செய்தல்.
  • அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனித்துறை ஏற்படுத்தி, அதிகாரிகளை நியமித்தல்.
  • முதல்கட்டமாக 78,184 பேருக்கு இலவச கொசு வலைகள் வழங்குதல்.
Last Updated on Thursday, 27 June 2013 07:27
 

தஞ்சை நகரில் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை நகர சபை தலைவி தகவல்

Print PDF

தினத்தந்தி               27.06.2013

தஞ்சை நகரில் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை நகர சபை தலைவி தகவல்


தஞ்சை நகரில் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுக்கப்பட்டுள்ளது என நகர சபை தலைவி சாவித்திரிகோபால் கூறினார்.

நகர சபைக்கூட்டம்

தஞ்சை நகராட்சி கூட்ட அரங்கில் நகர சபைக்கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு நகர சபை தலைவி சாவித்திரிகோபால் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரிடெல்டா மாவட்டங்களில் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்காத வகையில் கடந்த ஆண்டு சம்பா சிறப்பு தொகுப்புத் திட்டங்களை வழங்கி, விவசாயிகளை காப்பாற்றியது போல் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை நடப்பு ஆண்டிலும் காப்பாற்ற செப்டம்பர் மாதம் வரை 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் நீர் ஆதாரத்தில் இருந்து வயலுக்கு நீர் எடுத்து செல்வதற்கு ஏதுவாக ரூ.12 கோடி மதிப்பில் 80 மீட்டர் நீளம், 90 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட பைப்புகள், குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.6 கோடி செலவில் உயிர்உரங்கள், நுண்ணூட்டச் சத்துக்கள், தாவர பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை விலை ஏதும் இன்றி இலவசமாக வழங்க ஆணை பிறப்பித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தஞ்சை நகர சபையின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

உறுப்பினர்கள் கருத்து

பின்பு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:–

சண்.ராமநாதன்(தி.மு.க): 40–வது வார்டில் குடிதண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. அதை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக சொன்னீர்கள். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் 12–ந் தேதி வெண்ணாற்றில் தண்ணீர் வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு வராததால் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தலைவி சாவித்திரிகோபால்: நடராஜபுரம் காலனியில் குடிதண்ணீர் குழாயில் ஏற்பட்டிருந்த பழுது நீக்கப்பட்டுள்ளது. தஞ்சை நகரில் குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக தெரியவில்லை. சீராக எல்லா பகுதிகளிலும் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெண்ணாற்றில் தண்ணீர் வரவில்லை என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். இருந்தாலும் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சிவக்குமார்(அ.தி.மு.க): எனது 37–வது வார்டில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவு நீர் பொங்கி தெருவில் ஆறாக ஓடுகிறது.

சதாசிவம்(தி.மு.க): மருத்துவக்கல்லூரி சாலையிலும் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவு நீர் பொங்கி சாலையில் ஓடுகிறது.

சாவித்திரிகோபால்: பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சாலை அமைக்க வேண்டும்

கார்த்திகேயன்(தி.மு.க): கொடிக்காலூர் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

அதிகாரி: விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்.

சர்மிளாதேவி(தி.மு.க): 39–வது வார்டில் கல்லூரி வாகனம், பள்ளி வாகனம் அதிக அளவில் செல்வதால் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.

சாவித்திரிகோபால்: 1 வாரத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விளம்பர பலகை

மணிகண்டன்(துணைத் தலைவர்): தற்போது காற்று அதிகமாக வீசுவதால் தனியார் கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் கீழே சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுகிறது. இதனால் நகராட்சி சார்பில் 2 மாதத்திற்கு விளம்பர பலகைகள் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது.

தங்கம்மாள்(அ.தி.மு.க): எனது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி அவரிடம் இருந்து இடத்தை மீட்க வேண்டும். சாவித்திரிகோபால்: நடவடிக்கை எடுக்கப்படும்.

சாமிநாதன்(அ.தி.மு.க): தஞ்சை திலகர் திடல் அருகே மாலை நேர மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் 50 கடைகளுக்கு தேவையான இடவசதி உள்ளது. ஆனால் எல்லோரும் சாலையின் ஓரத்தில் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்வதால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மார்க்கெட்டிற்குள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

 


Page 160 of 506