Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

80 அடி சாலையின் பத்தாண்டு போராட்டத்துக்கு தீர்வு : பணி துவங்க நகர் ஊரமைப்பு ஆணையர் ஒப்புதல்

Print PDF

தினமலர்               25.06.2013

80 அடி சாலையின் பத்தாண்டு போராட்டத்துக்கு தீர்வு : பணி துவங்க நகர் ஊரமைப்பு ஆணையர் ஒப்புதல்

ஈரோடு: ஈரோடு உள்ளூர் திட்டக்குழுமத்தின் கோரிக்கைக்கு, சென்னை நகர் ஊரமைப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கியதால், 80 அடி சாலைக்காக போராடிய, 10 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது.ஈரோடு மாநகராட்சி பிரப் ரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பாக, மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் பிரப் ரோட்டில் இருந்த, பெரியார் நகர், 80 அடி சாலைக்கு செல்லும் வழித்தடமாக, வணிக வரித்துறை அலுவலகத்தை ஒட்டியபடி பாதை இருந்துள்ளது.காலப்போக்கில் பிரப் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., நிர்வாகத்தின் கல்வி குழும விளையாட்டு மைதானமாக மாறியது. ஈரோடு மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் கோவில்களில் பெரியமாரியம்மன் கோவில் முதலிடம் வகிக்கிறது.

மக்களிடம் வரவேற்பை பெற்ற மாரியம்மன் கோவில் விரிவாக்கம் செய்யவும், அதேசமயம் நகரின் வளர்ச்சியால் பிரப் ரோட்டில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ரயில் நிலையத்துக்கு குறுக்குச்சாலை தேவைப்பட்டது.நகரின் கட்டமைப்பை மாற்றிட முயற்சிகள் மேற்கொண்டபோது, பிரச்னை பூதகரமாக வெடித்தது. 12.66 ஏக்கர் அரசு நிலம், சி.எஸ்.ஐ., நிர்வாகத்துக்கு சொந்தமான இடம் என தெரிவித்தனர்.கோவிலை விரிவாக்கம் செய்யவும், ஆக்ரமிப்பு இடத்தை மீட்கவும், 80 அடி சாலையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என, 10 ஆண்டாக பெரியமாரியம்மன் கோவில் மீட்பு குழு போராடி வருகின்றனர்.

இதனிடையே மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 80 அடி சாலையை புதுப்பிக்க தீர்மானம் நிறைவேற்றி, 50 லட்சம் ரூபாய் நிதியையும் ஓதுக்கீடு செய்தனர்.
சி.எஸ்.ஐ., நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், வருவாய்த்துறையின் ஆவணங்களை பெற்று, மாவட்ட நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே உள்ளூர் திட்டக்குழுமத்திடம், 80 அடி சாலை பணியை மாநகராட்சி ஒப்புதல் கோரியது.
தவிர, வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ளும்படி மாநகராட்சி கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், வருவாய்த்துறை ஆவணத்தில் பிரச்னைக்குறிய நிலம் அரசு புறம்போக்கு நிலம் என உள்ளூர் திட்டக்குழுமம் திட்டவட்டமாக அறிவித்தது.

இதனிடையே முதல்வரின் தனி அலுவலருக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு வழங்கிய பதிலில், 80 அடி அகல திட்ட சாலை, ஈரோடு விரிவு அபிவிருத்தித் திட்டம் எண் 2ல் அமைகிறது. சென்னை, நகர் ஊரமைப்பு ஆணையர், அவர்களின் செயல்முறை கடிதத்தில் நகர் ஊரமைப்பு சட்டத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, விரிவு அபிவிருத்தி திட்டம் வரை படங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.அரசாணை வெளியிடப்பட்டதும், ஈரோடு மாநகராட்சியால் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். 10 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வாக, கடந்த, 12ம் தேதி, நகர் ஊரமைப்பு ஆணையர், உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு ஒப்புதல் வழங்கியதுடன், அதை அரசாணையாகவும் வெளியிட்டுள்ளனர்.

உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு ஒப்புதல் வழங்கியதன் மூலம், மாநகராட்சியில் தீர்மானிக்கப்பட்ட, 80 பணிகள் துவங்கிட அனுமதி கிடைத்தது உறுதியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மூலம் ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்தி அடுத்து கட்ட, மாநகராட்சியின் பணிகளை துவங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தெருக்களில் திரியும் மாடு, நாய், பன்றிகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

Print PDF

தினமலர்               25.06.2013

தெருக்களில் திரியும் மாடு, நாய், பன்றிகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

 சென்னை:"தெருக்களில் திரியும், கால்நடைகள், நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது' என, சென்னை ஐகோர்ட்டில், மாநகராட்சி பதில் அளித்துள்ளது.

மிகுந்த பாதிப்பு

சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த, கே.சந்திரசேகரன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், "தெருக்களில், கால்நடைகளை, நாய்கள், பன்றிகளை திரிய விடுகின்றனர். இவற்றால், பொது மக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கின்றன. எனவே, உரிமம் பெறாமல், சாலைகளில், கால்நடைகளை திரிய விடும், உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆதி.குமரகுரு, மாநகராட்சி சார்பில், வழக்கறிஞர் அருண்மொழி ஆஜராகினர். மாநகராட்சி தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: தெருக்களில் திரியும், கால்நடைகள், நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளையும், மாநகராட்சி எடுக்கிறது. நாய்களை பிடித்து, அரசு சாரா அமைப்புகளிடம் ஒப்படைக்கிறோம்.
மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து, 2,500 பிராணிகளை பிடித்து, "ப்ளூ கிராஸ்' அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம்.மாடுகளை, தெருக்களில் திரிய விட்டால், அவற்றை பிடித்து,மாநகராட்சிக்கான இடத்தில், அடைத்து வைக்கிறோம். பின், உரிமையாளர்
களிடம் அபராதம் மற்றும் பராமரிப்பு கட்டணத்தை வசூலிக்கிறோம்.

கருணை கொலை

கடந்த, மூன்று ஆண்டுகளில், 59 ஆயிரத்துக்கும் மேல், நாய்கள் பிடிக்கப்பட்டன. அவற்றில், 4,406, நாய்கள், கருணை கொலை செய்யப்பட்டன. மற்ற நாய்களுக்கு,இனப்பெருக்க கட்டுப்பாடு செய்யப்பட்டது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பதில் மனுவில் கூறியிருப்பதை, "டிவிஷன் பெஞ்ச்' பதிவு செய்து, மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டு, மனுவை, பைசல் செய்தது.

 

சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி         25.06.2013

சொத்து வரி செலுத்தாத  கடைகளுக்கு சீல்

வாணியம்பாடி சி.எல். சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் உள்ள 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
 
1993ஆம் ஆண்டு முதல் இக்கடைகளுக்கான சொத்து வரி நகராட்சிக்குச் செலுத்தப்படாமல், ரூ.33.84 லட்சம் வரி பாக்கி இருந்ததாம். இதுதொடர்பான வழக்கில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
 
இதையடுத்து, நகராட்சி ஆணையர் ரவி, மேலாளர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் ரவி, வரி வசூல் அலுவலர்கள் கண்ணன், தண்டபாணி உள்ளிட்டோர் 26 கடைகளுக்கும் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
 
இதில், 9 கடைக்காரர்கள் ரூ.7.56 லட்சத்தை உடனடியாகச் செலுத்தினர்.
 
எனவே, அக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
Last Updated on Tuesday, 25 June 2013 08:49
 


Page 163 of 506