Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 6,672 விளம்பர பலகைககள் அகற்றம் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி               24.06.2013

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 6,672 விளம்பர பலகைககள் அகற்றம் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நடவடிக்கை


மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கையின் பேரில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த 6 ஆயிரத்து 672 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

உரிமம் இல்லாமல்...

மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மதுரை நகரின் அழகை சீர்குலைக்கும் வகையிலும் மதுரை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அரசு விதிகளுக்கு புறம்பாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அரசு விதிகளின்படி அமையாத மற்றும் அரசிடம் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோரை ஒருங்கிணைந்து மாநகராட்சி மண்டலம் ஒவ்வொன்றிற்கும் இரண்டு குழுக்களை நியமித்து அந்த பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

அகற்றம்

பேரூராட்சி, நகராட்சி, மற்றும் ஊராட்சி பகுதிகளில் அரசு விதிகளின்படி அமையாத மற்றும் அரசிடம் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணியினை சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி கமிஷனர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்களுடன் இணைந்து செயல்படவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி கடந்த 17–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விளம்பர பலகைகளை அகற்றும் பணி நடந்தது. அதில் மொத்தம் 6 ஆயிரத்து 672 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

சுவர் விளம்பரங்கள்

பொதுமக்களிடம் இருந்து இந்த பணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தனியார் கட்டிடங்களில் அனுமதியற்ற சுவர் விளம்பரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த விளம்பரங்கள் அரசு அனுமதியின்றி இருப்பதுடன், நகரின் அழகை சீர்குலைப்பதாகவும் உள்ளன. எனவே உடனடியாக சுவர் விளம்பரங்களை, கட்டிட உரிமையாளர்கள் அழிக்க வேண்டும்.

புறம்போக்கு நிலங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் சுத்தம் செய்திட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அந்த பணியினை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். அதற்குரிய செலவினத்தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூல் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

சொந்த செலவில்...

தனியார் கட்டிடங்களில் விளம்பர பலகை வைப்பதற்கான விளம்பரபலகை தாங்கிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட அளவிலேயே (அதிகபட்ச அளவு 24*12 அடி) இருத்தல் வேண்டும். அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ள விளம்பரப் பலகை தாங்கிகளை சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சொந்த செலவிலேயே அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

நகரில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றும் குழுக்கள்: ஆட்சியர் நடவடிக்கை

Print PDF

தினமணி               24.06.2013 

நகரில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றும் குழுக்கள்: ஆட்சியர் நடவடிக்கை

மதுரை மாநகரில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்கு வருவாய்த் துறை, மாநகராட்சியினர் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

 பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மதுரை மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையிலும், மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அரசு விதிகளுக்கு புறம்பாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

 மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகைகளை ஒழுங்குபடுத்தும் வகையில், அரசு விதிகளின்படி அமையாத மற்றும் அரசிடம் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்கு, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, மாநகராட்சி மண்டலம் ஒவ்வொன்றுக்கும் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

 மேலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் அரசு விதிகளின்படி அமையாத மற்றும் அரசிடம் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியினை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் ஊராட்சி அலுவலர்களுடன் இணைந்து செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 அதன்படி, ஜூன் 17 ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இதுவரை, 6,672 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.

 இப்பணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனியார் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள கட்டடங்களில் அனுமதியற்ற சுவர் விளம்பரங்கள் உள்ளன. மேற்படி விளம்பரங்கள் அரசு அனுமதியின்றி இருப்பதுடன், நகரின் அழகை சீர்குலைப்பதாகவும் அரசின் விதிமுறைகளுக்கு மாறுபட்ட அளவிலும் உள்ளன.

எனவே, சுவர் விளம்பரங்களை அழித்து சுத்தம் செய்திட, உத்தரவிடப்பட்டுள்ளது.

 தனியார் கட்டடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை கட்டட உரிமையாளர்கள் அழித்து சுத்தமாக வைக்கவேண்டும்.

 அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் அழித்து சுத்தம் செய்யவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இப்பணி நிறைவேற்றப்படும். அதற்குரிய செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

 தனியார் கட்டடங்களில் விளம்பரப் பலகை வைப்பதற்கான இரும்பு தாங்கிகள் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்ட அளவிலேயே (அதிகபட்ச அளவே 24-க்கு 12 அடி தான்) இருத்தல் வேண்டும்.

அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ள விளம்பரப் பலகை தாங்கிகளை சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் சொந்த செலவிலேயே அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தல் பாதாள சாக்கடை பணியில் வேகம் வேண்டும்

Print PDF

தினமலர்               21.06.2013

நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தல் பாதாள சாக்கடை பணியில் வேகம் வேண்டும்


கோவை:கோவையில் நெரிசல் மிகுந்த ரோடுகளில் பாதாள சாக்கடை பணியை இரவு நேரத்தில் மேற்கொள்ள, நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே நேற்று ஆய்வு செய்தார்.

பூ மார்க்கெட்டிலுள்ள "அம்மா உணவகத்தை' முதலில் ஆய்வு செய்து, உணவு வகைகளை சாப்பிட்டு பார்த்தார். "உணவு வகைளை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். சமைப்பதற்கும், குடிப்பதற்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகத்தில் "ஈ' க்களை ஈர்க்கும் மின்விளக்கு பொறி அமைக்கவும், குழல் விளக்களுக்கு பதிலாக சி.எப்.எல்., விளக்கு பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.
அதன்பின், கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கில் அமைக்கப்பட்ட, "லேண்ட் பில்லிங்' பூங்காவை பார்வையிட்டார். உக்கடம் பெரியகுளம் தூர்வாரப்பட்டதை பார்வையிட்டபோது, "மக்கள் ஒத்துழைப்போடு துவங்கப்பட்ட பணியை கைவிடாமல் மற்ற குளங்களையும் மேம்படுத்த வேண்டும். குளத்தில் கழிவுநீர் கலக்காமலும், கட்டட கழிவு கொட்டாமலும், தூய்மையாக பராமரிக்க வேண்டும்' என்றார்.

செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதை ஆய்வு செய்தார். ரோட்டின் நடுவே குழி தோண்டப்படுவதால், இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல், ஸ்தம்பித்து நின்றன. அதனால், மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல், இரவு நேரத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை மாற்று நிலையம் அமைப்பது, பீளமேடு இந்திரா கார்டனிலுள்ள குப்பை மாற்று நிலையத்தை பார்வையிட்டார். உக்கடத்தில் புதிதாக மீன்மார்க்கெட் கட்டும் இடத்தை ஆய்வு செய்தார்.

"மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணி மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 466 கி.மீ., பாதாள சாக்கடையில் 301.90 கி.மீ., பணி (64.80 சதவீதம்) நிறைவடைந்துள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் 582.82 கி.மீ., மேற்கொண்டதில், 347.66 கி.மீ., (59.65 சதவீதம்) நிறைவடைந்துள்ளது.

பாதாள சாக்கடையில் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்யுதும் கான்கிரீட் துவாரங்கள் (மேனுவல் ஹோல்ஸ்) 20,993 இடங்களில் அமைக்கப்படுகிறது. அதில், 13,467 இடங்களில் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கு, ""பணிகளை காலதாமதம் செய்யாமல், வேகப்படுத்த வேண்டும்; பாதாள சாக்கடை பணி நிறைவடைந்த பகுதிகளில் விரைவில் ரோடு போட வேண்டும். குப்பையில் பாலித்தீன் கழிவு அதிகமுள்ளதால், அதன் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, அறிவுறுத்தினார்.

மாநகராட்சி கமிஷனர் லதா, துணை கமிஷனர் சிவராசு, மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சுகுமார், கணேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இறுதியில், மேயரை சந்தித்து வளர்ச்சி பணிகள், திட்டப்பணிகள் குறித்து பேசினார்.

 


Page 165 of 506