Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

போலி பத்திரம் மூலம் விற்பனை தடுக்க பவானி நகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் பெயர் பலகை வைப்பு

Print PDF

தினகரன்                  17.06.2013

போலி பத்திரம் மூலம் விற்பனை தடுக்க பவானி நகராட்சிக்கு சொந்தமான நிலங்களில் பெயர் பலகை வைப்பு

பவானி, :  பவானி நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பெயர் பலகை அமைக்கப்படும் என நகராட்சித் தலைவர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

பவானி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் இடம், போலியான பத்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் கிளம்பியது. இதுகுறித்து, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள தேவூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பத்திரங்கள் தயாரித்து, நில விற்பனையில் ஈடுபட்டு மோசடி செய்த பவானி பழனிபுரத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து, அவரது மகன் கவுதம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பவானி நகராட்சிக்கு சொந்தமாக நகரின் பல்வேறு பகுதிகளில் காலியிடங்கள் உள்ளன. இவற்றிலும் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், இதுபோன்ற செயல்களைத் தடுக்கவும், பொதுமக்கள் மத்தியில் எச்சரிக்கை செய்யவும் நகராட்சி நிலங்களில் பெயர்ப்பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘இது நகராட்சிக்கு சொந்தமான நிலம், இதில் அத்துமீறி நுழைவோர் தண்டிக்கப்படுவர்‘ என்பன போன்ற வாசகங்களுடன் நகரில் உள்ள அனைத்து நகராட்சி நிலங்களிலும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படும் என நகராட்சித் தலைவர் கருப்பணன் தெரிவித்துள்ளார். 

 

மருதமலையில் திருமண மண்டபத்துக்கு "சீல்

Print PDF

தினமணி             16.06.2013

மருதமலையில் திருமண மண்டபத்துக்கு "சீல்

மருதமலை அடிவாரத்தில் பொதிகை உணவகம், தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டபம் ஆகியவை சுமார் 20 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டியதற்காக உள்ளூர் திட்டக் குழுமம், கோவை மாநகராட்சி மற்றும் வடவள்ளி பேரூராட்சி அலுவலகங்களில் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை.  இது தொடர்பாக கடந்த மே 10-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சனிக்கிழமை "சீல்' வைத்தனர்.

 

தூத்துக்குடியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சசிகலாபுஷ்பா உறுதி

Print PDF

தினத்தந்தி               15.06.2013

தூத்துக்குடியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சசிகலாபுஷ்பா உறுதி

தூத்துக்குடியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சசிகலா புஷ்பா உறுதி அளித்துள்ளார்.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று மாலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சசிகலாபுஷ்பா தலைமை தாங்கினார். துணை மேயர் சேவியர், ஆணையாளர் சோ.மதுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

கோட்டுராஜா: மாநகராட்சி பகுதியில் 7 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர் சசிகலாபுஷ்பா: அ.தி.மு.க. ஆட்சியில் இந்த அளவுக்காவது குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு உள்ளது.

குடிநீர்

ஆணையாளர் சோ.மதுமதி: தூத்துக்குடி மாநகராட்சிக்கு 21 ஆயிரம் லட்சம் லிட்டர் தண்ணீர் வந்தது. தற்போது 15 ஆயிரம் லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. பாபநாசம் அணை மூடப்பட்டதால் தண்ணீர் எடுப்பது பாதிக்கப்பட்டது. அதே போன்று வல்லநாடு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும் குடிநீர் பம்பிங் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாநகராட்சியில் உள்ள 8 நீர்த்தேக்க தொட்டிகளில் 6 நீர்த்தேக்க தொட்டி மூலம் சீராக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 2 தொட்டிகளை சேர்ந்த பகுதிகளுக்கு 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

மேயர்: வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அகஸ்டின்: பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து எங்கள் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

கெட்டப்பெயர்

மேயர்: பாதாள சாக்கடை திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி பணிகளை மாநகராட்சியே செய்தால்தான் விரைவாக திட்டத்தை முடிக்க முடியும். குடிநீர் வடிகால் வாரியம் பணிகளை மெதுவாக செய்வதால் மாநகராட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து திட்டத்தை முடிக்க வேண்டும் என்று வருத்தத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.

கோட்டுராஜா: தூத்துக்குடி மாநகராட்சி வருமானம் குறைந்த மாநகராட்சியாக உள்ளது. அம்மா உணவகத்துக்கு மாநகராட்சி நிதியில் இருந்து செலவு செய்வதால், ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்படும். ஆகையால் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மேயர்: எதிர்க்கட்சிக்காரர்களுக்கு தெரியும் போது, ஆளும் முதல்–அமைச்சருக்கு தெரியாமல் இருக்குமா?. இது குறித்து அறிக்கை கேட்டு உள்ளார்கள். அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்த நிலையில் வடக்கு மண்டல தலைவர் கோகிலா கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் கேட்ட போது, எனது 3–வது வார்டு பகுதிக்கு எந்த பணிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. அதனால் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டேன் என்று கூறினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் ரூ.75 லட்சம் செலவில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு கட்டுவது, மாநகராட்சி பகுதிகளில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைத்து செயல்படுகிறது. இதனை செயல்படுத்துவதற்கு மாநகர நல அலுவலர், உதவி ஆணையாளர், இளநிலை என்ஜினீயர், கணக்கு அலுவலர், வரித்தண்டலர், சுகாதார ஆய்வாளர் அடங்கிய குழு அமைப்பது, ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியே 66 லட்சம் செலவில் சாலைகள் அமைப்பது, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் சாலைகள் அமைப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 170 of 506