Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மதுரை அருகே துணைக்கோள் நகரம்: வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆய்வு

Print PDF

தினமணி               15.06.2013

மதுரை அருகே துணைக்கோள் நகரம்: வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆய்வு

மதுரை அருகே உச்சப்பட்டி - தோப்பூர் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள துணைக்கோள் நகரத்துக்கான பணிகளை, வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செயதார்.

 அண்மையில் நடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, துணைக்கோள் நகரம் பற்றிய அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இதன்படி, உச்சப்பட்டி - தோப்பூர் கிராமத்தில் 586.86 ஏக்கரில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் துவக்கியுள்ளது.

 முதல்கட்டமாக அணுகுசாலை வசதியுடன் உள்ள தோப்பூர் திட்டப் பகுதியில் 23.70 ஏக்கரில் 448 மனைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

  இரண்டாவது கட்டமாக 50.15 ஏக்கரில் 1000 மனைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மனை வரைபட அனுமதி கோரி உள்ளூர் திட்டக் குழுமத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு, விரைவில் அனுமதி பெறும் நிலையில் உள்ளது.

  மூன்றாவது கட்டமாக 586.86 ஏக்கரில் மனை மேம்பாட்டுத் திட்டம் துவங்குவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த துணைக்கோள் நகரத்தில் 19 ஆயிரத்து 500 மனைகள் உருவாக்கப்படுகிறது. இதில் 14 ஆயிரத்து 300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2 ஆயிரத்து 500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த திட்டத்தை வாரிய நிதியிலிருந்து செயல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ. 6.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 துணைக்கோள் நகரம் அமைப்பதற்காக தற்போது நடைபெற்றுவரும் பணிகளை 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டார். இத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

வாரிய தலைமைப் பொறியாளர் டி. ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர்

கே.பாலச்சந்தர், செயற்பொறியாளர். எல்.பிராங்க் பெர்னாண்டோ, தனக்கன்குளம் ஊராட்சித் தலைவர் கருத்தக்கண்ணன் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.

 

ஈரோடு காந்திஜி ரோடு அம்மா உணவகத்தில் அமைச்சர் சோதனை

Print PDF

தினத்தந்தி             14.06.2013

ஈரோடு காந்திஜி ரோடு அம்மா உணவகத்தில் அமைச்சர் சோதனை

ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீர் சோதனை செய்தார்.

அமைச்சர் திடீர் சோதனை

பெரிய நகரங்களில் உள்ள கூலித்தொழிலாளர்கள், ஏழை–எளியவர்கள் தரமான உணவு பெறும் வகையில் சென்னை உள்பட 10 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த உணவகங்களில் சாப்பிடுவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நேற்று ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் சோதனை செய்தார்.

அறிவுரை

உணவகத்துக்குள் சென்ற அவர், சமைக்க பயன்படுத்தும் அரிசி தரமானதா? என்று பார்வையிட்டார். மேலும் தரமான காய்கறிகள் பயன்படுத்தப்படுகிறதா? சமையல் அறை சுத்தமாக வைக்கப்பட்டு உள்ளதா? சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அம்மா உணவக பணியாளர்களுக்கு பல அறிவுரைகளையும் வழங்கினார். இந்த சோதனையின் போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, மண்டல தலைவர் ரா.மனோகரன், உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் ஜீவா ராமசாமி உள்பட பலர் இருந்தனர்.

 

கோவை மாநகர பகுதி மக்கள் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த முன்வர வேண்டும் மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி              14.06.2013

கோவை மாநகர பகுதி மக்கள் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த முன்வர வேண்டும் மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள்

கோவை மாநகர பகுதியில் உள்ள மக்கள் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த முன்வர வேண்டும் என்று மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கருத்தரங்கு

மத்திய அரசின் எரிசக்தித்துறை, கோவை மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் சூரிய ஒளி மூலம் வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு கோவையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் க.லதா தலைமை தாங்கினார். மரபு சாரா எரிசக்தித்துறை துணை பொதுமேலாளர் பங்கஜ்குமார், ஆலோசகர் அஜய் சந்தக் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மேயர் செ.ம.வேலுசாமி குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சோலார் சிட்டி

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சூரியசக்தி மூலம் மின்சாரத்தை தயாரிக்க சிறப்பான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். அவர் எடுத்து வரும் நடவடிக்கையால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் பெற்று, தெருவிளக்குகள், சமையல் அடுப்பு, குளிர்சாதன கருவி, வாசிங்மெஷின், குளிர்சாதனப்பெட்டி போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள 60 நகரங்களில் கோவை மாநகரம் சோலார் சிட்டி என்று மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித்துறை அறிவித்து உள்ளது.

பயன்படுத்த வேண்டும்

கோவை மாநகராட்சியில் உள்ள அரசு கட்டிடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடஇந்தியாவில் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த மத்திய அரசு உடனுக்குடன் மானியம் வழங்கி வருகிறது. அதுபோன்று தமிழகத்திலும் மானியத்தை உடனடியாக வழங்கினால் பலர் அதை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

கோவை மாநகர பகுதியில் உள்ள தொழில்துறையினர், தனியார் கட்டிட உரிமையாளர்கள், தனியார் கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்த முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் நமது நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி பேசினார். கருத்தரங்கில் மண்டல தலைவர் ஜெயராம், மாநகராட்சி பொறியாளர் சுகுமார், மாநகராட்சி தொழில் ஆலோசகர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 172 of 506