Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டர்கள் பறிமுதல்

Print PDF

தினமணி               14.06.2013

குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டர்கள் பறிமுதல்

ிருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சப் பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை  நகராட்சிப் பகுதியின் பல்வேறு இடங்களில் மின் மோட்டார்கள் பொறுத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், வியாழக்கிழமை நகராட்சி ஆணையர் விஜயலட்சுமி தலைமையில், பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பே-கோபுரம், 4-வது தெருவில் உள்ள வீடு, கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட விரோதமாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டர்கள் பொருத்தி குடிநீர் உறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 8 மின் மோட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆணையர் எச்சரிக்கை: நகராட்சிப் பகுதியில் இதுபோன்று மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், குறிப்பிட்ட வீடு மற்றும் கடைக்கு மறு குடிநீர் இணைப்பு வழங்குவதும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். எனவே, நகராட்சிப் பகுதி பொதுமக்கள் இனிமேல் குடிநீர் உறிஞ்சும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று நகராட்சி ஆணையர் விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.

 

விண்ணப்பித்த ஒரு வாரத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வீடு தேடி வரும்!

Print PDF

தினமணி               14.06.2013

விண்ணப்பித்த ஒரு வாரத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வீடு தேடி வரும்!

பிறப்பு, இறப்புச் சான்று கோருபவர்கள், விண்ணப்பத்துடன் ரூ.5-க்கான ஸ்டாம்புடன், சரியான விலாசத்தை கொடுத்து விட்டுச் சென்றால் ஒரு வார காலத்துக்குள் சான்றுகள் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம் கூறினார்.

குடியாத்தம் நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் அமுதாசிவப்பிரகாசம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பிறப்பு, இறப்புச் சான்றுகள் கோரி விண்ணப்பிப்போரிடம் கட்டாயப்படுத்தி பணம் கேட்பதாக நகர்மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்து அமுதா பேசுகையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களை அழைத்து எச்சரிக்கைப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது. சான்று கோரி விண்ணப்பிப்போரிடம் யாராவது பணம் கேட்டாலோ, இடைத் தரகர்கள் தொந்தரவு இருந்தாலோ புகார் தெரிவிக்கலாம்.

பிறப்பு, இறப்புச சான்று கோருபவர்கள், விண்ணப்பத்துடன் ரூ. 5 க்கான ஸ்டாம்புடன், சரியான விலாசத்தை கொடுத்து விட்டுச் சென்றால் ஒரு வார காலத்திற்குள் சான்றுகள் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

நகரில் உரிய அனுமதியின்றி வீடுகள் கட்டப்படுவதாகத் தெரிவித்துள்ள புகார் தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அமுதா கூறினார்."காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக, பள்ளிகொண்டாவிலிருந்து வரும் பைப்லைன், பொன்னம்பட்டி அருகிலிருந்து, சந்தப்பேட்டை வரை கௌன்டன்யா ஆற்றில் புதைக்கப்பட உள்ளது. இதற்காக ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டி பொதுப்பணித்துறைக்கு நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்' என நகர்மன்ற உறுப்பினர் ஜி.எஸ். அரசு கோரிக்கை விடுத்தார்.

"புதிய பஸ் நிலையத்திலிருந்து, நெல்லூர்பேட்டை காந்தி சவுக் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. மாணவர்கள், பெண்கள் நலன்கருதி அச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்துக்கு ஏற்றார்போல் சாலையை மேம்படுத்த வேண்டும்' என உறுப்பினர் எஸ். உதயகுமார் கோரிக்கை விடுத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், ஆணையர் (பொறுப்பு) ஜி. உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் எஸ். ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்பு இல்லாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு!

Print PDF

தினமணி               14.06.2013

மழைநீர் சேகரிப்பு இல்லாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு!

மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாத கட்டடங்களுக்கான அனுமதியை ரத்து செய்தல், குடிநீர் இணைப்பைத் துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளைத் தொடருவது என அரக்கோணம் நகராட்சி முடிவு செய்துள்ளது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் தலைமை தாங்கினார். நகர்மன்றத் தலைவர் (பொறுப்பு) கே.ராஜா, நகராட்சி பொறியாளர் ராஜவிஜயகாமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நகரில் உள்ள கட்டடங்கள் மற்றும் இனி கட்டப்பட உள்ள, இப்போது கட்டப்பட்டுவரும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கண்டிப்பாக வைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு இல்லாத கட்டடங்களுக்கு அனுமதியை ரத்து செய்வது, குடிநீர் இணைப்பைத் துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளை தொடருவது என முடிவு செய்யப்பட்டது.

திறந்தவெளியில் மல,ஜலம் கழிப்பதற்கு தடை!

இதைத் தொடர்ந்து, திறந்தவெளியில் மல,ஜலம் கழிப்பதைத் தடை செய்வது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக குடிசைப் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பொது கழிவறைகளைச் சுத்தமான முறையில் பராமரிப்பது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

 


Page 174 of 506