Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வாலாங்குளம், உக்கடம் குளங்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை நிரந்தரமாக அகற்ற திட்டம்

Print PDF
தினத்தந்தி               13.06.2013

வாலாங்குளம், உக்கடம் குளங்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை நிரந்தரமாக அகற்ற திட்டம்


கோவையில் உள்ள வாலாங்குளம், உக்கடம் குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை நிரந்தரமாக அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  

ஆகாயத்தாமரைகள்  

கோவை மாநகராட்சி பகுதியில் வாலாங்குளம், சிங்காநல்லூர், குறிச்சி, முத்தனங்குளம் உள்பட 8 குளங்கள் உள்ளன. இந்த குளங்களை மேம்படுத்த மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கான உத்தரவு வந்ததும், பணிகள் தொடங்கப்பட உள்ளது. கோவையில் உள்ள வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரை வளர்ந்து காணப்படுகிறது. அவற்றை மாநகராட்சி சார்பில் அவ்வப்போது அகற்றப்பட்டாலும், தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

அகற்ற முடிவு

குளத்தில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அழுகுவதால் அந்தப்பகுதியில் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் குளத்தின் அருகே குடியிருந்து வருபவர்களுக்கும், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே குளங்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் அவற்றை நிரந்தரமாக அகற்ற அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–

ரூ.20 லட்சம் செலவு


கோவையில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளத்தில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் கடந்த ஆண்டில் அகற்றப்பட்டது. மீண்டும் அங்கு வளர்ந்து விட்டது. அதை நிரந்தரமாக அகற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள ஒரு குளத்தில் ஆகாயத்தாமரைகளை நிரந்தரமாக அகற்றி உள்ளனர். அதை எவ்வாறு அகற்றினார்கள் என்பதை அறிந்துகொள்ள மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி பெற்றனர். அந்த முறையில் வாலாங்குளம், உக்கடம் குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற திட்டமிட்டு வருகிறது. இதற்கு ரூ.20 லட்சம் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

ஒழிக்க நடவடிக்கை

கடந்த ஆண்டில் ஒரு முறை மட்டுமே அகற்றப்பட்டதால் மீண்டும் வளர்ந்துவிட்டது. எனவே இந்த முறை ஒரு வருடத்துக்கு அவற்றை தொடர்ந்து அகற்றி, அதை நிரந்தரமாக ஒழிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

விளக்கு கம்பங்களில் விளம்பரப் பலகைகள்: அபராதம் விதிக்க முடிவு

Print PDF
தினமணி             13.06.2013

விளக்கு கம்பங்களில் விளம்பரப் பலகைகள்: அபராதம் விதிக்க முடிவு


தெருவிளக்குக் கம்பங்களின் வழியே செல்லும் கேபிள் டி.வி, இன்டர்நெட் வயர்கள் மற்றும் அதில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றாத தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

மாநகராட்சி மின்துறை ஊழியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலோசனை நடத்தினர்.

அப்போது தெருவிளக்குக் கம்பங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் கேபிள் வயர்கள் காரணமாக பராமரிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை என அவர்கள் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விளக்குக் கம்பங்களில் விளம்பர பலகைகள், வயர்களை வைத்துள்ள நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. தெருவிளக்குக் கம்பங்களில் உள்ள பலகைகள், வயர்களை ஜூன் 10-ஆம் தேதிக்குள் அகற்றுமாறு ஏற்கெனவே மாநகராட்சி கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

கோவை மாநகராட்சி கமிஷனர் லதா வெளியிட்டுள்ள அறிக்கை:

Print PDF
தினகரன்        12.06.2013

கோவை மாநகராட்சி கமிஷனர் லதா வெளியிட்டுள்ள அறிக்கை:


கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 80, 81, 82, 83, 84 ஆகிய ஐந்து வார்டுகள், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 22, 23, 24 ஆகிய மூன்று வார்டுகள் என மொத்தம் எட்டு வார்டுகளில், புகைப்படத்துடன்கூடிய தேசிய அடையாள அட்டைக்கு, புகைப்படம் எடுக்கும் முகாம் கடந்த 10ம்தேதி துவங்கியது. தொடர்ந்து வரும் 20ம்தேதி வரை நடக்கிறது.

எட்டு வார்டுகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பணி நடக்கிறது. இம்முகாம்களில் புகைப்படம் எடுப்பதற்கு வசதியாக கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக வந்து விண்ணப்ப படிவங்கள் வழங்குவார்கள். இதை பூர்த்தி செய்து, ரேஷன்கார்டு நகல்களுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

புகைப்படம் எடுப்பவர்கள், குடும்பத்துடன் அல்லது தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
 


Page 175 of 506