Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மேலூரில் விதிமீறிய கட்டடங்கள் இடிக்க கலெக்டர் உத்தரவு

Print PDF
தினமலர்                 05.06.2013

மேலூரில் விதிமீறிய கட்டடங்கள் இடிக்க கலெக்டர் உத்தரவு


மேலூர்: மேலூரை நடந்து சுற்றிப் பார்த்த கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, விதிமீறிய கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார். "விதிமீறியவர்கள் "யாராக' இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்' என எச்சரித்தார்.

மேலூர் நகராட்சி குறை தீர்க்கும் கூட்டத்தை முடித்த கலெக்டர், நகரில் விதிமீறிய கட்டடங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார்.

சுண்ணாம்பு காளவாசல் பகுதியில், விதிமீறிய கட்டடம், அதற்கு குறைவாக வரி விதித்தது குறித்து விசாரித்தார். செக்கடியில் புதிதாக கட்டப்படும் 3 மாடி கட்டடத்திற்கு 1350 சதுர அடி மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆயிரம் அடிக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டுள்ளதால், அதை இடிக்க உத்தரவிட்டார்.

பட்டாளம் சுடுகாட்டில், கட்டப்பட்டு வரும் மயான மேடையை இடித்து விட்டு மீண்டும் கட்ட வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது கலெக்டர்கூறியதாவது :

நகராட்சியின் வரி வருவாயை அதிகரிக்கும் நோக்குடன், "ரேண்டமாக' சில கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட வரி குறித்து ஆய்வு செய்தேன். 1700 சதுர கட்டடத்திற்கு 720 சதுர அடி என வரி விதிக்கப் பட்டிருந்தது.

இதனால் விதி மீறிய கட்டடங்கள், வரி விதிப்பு குறித்த வேறு நகராட்சி அதிகாரிகளை கொண்டு ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விதி மீறி செயல்பட்டிருப்பதாக ஆதாரம் இருந்தால், "யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும், என்றார்.

ஒரே நாளில் மேலூரை "கலக்கிய' கலெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.
 

அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதியது போலீஸ் பாதுகாப்புடன் உணவு வினியோகம் ரூ.43 ஆயிரத்துக்கு விற்பனை

Print PDF
தினத்தந்தி       05.06.2013

அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதியது போலீஸ் பாதுகாப்புடன் உணவு வினியோகம் ரூ.43 ஆயிரத்துக்கு விற்பனை


வேலூர் மாநகராட்சி பகுதியில் திறக்கப்பட்ட 10 அம்மா உணவகங்களிலும் நேற்றும் கூட்டம் அலைமோதியது. நேற்று 15,141 இட்லிகள் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.43 ஆயிரத்து 289 வசூல் ஆனது.

அம்மா உணவகங்கள்

வேலூர் மாநகராட்சியில் வேலூர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகிலும், சத்துவாச்சாரி பீடி தொழிலாளர் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்பட 10 இடங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அம்மா மலிவு விலை உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணிவரை ஒரு ரூபாய்க்கு இட்லியும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை ரூ.5–க்கு சாம்பார் சாதம், ரூ.3–க்கு தயிர் சாதம் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டம் அலைமோதியது

நேற்று காலை 10 உணவகங்களிலும் நேற்று காலை டோக்கன் பெற கூட்டம் அலைமோதியது. டோக்கன் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்து இட்லிகளும் விற்று தீர்ந்தன. அதேபோல் பகல் 12 மணிக்கு அனைத்து உணவகத்திலும் சாம்பார், தயிர் சாதங்கள் 2 மணிக்குள் விற்று தீர்ந்தன. நேற்று காலை எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் டோக்கன் வாங்க பொதுமக்கள் முண்டியடித்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து பகலில் 12–15 மணி முதல் சாம்பார், தயிர் சாதங்கள் விற்பனை நடந்தது. நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றிருந்தனர். இதனால் தெற்கு மற்றும் மகளிர் போலீசார் அங்கு வந்து பொதுமக்களை முண்டியடித்து செல்லாமல் 10, 10 பேராக உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் கவுன்சிலர் துரையரசன், துப்புரவு ஆய்வாளர் லூர்துசாமி ஆகியோரும் பொதுமக்களை வரிசையில் நிற்க வைத்தனர்.

ரூ.43 ஆயிரம் வசூல்

நேற்று 15 ஆயிரத்து 141 இட்லியும், 4 ஆயிரத்து 6 சாம்பார் சாதம், 2 ஆயிரத்து 706 தயிர் சாதமும் விற்பனை செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ.43 ஆயிரத்து 289 வசூல் ஆனது. மாநகராட்சி கமிஷனர் ஜானகி கூறுகையில், ‘அம்மா உணவகத்தில் தனியார் அனைத்து டோக்கன்களையும் வாங்கி வினியோகிப்பதாக கூறப்படுகிறது. அதனால் அங்குள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மொத்த டோக்கன்களையும் கொடுக்க கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது‘ என்றார்.
 

ஈரோடு ஆர்.என்.புதூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீர் ஆய்வு

Print PDF
தினத்தந்தி       05.06.2013

ஈரோடு ஆர்.என்.புதூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீர் ஆய்வு


ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீரென்று ஆய்வு செய்தார்.

‘அம்மா உணவகம்’

ஈரோடு மாநகராட்சியில் 10 இடங்களில் ‘அம்மா உணவகங்கள்’ தொடங்கப்பட்டு உள்ளன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. காலையில் உணவகங்கள் திறந்தது முதல் மூடும் வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பொதுமக்களுக்கு தரமான உணவை வழங்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அமைச்சர் திடீர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று ஆர்.என்.புதூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவகத்துக்குள் சென்று உணவக அமைப்பை பார்வையிட்டார். மேலும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த இட்லியை கேட்டு வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்தார். அப்போது அவர் இட்லி நன்றாக இருப்பதாக கூறினார்.

இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம், மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனா பழனிச்சாமி, ஒன்றியக்குழு தலைவர் கண்ணம்மா முத்துசாமி, மாநகராட்சி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி ஆணையாளர் சண்முக வடிவேல், தாசில்தார் சுசீலா, ஒன்றிய ஆணையாளர் அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 


Page 181 of 506