Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குமாரபாளையத்தில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு

Print PDF
தினமணி       27.05.2013

குமாரபாளையத்தில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு


குமாரபாளையம் நகராட்சியில் சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்பட்ட பூங்கா திறப்பு விழா சின்னப்பநாயக்கன்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன் தலைமை வகித்தார். ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, நாமக்கல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், குமாரபாளையம் நகர்மன்ற துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஏகே.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் வரவேற்றார்.

 தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி பூங்காவைத் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது:

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், கர்நாடக அரசும் வஞ்சித்ததால் கரைபுரண்டு ஓடும் காவிரி வறண்டு காணப்படுகிறது. விவசாயம் பாதித்து குடிநீருக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பொழுது போக்கவும், மன நிம்மதி பெறவும் குழந்தைகளுக்கும், முதியோருக்கும் இந்தப் பூங்கா பேருதவியாக இருக்கும். சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தப் பூங்காவுக்கு நிதியுதவி வழங்கியோர் பாராட்டுக்குரியவர்கள்.

நாமக்கல், திருச்செங்கோடு பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காக்களைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது. இதனை, சிறப்பும் அழகும் குறையாத வகையில் பாதுகாக்க வேண்டும்.

குமாரபாளையம் தொகுதியில் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கல்வியை வழங்கும் வகையில் அரசுக் கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பினை வழங்கும் கலைப் படிப்புகளைத் தேர்வு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பல்வேறு உதவிகளுடன், மடிக் கணினியும் வழங்குகிறது என்றார்.

திட்ட இயக்குநர் சி.மாலதி, ஆணையர் க.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் முருகேசன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மதிமுக நகரச் செயலர் சிவக்குமார், பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

பெங்களூரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை

Print PDF
தினமணி        27.05.2013

பெங்களூரில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை


பெங்களூரில் டெங்கு காய்சல் பரவாமல் தடுக்க பெங்களூர் மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துவருகிறது.

இது குறித்து பெங்களூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அண்மைகாலமாக பெங்களூரில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. கொசுமூலம்பரவும் டெங்குகாய்ச்சல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர்சித்தையா ஆலோசனை நடத்தினார். 2012-ஆம் ஆண்டில் பெங்களூரில் 1041 பேர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்தனர். 2013-இல் 66 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசு இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கொசு மருந்துள்ள புகை அடிக்கப்பட்டுவருகிறது. எனினும், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஆணையர் அறிவுறுத்தினார்.

2 முதல் 7 நாள்களுக்கு தொடர்ந்துகாய்ச்சல் இருந்தால், அத்துடன் தலைவலி, கண்களின் பின்புறம் வலி,கைகால் வலி, மூட்டுவலி, வாந்தி, உடல்சோர்வு ஏற்பட்டால் மாநகராட்சி பரிந்துரை மருத்துவமனைகளில் பொதுமக்கள் ரத்த சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்கள் சுத்தமான நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, தொற்றுநோய் பரவாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். பொதுமக்கள் பின்பற்ற வேண்டியமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தேங்கியுள்ள சுத்தநீரில் கொசு இனப்பெருக்கம் செய்வதால், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகள், மேல்தொட்டிகளை முழுமையாக காலிசெய்விட்டு பின்னர் தண்ணீர் நிரப்ப வேண்டும். வெளியே வீசப்படும் உடைந்த மண்பாண்டம், பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் குடுக்கை(மூடி),டயர்கள், ஏர்கூலர், பூந்தொட்டிகளில் நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கொசு வராமல் தடுக்க ஜன்னல், கதவுகளில் வலை பொருத்த வேண்டும்.  கொசுவலையின்கீழ் படுக்க வேண்டும். கொசுக்களை அழிப்பது தொடர்பாக புகார்கள் இருந்தால், 080-22660000 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

சி.எம்.டி.ஏ. காலியிடங்களில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: தமிழக அரசு

Print PDF
தினமணி               26.05.2013

சி.எம்.டி.ஏ. காலியிடங்களில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: தமிழக அரசு


சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்குச் சொந்தமான காலியிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் அறிவுறுத்தினார்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மறைமலைநகரில் இப்போது 32 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்படுத்தப்பட்டு வரும் தொழிற்பேட்டை மனைப்பிரிவை அமைச்சர் வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

அப்போது, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்குச் சொந்தமான காலியிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அவற்றவும், அந்த இடங்களில் குடியிருப்பு மனைப் பிரிவுகளையும், தொழிற்பேட்டை மனைப் பிரிவுகளையும் உருவாக்கி அந்தப் பகுதியில் குடியிருப்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.
 


Page 194 of 506