Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ரிப்பன் மாளிகை புனரமைப்பு பணிஅக்டோபர் மாதத்தில் முடியும் மேயர் சைதை துரைசாமி தகவல்

Print PDF

தமிழ் முரசு              22.04.2013

ரிப்பன் மாளிகை புனரமைப்பு பணிஅக்டோபர் மாதத்தில் முடியும் மேயர் சைதை துரைசாமி தகவல்

http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_12876093388.jpg

சென்னை:சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தை புனரமைக்கும் பணி வரும் அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என மேயர் சைதை துரைசாமி கூறினார்.சென்னை மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம், இன்று காலை 10.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் கூடியது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். ஆணையாளர் விக்ரம் கபூர், துணை மேயர் பெஞ்சமின் முன்னிலை வகித்தனர். முதலில் கேள்வி, பதில் நேரம் தொடங்கியது. இதில் உறுப்பினர்கள் பேசியதாவது:தமிழ்ச்செல்வன் (காங்கிரஸ்): சென்னை மாநகராட்சி முழுவதும் எத்தனை பொது கழிப்பிடங்கள் உள்ளன? அதில் கட்டண கழிப்பிடம் எத்தனை, இலவச கழிப்பிடம் எத்தனை, மாநகராட்சியால் நேரடியாக பராமரிக்கப்படும் கழிப்பிடம் எத்தனை?

மேயர் துரைசாமி: மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 890 கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றில் கட்டண கழிப்பிடம் 102, மாநகராட்சி நேரடி பராமரிப்பில் 846 இலவச மற்றும் கட்டண கழிப்பிடம் உள்ளது. ஒப்பந்ததாரர்களால் 29 கழிப்பிடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சேதம் அடைந்த நிலையில் 12 கழிப்பிடம் உள்ளது.

சீனிவாசன் (அதிமுக): ரிப்பன் மாளிகை கட்டிடத்தை புனரமைக்கும் பணி எப்போது முடியும்?
மேயர்: புனரமைக்கும் பணி 2009&ம் ஆண்டு நவம்பர் 16&ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பணிக்கு ரூ.9.55 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் கூடுதலாக ரூ.5.8 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதத்தில் பணிகள் முடிவடையும். இவ்வாறு மேயர் சைதை துரைசாமி கூறினார்.
திமுக வெளிநடப்பு

கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், அம்பத்தூர் மண்டல குழு தலைவர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் எழுந்து, மேயரை சூழ்ந்து நின்று பத்திரிகைகளில் மாநகராட்சி பற்றி வெளிவந்த செய்திகள் குறித்து பேச அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

மன்றத்துக்கு வெளியே சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில், ‘’மேயராக மு.க.ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் இருந்தபோது சென்னை சிங்கார சென்னையாக இருந்தது. இப்போது சென்னை சீரழிந்து வருகிறது. குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறது, கொசுத் தொல்லை அதிகரிக்கிறது. எங்கும் குப்பையாக காட்சி அளிக்கிறது. இதுபற்றி பேச அனுமதி தரவில்லை. அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொள்வோம்’’ என்றார்.

 

கோவை ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை மேயர் தகவல்

Print PDF
தினத்தந்தி       22.05.2013

கோவை ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை மேயர் தகவல்


கோவை ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திட்டமிட்டபடி கழிவு நீர் பண்ணை அமைக்கப்படும் என்றும் மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைமேயர் லீலாவதி உண்ணி, கமிஷனர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 13 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:–

25 டன் இறைச்சிக்கழிவுகள்

கோவை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 850 டன் அளவுக்கு குப்பைகள் சேருகிறது. இதில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன் இறைச்சி கழிவுகள் தரம்பிரிக்கப்படாத நிலையில் திடக்கழிவுகளுடன் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த கழிவுகளை தனியாக பிரித்து சேகரித்து, ஒரு இடத்தில் குவித்து, மாசு கட்டுப்பாடு வாரிய நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் கழிவுகளை அழிக்க மாநகராட்சி ஒப்புதல் கோரப்பட்டது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. கோழிகழிவுகள், இறைச்சி கழிவுகளை கடைகள் தோறும் சென்று சேகரிக்கவும், அந்தந்த பகுதியில் கடை ஊழியர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காத இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் தெரிவித்தார்.

கோவையில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த ரூ.16 லட்சம் செலவில் கூடுதலாக 2 வாகனங்கள் வாங்கி, தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த தீர்மானமும் நிறைவேறியது.

ஒண்டிபுதூர் கழிவுநீர் பண்ணை


ஒண்டிப்புதூர் கழிவு நீர் பண்ணை திட்டத்துக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மேயர் செ.ம.வேலுசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:–

கோவையில் பாதாளசாக்கடை திட்டத்தில் சேகரமாகும் கழிவுநீரை சுத்திகரிக்க ஒண்டிப்புதூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.67 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைத்தால்தான் சாக்கடை நீர் தேங்காமலும, கொசு உற்பத்தியாகாமலும் தடுக்க முடியும். எனவே இந்த திட்டத்துக்கான தொடக்கவிழா விரைவில நடைபெறும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒண்டிப்புதூர் சிந்துநகர் பகுதியில் அமைக்க கூடாது என்று என்னிடமோ, மாநகராட்சி கமிஷனரிடமோ இதுவரை யாரும் மனு அளிக்கவில்லை. திடீரென்று எதிர்ப்பு தெரிவிப்பதன் உள்நோக்கம் தெரியவில்லை. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.
 

கோவையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை என்ன? மாநகராட்சி கமிஷனர் லதா விளக்கம்

Print PDF
தினத்தந்தி               22.05.2013

கோவையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை என்ன? மாநகராட்சி கமிஷனர் லதா விளக்கம்


கோவையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை என்ன? என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்தார்.

சிறுவாணி அணை

கடந்த ஆண்டுகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதத்தில் (ஜூன்) தென்மேற்கு பருவமழை பெய்தால் தான் சிறுவாணி அணை உயிர் பெறும் நிலையில் உள்ளது.

சிறுவாணி அணையில் தற்போது நீர்மட்டம் இருப்பு நிலைக்கு கீழ் சென்று விட்டதால், தற்போது ரூ.66 கோடி செலவில் ஆற்றில் மோட்டார்கள் மூலம் பம்பிங் செய்து கோவைக்கு குடிநீர் கொண்டுவரப்படுகிறது.

சிறுவாணியில் இருந்து தினசரி 95 எம்.எல்.டி வரை எடுக்கப்பட்டு வந்த தண்ணீர் வெகுவாக குறைந்தது. தற்போது மோட்டார் மூலம் பம்பிங் செய்வதால் 25 முதல் 30 எம்.எல்.டி அளவில் தினசரி தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி பகுதியில் குறிப்பிட்ட வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது.

பில்லூர் முதல், 2–வது திட்டம்


சிறுவாணி அணையை பொறுத்தவரை இருப்பு நிலைக்கு கீழே போய், மோட்டார் வைத்து பம்பிங் செய்யும் நிலைக்கு வந்து விட்டதால், இன்னும் எத்தனை நாட்கள் தண்ணீர் கிடைக்கும் என்பது நம்பிக்கையில்லாத நிலையில் உள்ளது. அதற்குள் மழை வந்தால் தான் சிறுவாணி உயிர் பெறும்.

இந்த நிலையில், சிறுவாணியை தவிர பில்லூர் முதல், மற்றும் 2–வது குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது நிர்ணயிக்கப்பட்ட அளவான 125 எம்.எல்.டியில் இருந்து 120 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதி வார்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இது தவிரகுறிச்சி குனியமுத்தூர் பகுதிகளில் ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. மேலும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 11 எம்.எல்.டி தண்ணீர் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இருந்தாலும் கோவை மாநகராட்சியில் பகுதியில் சில வார்டுகளில் குடிநீர் வருவது பிரச்சினையாக உள்ளது. இருந்தாலும் பல வார்டுகளில் வாரத்துக்கு ஒரு முறை என்ற வகையில் கிடைத்து விடுகிறது. இருந்தாலும் பல வார்டுகளில் குடிநீர் போதிய அழுத்தம் இல்லாமல் குறைவாக வருகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் எப்போது தண்ணீர் வரும் என்ற கேள்விக்குறியும் உள்ளது.

மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் லதா விடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:– கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் சிறுவாணி குடிநீர் தற்போது 9 வார்டுகளில் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. பில்லூர் முதல், 2–வது திட்டத்தின் மூலம் தினசரி 120 எம்.எல்.டி கிடைக்கிறது. இருந்த போதிலும் குடிநீர் வினியோகத்தில் மின்தடை காரணமாக பம்பிங் செய்வதில் பிரச்சினை உள்ளது. இதனால் அழுத்தம் குறைவாக உள்ள சில வார்டுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாகவும், குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

இது தவிர பில்லூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் குறையவில்லை. சிறுவாணியும் தற்போது பம்பிங் செய்வதால் 9 வார்டுகளுக்கு வந்து விடுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு என்பது கோவை மாநகரை பொறுத்தவரை இல்லை. மேற்கண்ட சில காரணங்களால் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினை கடுமையாகும் போது, சில வேளைகளில் லாரித்தண்ணீரும் வினியோகம் செய்யப்படுகிறது. ஆகவே குடிநீர் பிரச்சினை என்பது மாநகராட்சி பகுதியில் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 


Page 203 of 506