Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

"ஸ்நாக்ஸ்' சாப்பிட அழைத்த அதிகாரி 15 நிமிடம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 13 தீர்மானம் ஓ.கே.,

Print PDF

தினமலர்       22.05.2013

"ஸ்நாக்ஸ்' சாப்பிட அழைத்த அதிகாரி 15 நிமிடம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 13 தீர்மானம் ஓ.கே.,

கோவை:கோவை மாநகராட்சி அவசர கூட்டத்தில், எவ்வித விவாதமின்றி, 15 நிமிடத்தில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேநேரத்தில், "ஸ்நாக்ஸ்' சாப்பிட கவுன்சிலர்களை அன்புடன் அழைத்தார் மாநகராட்சி துணை கமிஷனர்.கோவை மாநகராட்சி அவசரக்கூட்டம், மேயர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், ஒவ்வொரு தீர்மானத்தை மேயர் வாசித்து முடித்ததும், நிறைவேற்றப்படுகிறது என அவரே அறிவித்தார்.

ரயில்வே மேம்பால பணிகளுக்காக ரோடுகளை ஒப்படைக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தி.மு.க., கவுன்சிலர் சாமி பேசுகையில், ""ரயில்வே மேம்பால பணிக்காக ரோடுகளை, நெடுஞ்சாலைத்துறை வசம் நிரந்தரமாக ஒப்படைக்க வேண்டாம். அவர்கள், சர்வீஸ் ரோடுகளை பராமரிப்பதில்லை பணிகள் நடக்கும் வரை தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.குறுக்கிட்ட மேயர், ""ரயில்வே மேம்பால பணிகளுக்காக, மாநகராட்சி ரோடுகளை நெடுஞ்சாலைத்துறை வசம் நிரந்தரமாக ஒப்படைக்காவிட்டால், மேம்பால திட்ட மதிப்பில் 50 சதவீதம் மாநகராட்சி செலுத்த வேண்டும்.

""ரோடுகளை நெடுஞ்சாலைத்துறை வசம் நிரந்தரமாக ஒப்படைத்தால், திட்டப்பணிக்கு மாநகராட்சி பணம் செலுத்த தேவையில்லை. சர்வீஸ் ரோட்டை மாநகராட்சி வசம் திரும்ப பெறுவது பற்றி முடிவு செய்யப்படும்'' என்றார்.இக்கூட்டத்தில், 13 தீர்மானங்களையும் மேயர் வாசித்து முடித்ததும், "கூட்டம் நிறைவடைந்தது', எனக்கூறி, இருக்கையில் இருந்து எழுந்தார். காலை 11:30 மணிக்கு துவங்கிய கவுன்சில் கூட்டம், 11:45 மணிக்கு நிறைவடைந்தது. வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போட்டு, அமர்வுப்படி பெறுவதற்குள் கவுன்சில் கூட்டம் நிறைவு பெற்றதால் கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

"கவுன்சிலர்களுக்கு ஒரு வேண்டுகோள்' என, அறிவித்த துணை கமிஷனர் சிவராசு;

""அனைவருக்கும் "ஸ்நாக்ஸ், டீ' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இருக்கையில் அமரவும். வருகைப்பதிவேட்டில் தவறாமல் கையெழுத்திட்டு செல்லவும்'' என்றார்.

 

அடுக்குமாடிகளுக்கு "சீல்'

Print PDF
தினமலர்       22.05.2013

அடுக்குமாடிகளுக்கு "சீல்'
 


மதுரை:மதுரையில், உள்ளூர் திட்டக்குழுமத்தில் அனுமதி பெறாத கட்டடங்களுக்கு, கலெக்டரின் "சீல்' வைக்கும் நடவடிக்கை தொடர்கிறது.

மதுரையில் அனுமதி பெறாமல், விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நடவடிக்கை எடுத்து வருகிறார். கட்டப்படும் சில வணிகவளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சமீபத்தில் "சீல்' வைக்கப்பட்டது. சம்பக்குளத்தில், காதர்முத்து என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், 6 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி அனுமதி வாங்கியவர்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக உள்ள நிலையில், உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதி பெறவில்லை.

மேலும், தேவையான இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விதிமுறை மீறி கட்டப்பட்டு இருப்பதாகக் கூறி, கலெக்டர் நேற்று "சீல்' வைத்தார். இதேபோல், எல்லீஸ்நகரில் ஒய்.டபிள்யூ. சி.ஏ., அமைப்பின் அடுக்குமாடி கட்டடத்திற்கும் "சீல்' வைக்கப்பட்டது. ஆறு மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்திற்கும், மாநகராட்சி அனுமதி மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 

பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க மக்கள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டுகோள்

Print PDF
தினமலர்                 22.05.2013

பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க மக்கள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டுகோள்


விழுப்புரம்:விழுப்புரத்தில் பாதாளசாக்காடை பணிகள் முடிவடைய பொதுமக்கள் பங்களிப்பு தொகையை விரைவாக செலுத்த வேண்டுமென சேர்மன் பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.விழுப்புரம் நகராட்சியில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு தொகை இணைந்து கடந்த 2008ம் ஆண்டு பாதாளசாக்கடை திட்ட பணிகள் துவங்கின. 35.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய பணிகளுக்கு, தற்போது திருந்திய நகராட்சி நிர்வாக அனுமதி மூலம் 43.36 கோடி ரூபாய் பெறப்பட்டது.
 
நகரில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து இறுதி கட்டமாக பைப் லைன்கள் பொறுத்தும் பணி நடக்கிறது. பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு செய்யப்பட்டு, ஏரி நீர் பாசனத்திற்கு வழங்க காகுப்பம், எருமனந்தாங்கலில் இரு சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இதில் காகுப்பத்தில் 90 சதவீதம், எருமனந்தாங்கலில் 75 சதவீதம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் முடிந்தது. தற்போது இயந்திரங்கள் பொறுத்தும் பணி நடக்கிறது. இறுதி கட்டத்தில் உள்ள பணிகளை நேற்று சேர்மன் பாஸ்கரன் பார்வையிட்டு, மீதமுள்ள பணிகளின் நிலவரங்கள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
 
கமிஷனர் ராஜேந்திரன், பொறியாளர் பார்த்தீபன், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் சாம்ராஜ் உடனிருந்தனர்.இந்த பணிகளுக்காக பொது மக்கள் பங்களிப்பு தொகை 758 லட்சம் ரூபாய் நகராட்சி சார்பில் நிர்ணயிக் கப்பட்டது. இதில் நகராட்சி மூலம் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக 395 லட்சம் ரூபாய் பெறப் பட்டுள்ளது. மீதம் 363 லட்சம் ரூபாய் மக்களின் பங்களிப்பு தொகை பாக்கியுள்ளது. விழுப்புரம் நகரில் இறுதி கட்டத்தில் உள்ள பாதாள சாக்கடை பணி முடிந்து நடைமுறைக்கு வர பொது மக்கள் மீதமுள்ள பங்களிப்பு தொகையை விரைவாக செலுத்துமாறு சேர்மன் பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 


Page 204 of 506