Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டாதீர்கள்

Print PDF
தினகரன்        22.05.2013

இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டாதீர்கள்


கோவை, : கோவை மாநகரில் இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்ட வேண்டாம், கடை கடையாக மாநகராட்சி ஊழியர்களை நேரில் வந்து எடுத்துச்செல்வார்கள் என கமிஷனர் லதா கூறினார்.

கோவை மாநகரில் இறைச்சி கடை நடத்துவோர், மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் அதை சாப்பிட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. அத்துடன், சாலையின் குறுக்கும், நெடுக்குமாக ஓடி வாகன ஓட்டிகளை விபத்துக்கு உள்ளாக்குகிறது. எனவே, இறைச்சி கழிவுகளை, வியாபாரிகள் சாலையோரம் கொட்டக்கூடாது, தங்கள் கடைகளிலேயே மூட்டை மூட்டையாக கட்டி வைக்கவேண்டும், அதை மாநகராட்சி ஊழியர்கள் நேரில் வந்து எடுத்துச்செல்வார்கள் என நேற்று நடந்த மாமன்ற கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:

கோவை மாநகரில் 100 வார்டுகளிலும் தினமும் 250 மெட்ரிக் டன் குப்பை சேகரம் ஆகிறது. மாநகராட்சியுடன், 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு ஊராட்சி என 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்ட பிறகு குப்பையின் அளவு அதிகரித்துள்ளது. இவற்றில், தினம் 15 முதல் 25 டன் இறைச்சி கழிவுகளும் சேகரம் ஆகிறது. இவை, இரண்டாம் தர மருத்துவ கழிவுகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கழிவை முறையாக அழிக்காவிட்டால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும்.

மாநகரில் உள்ள பல இறைச்சி கடை வியாபாரிகள் நள்ளிரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை சாலையோரம், குளம், ஏரி, கால்வாய் ஓரம் கொட்டிச்சென்று விடுகின்றனர். இது, தவறு. இப்படி செய்வதால் தெருநாய்கள் இவற்றை சாப்பிட வருவதுடன், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது.

எனவே, இனி, இறைச்சி வியாபாரிகள் இக்கழிவுகளை பிளாஸ்டிக் கவரில் மூட்டையாக கட்டி, கடை ஓரத்தில் வைத்துவிட்டு சென்றால், தினமும் அதிகாலையில் மாநகராட்சி சுகாதார பணியாளர்களே நேரில் வந்து எடுத்துச்செல்வார்கள். இவற்றை, ஒரு இடத்தில் போட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் ‘இன்சினரேஷன்‘ முறையில் அழிக்கப்படும். விரைவில், தனியார் நிறுவன பங்களிப்புடன் இவை முறைப்படி அழிக்கப்பட உள்ளது.
 

பேரூராட்சிகளில் வளர்ச்சி பணி: எம்.பி. ராசா ஆய்வு

Print PDF
தினகரன்        22.05.2013

பேரூராட்சிகளில் வளர்ச்சி பணி: எம்.பி. ராசா ஆய்வு


பெ.நா.பாளையம், :  கூடலூர் கவுண்டம்பாளையம் மற்றும் நெ.4 வீரபாண்டி பேரூராட்சி வளர்ச்சி பணிக்காக நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 27 லட்சம் ஒதுக்கப்பட்டது.  
 அதை தொடர்ந்து கூடலூர் பேரூராட்சி ராவுத்தூர் கொல்லனூரில் ரூ. 14 லட்சம்  மதிப்பில், தரை பாலம் அமைக்கப்படுகிறது.  வீராபாண்டி பேரூராட்சி பகுதியில் வடிகால் ரூ. 14 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. அப்பணிகள் குறித்து  நீலகிரி பாராளுமன்ற தொகுதி எம்பி ராசா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழகம் சார்பில் எம்பி ராசாவுக்கு,  நகர செயலாளர் பத்மாலயாசீனிவாசன் தலைமையில், மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், பேரூராட்சி தலைவர் அறிவரசு,  முன்னாள் துணைத்தலைவர்கள் வீரபத்திரன், ராஜேந்திரன், நகர செயலாளர் ஸ்ரீனிவாசன், கணேசமூர்த்தி, ரங்கநாதன் மாவட்ட தொண்டரணி அமைப்பா ளர் தனக்குமார்,  முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாந்தாராம், கவுன்சிலர்கள் பழனிச்சாமி, முத்துலட்சுமி, மீனா, முருகானந்தம் உள்ளிட்ட பலர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 

மதுரையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு "சீல்'

Print PDF
தினமணி         22.05.2013

மதுரையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு "சீல்'

மதுரை மாநகராட்சிப் பகுதியில், உள்ளூர் திட்டக் குழுமம் அனுமதியின்றி கட்டப்பட்ட 2 அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகிலுள்ள சம்பக்குளத்தில் காதர்முத்து என்பவர், தரைத் தளத்துடன் கூடிய 3 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டியுள்ளார். 6,000 சதுர அடியில் 6 வீடுகளை உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ள இக் கட்டடத்துக்கு, வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா என உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மதுரை மாநகராட்சியில் முன்பு நகரமைப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், மாநகராட்சியின் அதிகார வரம்பை மீறி முறைகேடாக இந்த கட்டடத்துக்கு அனுமதி வழங்கியிருப்பது தெரியவந்தது.  

உள்ளூர் திட்டக் குழுமத்தில் விண்ணப்பித்து கட்டட வரைபட அனுமதி பெறாத இந்த கட்டடத்துக்கு "சீல்' வைக்க மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இந்த கட்டடத்துக்கு உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் சங்கரமூர்த்தி தலைமையில் அலுவலர்கள் சென்று "சீல்' வைத்தனர்.

இதேபோன்று, எல்லீஸ்நகர் தொலைத்தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஒய்டபிள்யூசிஏ அமைப்பு சார்பில் தரைத்தளத்துடன் கூடிய 5 அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

30,000 சதுர அடியில் கட்டடப்பட்டுள்ள இக் கட்டடத்துக்கு உள்ளூர் திட்டக் குழுமத்தில் கட்டட வரைபட அனுமதி பெறப்படவில்லை. அதேசமயம், முந்தைய மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் பணியாற்றிய அலுவலர் ஒருவரிடம் முறைகேடாக அனுமதி பெறப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, இந்தக் கட்டடத்துக்கும் உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் "சீல்' வைத்தனர்.
 


Page 205 of 506