Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் பணி நிறுத்தம் 15 நாள் அவகாசம் அளித்து கலெக்டர் உத்தரவு

Print PDF
தினமலர்            10.05.2013

விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் பணி நிறுத்தம் 15 நாள் அவகாசம் அளித்து கலெக்டர் உத்தரவு


கோவை:கோவையில் விதிமீறல் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் நடவடிக்கை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கட்டட உரிமையாளர்களும் தீத்தடுப்பு மற்றும் அவசர கால வசதிகளை சரி செய்ய, மாவட்ட நிர்வாகம் 15 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

கோவை, அவிநாசி ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில், ஏப்., 25ல் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பெண்கள் பலியாகினர். இதையடுத்து, விதி மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது மாநகராட்சியும், உள்ளூர் திட்டக் குழுமமும் நடவடிக்கை எடுத்து வந்தன. மாவட்ட, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகர் ஊரமைப்பு சட்டம் -1971ன் பிரிவு 56, 57ன் கீழ் அனுமதியற்ற மற்றும் அனுமதிக்கு மாறாக இருந்த 59 கட்டடங்கள் "சீல்' வைக்கப்பட்டன. விதிமீறல் கட்டடங்கள் மீது, "சீல்' வைக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டதற்கு, மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தும், வர்த்தக நிறுவனங்கள், கட்டுமான துறையினர், மருத்துவமனை நிர்வாகங்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. கோவை கட்டுமானத் துறை கூட்டு நடவடிக்கைக் குழு, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனத்தினர், கூடுதல் கால அவகாசம் கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

"மாவட்டத்தில் உள்ள கட்டட வரைமுறைகள், கடந்த காலத்தில் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப அமைந்துள்ளன; வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப, சட்ட விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு குறைகளை சீர் செய்வதற்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். "சீல்' வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்' என இந்த அமைப்புகள் வலியுறுத்தின.

இதையடுத்து, கடந்த இரு வார காலமாக நடைமுறையில் இருந்த அதிரடி நடவடிக்கையை, மாவட்ட நிர்வாகம் தளர்த்தியுள்ளது.

கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்க 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதற்குள் அனைத்து கட்டட உரிமையாளர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்படி சரி செய்துக் கொள்ள வேண்டும். அனைத்து கட்டடங்களிலும் தீத்தடுப்பு மற்றும் அவசர கால வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 2007ம் ஆண்டுக்கு முன் உள்ள கட்டடங்களுக்கு, அரசு விதி தளர்வு செய்து அனுமதிக்கப்பட்ட சலுகையை பயன்படுத்தி வரைமுறை செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.
 

பிரச்னைகளை தீர்ப்பதில் மாநகராட்சி ஆர்வம் புகார் வந்தது 2433 நடவடிக்கை எடுத்தது 2127

Print PDF
தினமலர்          10.05.2013

பிரச்னைகளை தீர்ப்பதில் மாநகராட்சி ஆர்வம் புகார் வந்தது 2433 நடவடிக்கை எடுத்தது 2127


கோவை:கோவை மாநகராட்சிக்கு எஸ்.எம்.எஸ்.,சில் புகார் வந்தது 2433; அதில் நடவடிக்கை எடுத்தது 2127 என அதிகாரிகள் கூறினர். இப்பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில் தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை அடைப்பு, குப்பை தேக்கம் உள்ளிட்ட பொதுப்பிரச்னைகள் இருந்தால், மாநகராட்சி நிர்வாகத்திற்கு "எஸ்.எம்.எஸ்' மூலமாக தெரிவிக்க 92822 02422 என்ற மொபைல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி வரையிலும், மொத்தம் 2433 "எஸ். எம்.எஸ்' புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 2127 புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், "எஸ்.எம்.எஸ்' புகார் அனுப்பியவர்களிடம், மாநகராட்சி கமிஷனர் லதா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பாரதி வித்யா பவன் பள்ளி எதிரில் குப்பை உடனடியாக அகற்றப்பட்டதையும், வடவள்ளி பாரதியார் பல்கலை அருகில் குப்பை அகற்றியதையும், இடையர்பாளையம் 3வது வீதியில் சாக்கடை தூர்வாரப்பட்டதையும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வேணுகோபால் லே-அவுட்டில் சாக்கடை அடைப்பு அகற்றப்பட்டதையும் ஆய்வு செய்தார்.

அப்போது, பொதுமக்களிடம் வீட்டிலிருந்தவாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு "எஸ்.எம்.எஸ்' அனுப்பினால் போதும். அதிகாரிகள் வீடு தேடி வந்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்' என, பொதுமக்ளிடம் மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார்.

கமிஷனர் லதா கூறுகையில், ""மாநகராட்சியின் புகார் "எஸ்.எம்.எஸ்' முறைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஓரிடத்தில் இருந்தே மக்களின் பிரச்னைகளை அறிந்து, நிவர்த்தி செய்ய முடிகிறது. இந்த திட்டத்தில் எந்த தொய்வும் ஏற்படாமல் கண்காணிக்கப்படும்'' என்றார்.
 

மதுரை மாவட்டத்தில் முன்னோடியாகிறது: மேலூர் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகளுக்கு ஒட்டு மொத்த தடை ரூ.100, 500 அபராதம் விதிப்பு

Print PDF
தினத்தந்தி          09.05.2013

மதுரை மாவட்டத்தில் முன்னோடியாகிறது: மேலூர் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகளுக்கு ஒட்டு மொத்த தடை ரூ.100, 500 அபராதம் விதிப்பு

மதுரை மாவட்டத்தில் பாலிதீன் ஒழிப்பில் மேலூர் முன்னோடி நகராட்சியாக மாறியுள்ளது. பாலிதீன் பைகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிப்பதுடன், பொதுமக்களுக்கும் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.

முன்னோடி நகராட்சி

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பை ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தியது. வீடுவீடாக குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டு நகராட்சி ஊழியர்கள் மூலம் குப்பைகள் பெறப்பட்டன. தெருக்களில் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டது. இந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டதால், மேலூரில் தெருக்களில் குப்பை குவிவது தடுக்கப்பட்டது.

இதையடுத்து பாலிதீன் பைகள் பயன்பாட்டுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாமி எம்.எல்.ஏ. முயற்சியால் மேலூர் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு தமிழக அரசின் கெசட்டில் வெளியிடப்பட்டது.

பாலிதீன் பையில் டீ

இதற்கு முன்பு வரை மேலூரில் அனைத்து இடங்களிலும் பாலிதீன் பைகள் பயன்படுத்தப்பட்டன. சுடச்சுட டீயை கூட பாலிதீன் பைகளில் ஊற்றி கொடுத்து வந்தனர். பலசரக்கு கடைகள், காய்கறி என அனைத்து இடங்களிலும் பாலிதீன் ஆக்கிரமித்திருந்தது. கடைகளில் காகித பையில் பொட்டலம் போடுவதே மறந்தே போய்விட்டது.

இந்த நிலையில் பாலிதீன் ஒழிப்பை தீவிரப்படுத்த மேலூர் நகராட்சி முடிவு செய்தது. பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி 4 தடவை விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. நகராட்சி தலைவர் சரவணன் தலைமையில் வீடுவீடாக சென்று பாலிதீன் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு விழிப்புணர்வு நோட்டீசுகள் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து தடை அமல்படுத்தப்பட்டது.

பயன்படுத்தினால் அபராதம்

கடந்த ஒருவாரமாக பாலிதீன் தடை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடைகளில் பாலிதீன் பைகள் கொடுத்தால் அவர்களுக்கு அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதிக்கின்றனர். பொதுமக்கள் பாலிதீன் பைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றால், அவர்களை தடுத்து நிறுத்தி ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.

தொடக்கத்தில் இந்த அபராதம் விதிக்கும் போக்கு, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மக்களும் பாலிதீனை தவிர்க்க பழகிவிட்டனர். பொருட்கள் வாங்க, வீட்டில் இருந்து புறப்படும்போதே பைகளுடன் புறப்படுகின்றனர். காய்கறி கடைகளில் பாலிதீன் பைகள் இல்லை என்று அறிவிப்பு பலகையே வைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை மேலூர் தொடர வேண்டும் என்றும், பிற நகராட்சிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 


Page 215 of 506