Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

எஸ்எம்எஸ் புகார் திட்டம் மாநகராட்சி கமிஷனர் வீடுதேடி சென்று ஆய்வு

Print PDF
தினகரன்              07.05.2013

எஸ்எம்எஸ் புகார் திட்டம் மாநகராட்சி கமிஷனர் வீடுதேடி சென்று ஆய்வு


கோவை: எஸ்எம்எஸ் புகார் திட்டத்தின்படி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது பற்றி கமிஷனர் லதா வீடு தேடிச்சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்ய ‘எஸ்எம்எஸ்‘ திட்டம் கடந்த மாதம் 2ம்தேதி துவக்கப்பட்டது. இதற்காக, 9282202422 என்ற மொபைல் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தங்கள் பகுதியில் உள்ள பிரச்னை, புகார் தெரிவிப்பவரின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பார்கள் என மேயர் செ.ம.வேலுசாமி, கமிஷனர் லதா ஆகியோர் அறிவித்தனர். தினமும் இந்த எண்ணுக்கு வரும் எஸ்எம்எஸ்களை பெற்று, உடனுக்குடன் பதில் அனுப்ப வும், இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.

இத்திட்டம் துவக்கப்பட்டு, ஒரு மாதம் தாண்டிவிட்டதால், அதிகாரிகள் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்பது பற்றி தெரிந்துகொள்ள கமிஷனர் லதா நேற்று அதிரடியாக வீடு தேடிச்சென்று ஆய்வு மேற்கொண்டார்.

23வது வார்டுக்கு உட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வந்த எஸ்எம்எஸ் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, குப்பைகள் முறையாக அகற்றப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.

15வது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி பாரதியார் பல்கலைக்கழகம் அருகேயுள்ள ஸ்ரீதக்ஷா கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் ஆய்வுசெய்து, முறைப்படி குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதா, குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார்.

7வது வார்டுக்கு உட்பட்ட இடையர்பாளையம் 3வது வீதியில் இருந்து வரப்பெற்ற எஸ்எம்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சாக்கடை சரிவர தூர்வாரப்பட்டதா என அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வேணுகோபால் லேஅவுட் பகுதியை பார்வையிட்டார். சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றவும், மழைநீர் வடிகால்களை தூர் வாரவும் உத்தரவிட்டார்.
இதுபற்றி கமிஷனர் லதா கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாத காலத்தில் எஸ்எம்எஸ் மூலம் 2,433 புகார்கள் வரப்பெற்றுள்ளன.

இவற்றில், 2,127 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருசில புகார்கள் தொடர்பாக சரியான முகவரி இல்லை. புகார் தெரிவிப்பவர்கள் தங்களது பெயர், முகவரி, ஏரியா பிரச்னை பற்றி முழுமையான தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்‘‘ என்றார்.

கமிஷனரின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
 

நகராட்சியில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகள்

Print PDF
தினமணி        06.05.2013

நகராட்சியில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகள்


கரூர் நகராட்சியில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வழங்கினார்.

கரூர் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் நவீன பெயர் பலகைகள் அமைக்கும் விழா, மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார்.

அமைச்சர் வி. செந்தில்பாலாஜி பங்கேற்று, கருணை அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர், 3 துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கரூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களுக்கு நவீன பெயர் பலகைகளை அமைக்கும் பணியையும் தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், நகராட்சி ஆணையர் (பொ) ல. கோபாலகிருஷ்ணன், நகராட்சிப் பொறியாளர் நா. புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நகராட்சிக்குள்பட்ட 5 சாலை, பசுபதிபாளையம் ஆகியவற்றுக்கிடையே அமராவதி ஆற்றில் ரூ. 12.5 கோடியில் கட்டப்படவுள்ள உயர்நிலைப் பாலத்தின் ஆரம்ப கட்ட வேலைகளாக, ரூ. 25 லட்சத்தில் நகராட்சி குடிநீர் குழாய்கள் மற்றும் தெருவிளக்கு மின் கம்பிகளை மாற்றியமைக்கும் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 

மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க மேயர் வேண்டுகோள்

Print PDF
தினமணி        06.05.2013

மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க மேயர் வேண்டுகோள்


பில்லூர் குடிநீர் திட்டத்தின் குழாய்கள் உடைப்பு சரிசெய்யப்பட்டு விட்டதால், குடிநீர் விநியோகம் செய்யும் வரை மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மேயர் செ.ம.வேலுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: பில்லூர் முதலாவது, இரண்டாவது குடிநீர் திட்டக் குழாய்களில் சமீபத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் தற்போது அந்த உடைப்புகள் சரிசெய்யப்பட்டு விட்டன. ஆனால் குடிநீர் விநியோகம் செய்ய இன்னும் இரு நாள்கள் ஆகும். அதுவரை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
 


Page 220 of 506