Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஆபத்து விளைவிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள் கணக்கெடுப்பு 28 பேருக்கு நகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்

Print PDF
தினமலர்         03.05.2013

ஆபத்து விளைவிக்கும் அடுக்குமாடி கட்டடங்கள் கணக்கெடுப்பு 28 பேருக்கு நகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்


பொள்ளாச்சி : பொள்ளாச்சியிலுள்ள அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில், அவசர கால வழி ஏற்படுத்தாதது; உரிய பாதுகாப்பு வசதி இல்லாமலிருப்பது, தீத்தடுப்பு மற்றும் தீயணைப்பு கருவிகள் இல்லாமல் இருக்கும் கட்டடங்கள், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் கட்டடங்கள் குறித்து, பொள்ளாச்சி நகராட்சி நகரமைப்பு பிரிவு கணக்கெடுத்து வருகிறது.பொள்ளாச்சி நகராட்சி 72 சதுர கி.மீ., பரப்பளவைக்கொண்டது.

இங்கு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அதிகம். வெளி மாநில மற்றும் மாவட்ட மாணவர்களும் விரும்பிப்படிக்கும் வகையில் கல்லூரிகளும், பள்ளிகளும் இங்கு சகல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான பொள்ளாச்சியை, திரைப்படத்துறையினர் தேர்வு செய்து அதிக அளவில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். அதற்கேற்ப வசதியான லாட்ஜ்களையும், அடுக்குமாடி கட்டடங்களையும் எதிர்பார்க்கின்றனர்.அதற்கு தகுந்தாற்போல், இங்கு ஏராளமான அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்களின் எண்ணிக்கை நூறை தாண்டிவிட்டது.

இவற்றில் பெரும்பாலானவை அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன. அதில் சில அனுமதி பெற்று, அதை மீறி கட்டடப்பட்ட கட்டடங்களும் உள்ளன. இது போன்ற கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்துவதற்காக நகராட்சி நோட்டீஸ் வழங்கியது. ஆனால் பாதியிலேயே அப்பணியை நிறுத்தி விட்டது. இச்சூழலில், கோவையில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இக்கட்டடத்தில் அவசர கால வழி ஏற்படுத்தாததால், வெளியேற முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேர் இறந்தனர்.இச்சம்பவத்தையடுத்து, மாவட்டத்திலுள்ள அனைத்து அடுக்குமாடி கட்டடங்களுக்கும் அவசர கால வழி, தீத்தடுப்பு, தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பொள்ளாச்சியிலுள்ள அடுக்குமாடி கட்டடங்களை நகராட்சி நகரமைப்புஅலுவலர் சவுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் சாந்தி நிர்மலா பாய் உள்ளிட்ட நகரமைப்பு பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், நகரில் 28ல் அவசரகால வழி ஏற்படுத்தாமல் இருப்பதும், அதோடு தீத்தடுப்பு மற்றும் தீயணைப்புக்கருவிகள் முறையாக பொருத்தப்படாமல் இருப்பதும் தெரியவந்தது. இந்த 28 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இது தவிர, மற்ற அடுக்குமாடி கட்டடங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி சார்பில் அடுக்குமாடி கட்டட உரிமையாளர்களுக்கான அவசரக்கூட்டம் வரும் 4ம் தேதி நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் அவசரகால வழியின் அவசியம் குறித்தும், தீத்தடுப்பு, தீயணைப்பு சாதனங்களின் பயன்பாடு குறித்தும் விளக்கப்படுகிறது.பொள்ளாச்சி நகரமைப்பு அலுவலர் சவுந்தர்ராஜன் கூறுகையில், ""மாவட்ட நகராட்சிகள் சட்டம் 222ன் படி அடுக்குமாடி கட்டடங்களில், உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டடங்கள் கட்டப்படக்கூடாது; அதில் தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு கருவிகள் இல்லாமல் இருக்கக்கூடாது. இதை வலியுறுத்தி போதிய கால அவகாசம் கொடுத்து; 28 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கட்டடங்களுக்கு நோட்டீஸ் தொடர்ந்து வழங்கப்படும்,'' என்றார்.
 

நேற்று மூன்று! வணிக வளாக கட்டடங்களுக்கு "சீல்' மாநகராட்சி அதிரடி தொடர்கிறது

Print PDF
தினமலர்         03.05.2013

நேற்று மூன்று! வணிக வளாக கட்டடங்களுக்கு "சீல்' மாநகராட்சி அதிரடி தொடர்கிறது


கோவை:கோவை மாநகராட்சி பகுதியில், விதிமுறை மீறிய வணிக கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. இதுவரை 39 கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ளது.கோவை தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, மாநகராட்சி எல்லைக்குள் விதிமுறை மீறி கட்டிய கட்டடங்கள் மீது, உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உத்தரவுப்படி, கடந்த 27ம் தேதி, முதல், விதிமீறல், அனுமதியற்ற கட்டடங்களுக்கு "சீல்' வைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மாநகராட்சியில் ஐந்து மண்டலத்திலும் சேர்த்து 36 கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது.

நான்காம் நாளான நேற்று, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர், கிழக்கு மண்டலத்தில் ஒரு வணிக வளாகம், வடக்கு மண்டலத்தில் இரு கட்டடங்கள் என, மொத்தம் மூன்று கட்டடங்களுக்கு, "சீல்' வைத்தனர்.நகரமைப்பு அலுவலர் வரதராஜன் கூறுகையில், "" கோவையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 55 கட்டடங்களில், இதுவரை 28 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கட்டடங்களுக்கு "சீல்' வைக்கச் சென்ற போது, அதன் அருகிலிருந்த, 11 கட்டடங்களில் நடந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கும் "சீல்' வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 கட்டடங்களில் குடியிருப்புகளாக உள்ள இரண்டு கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,''.

"25 கட்டடங்களுக்கு, 24 மணி நேரத்தில் காலி செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதிக்குள் "சீல்' வைக்கும் பணி நிறைவடையும். கடந்த 27ல் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, குடியிருப்பு ஒன்றுக்கு "சீல்' வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்கும் இன்று "சீல்' வைக்கப்பட்டது,'' என்றார்.
 

2 வணிக வளாக கட்டடங்களுக்கு "சீல்'

Print PDF

தினமணி         03.05.2013

2 வணிக வளாக  கட்டடங்களுக்கு "சீல்'


விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட 2 வணிக வளாகங்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை "சீல்' வைத்தனர்.

கோவை, லட்சுமி மில் சந்திப்பில் உள்ள விக்னேஸ்வர் கிரஸ்டா என்ற வணிக வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

கோவையில் மொத்தம் 201 கட்டடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்திருந்தார்; மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 55 கட்டடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது தெரியவந்தது.

கோவை மாநகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை திருச்சி சாலையிலும், சத்தி சாலையிலும் உள்ள 2 வணிக வளாகங்களுக்கு "சீல்" வைத்தனர். இதுவரை மொத்தம் 38 வணிக வளாகங்கள் "சீல்' வைக்கப்பட்டுள்ளன.

 


Page 223 of 506