Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் எப்போதுதான் முடியும்? கவுன்சிலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

Print PDF
தினமலர்                26.04.2013

மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் எப்போதுதான் முடியும்? கவுன்சிலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்


கோவை : "இந்த பாழாப்போன பாதாள சாக்கடை வேலை எப்பதான் முடியுமோ... ஊரெல்லாம் தோண்டி போட்டு இப்படி பாடாபடுத்துறாங்களே...' என புலம்புபவர்கள், இனி தங்கள் வார்டு கவுன்சிலரிடமே கேட்டு பணியின் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பாதாள சாக்கடை திட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்த விபரங்களை, வார்டுவாரியாக கவுன்சிலர்களிடம் வழங்கப் போவதாக, மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளதே காரணம்.

மாநகராட்சியின் சாதாரண கூட்டம், மேயர் தலைமையில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில், கோவையில் நேற்று நடந்த தீ விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின் தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி பேசுகையில்,""சிட்கோ அருகே ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த ரோட்டில், நான்குவழிப்பாதை அமைக்க மாமன்றம் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்,'' என்றார்.

அதற்கு பதிலளித்த மேயர்,""இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது,'' என்றார்.

அம்மன் அர்ஜூணன்(அ.தி.மு.க) பேசுகையில்,""கோவை நகரிலுள்ள போக்குவரத்து சிக்னல்களில், காவல்துறை சார்பில் பல்வேறு விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அனுமதி பெற்றுள்ளார்களா?'' என்று கேட்டார்.

அதற்கு மேயர், ""காவல்துறை சார்பில் வைக்கப்படும் விளம்பரங்களில், தனியார் நிறுவனத்தின் பெயர்தான் பெரிய அளவில் உள்ளது. விளம்பரம் வைக்கும் நோக்கமே வீணாகிறது. காவல்துறை, மாநகராட்சி நிர்வாகத்தை அணுகினால், வேண்டிய நிதியுதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாத விளம்பரங்கள் மீது, கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவர் விளம்பரங்கள் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

நகரமைப்புக்குழு தலைவர் செந்தில்குமார் பேசுகையில்,""மலிவு விலை உணவகத்தை போத்தனூர், குறிச்சி பழைய நகராட்சி அலுவலகத்தில் உணவகத்தை அமைப்பதற்கு பதிலாக, சுந்தராபுரம், தக்காளி மார்க்கெட் பகுதியில் அமைத்தால், ஏழை, எளிய மக்கள் பலர் பயனடைவர்,'' என்றார்.

பதிலளித்த மேயர், ""இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இதன் பின் குடிநீர் தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த மேயர், ""சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 எம்.எல்.டி., ஆக இருந்த போது கடும் பிரச்னை ஏற்பட்டது. இப்போது 18 எம்.எல்.டி., அளவு மட்டுமே உள்ள நிலையிலும், 18 வார்டுகளுக்கு பில்லூர் குடிநீரும் வினியோகிப்பதால், குடிநீர் பிரச்னை பெரிதாக இல்லை.
மழை காலங்களில் மாநகராட்சி அதிகாரிகளும் கவுன்சிலர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.

இதன் பின் கவுன்சிலர்கள் சிலர், "புதிதாக சேர்க்கப்பட்ட வார்டுகளில், துப்புரவு பணியாளர்களுக்கு சரிவர ஊதியம் வழங்கப்படுவதில்லை, தெரு விளக்கு பராமரிப்பு சரியில்லை, பாதாள சாக்கடை திட்ட பணிகளின் நிலை குறித்த தகவல் இல்லை...,என பேசினர்.

பதிலளித்த மேயர்,""துப்புரவு பணியாளர்களுக்கு நேரடியாக ஊதியம் கொடுப்பது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது; விரைவில் அறிமுகப்படுத்தப்படும்,'' என்றார்.

தொடர்ந்து கமிஷனர் லதா, ""பாதாள சாக்கடை திட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து, வார்டு வாரியாக கவுன்சிலர்களுக்கு விரைவில் தகவல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

குப்பை லாரிகளில் ஜி.பி.ஆர்.எஸ்., திட்டம், அழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளில், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை, மே., 27 முதல் நகர்ப்புற நிர்வாகம் குறித்து சிங்கப்பூரில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் மேயர்,கமிஷனர் பங்கேற்பது உள்ளிட்ட 43 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சி கூட்டத்தில் பன்றி கிளப்பிய பரபரப்பு

பன்றியும், கொசுக்களும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்படுத்தும் பிரச்னை போதாதென்று,நேற்றைய மாநகராட்சி கூட்டத்திலும் விவாதத்தை கிளப்பின. தி.மு.க., வை சேர்ந்த சாமி பேசுகையில், ""குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது,'' என்றார்.

அதற்கு மேயர், ""குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்க்க தடை விதிப்பதே பிரச்னைக்கு தீர்வு. பன்றி வளர்ப்பவர்களுக்கு உரிய காலஅவகாசம் கொடுத்த பின், இத்திட்டத்தை அமல்படுத்தலாம்.

நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்புக்கு, உரிமம் பெறும் முறையை அமல்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும்,'' என பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தார்.

கவுன்சிலர்கள் வேணுகோபால், சாவித்திரி(அ.தி.மு.க.) விடாமல்,""எங்கள் வார்டுகளிலும் பன்றி தொல்லை அதிகரித்துள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை,'' என்றனர்.

உடனே அவசரம் அவசரமாக எழுந்த நகர்நல அலுவலர் சுமதி,""இந்த வார்டுகளில் நாங்கள் நிறைய பன்றி பிடித்துள்ளோம்,'' என்றார். அதற்கு கவுன்சிலர்கள், ""அவர் கூறுவது பொய். பன்றி பிடிக்கவும் இல்லை; ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றனர் கோரசாக.

கோபமான மேயர், ""பன்றிகளை பிடித்தீர்களா இல்லையா? தவறான தகவல்களை மாமன்ற வளாகத்தில் கூறுவதை நகர்நல அலுவலர் தவிர்ப்பது நல்லது,'' என கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 

குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சினால் நடவடிக்கை

Print PDF
தினமணி        25.04.2013

குடிநீர் குழாய்களில் மின் மோட்டார்  மூலம் நீரை உறிஞ்சினால் நடவடிக்கை

குடிநீர் குழாய்களில் மின் மோட்டாரை பொருத்தி நீரை உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

ஊராட்சிகளில் வழங்கப்பட்டு வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை தோட்டங்களுக்கு பாய்ச்சுதல், ஆடு, மாடுகளைக் குளிப்பாட்ட பயன்படுத்துவதாகப் புகார்கள் வருகின்றன. இவ்வாறு குடிநீரைப் பிற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதால், சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் இடர்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற செயல்களைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

மேலும், குடிநீர் குழாயின் அருகில் குழி தோண்டி தண்ணீர் பிடிப்பதால் டெங்கு காய்ச்சல், நீரினால் பரவும் நோய்கள் உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே, குழி தோண்டி தண்ணீர் பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

சில பகுதிகளில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி பயன்படுத்தி வருவது ஆய்வின் போதும், பொதுமக்களிடமிருந்து புகார்கள் மூலமும் தெரிய வருகிறது. இவ்வாறு மின் மோட்டார் வைத்து உறிஞ்சி பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்.

மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குடிநீர் இணைப்பைத் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், குடிநீர் குழாய்கள் மற்றும் ஆதாரங்களைச் சேதப்படுத்துபவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
 

தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி பறிமுதல்

Print PDF
தினமணி        25.04.2013

தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி பறிமுதல்


மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, போடியில் புதன்கிழமை அரசின் தடை உத்தரவை மீறி கடைகளில் விற்பனை செய்யப்பட்ட கோழி, ஆடு, மாட்டு இறைச்சிகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கடைகளில் இறைச்சி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து, போடி நகராட்சி நிர்வாகம் சார்பில் இறைச்சி விற்பனைக் கடைகளுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் தடையை மீறி இறைச்சி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்த கடைகளில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான், முத்துக்கிருஷ்ணன், தர்மராஜ், செந்தில், பாலமுருகன், மேற்பார்வையாளர்கள் கருப்பணன், முருகதாஸ், இளங்கோ ஆகியோர் சோதனை நடத்தி, மொத்தம் 100 கிலோ எடையுள்ள கோழி, ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளைக் கைப்பற்றி அப்புறப்படுத்தினர்.
 


Page 231 of 506