Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதி பெறாத இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை

Print PDF
தினமணி        17.04.2013

அனுமதி பெறாத இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை


கோவையில் உரிய அனுமதி பெறாமல் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஆணையாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் உரிய அனுமதி பெறாத இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் இருந்து இறைச்சிக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதாரக் கேடுகளும் ஏற்படுகின்றன.

அனுமதி பெறாமலும் மாநகராட்சியின் உரிமம் பெறாமலும் செயல்படும் இறைச்சிக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதிப்பதுடன் இறைச்சியும் பறிமுதல் செய்யப்படும். கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

"சென்னையில் மழைநீர் சேகரிப்பு குறித்து தணிக்கை'

Print PDF

தினமணி                 17.04.2013

"சென்னையில் மழைநீர் சேகரிப்பு குறித்து தணிக்கை'

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் சென்னையில் மழை நீர் சேகரிப்பு குறித்து தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசுகையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் வளர்ச்சி விதிமுறையில் ஒவ்வொரு கட்டடத்துக்கும் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு முறையை வலுவாக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்படும்.

பரந்த குடியிருப்புகளில் மக்களின் பொழுதுபோக்கு வசதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திறந்தவெளி இடங்களில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆலோசனையுடன் விளையாட்டு உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நில உபயோகத் தகவல்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நில உபயோகத் தகவல் தொகுப்பு உருவாக்கப்படும்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆய்வு மேற்கொள்ளும்.

வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை 63 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டு வரும் வெளிவட்டச் சாலையின் கிழக்குப் பகுதியில் எதிர்காலப் போக்குவரத்து வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 மீட்டர் நிலப்பகுதியின் மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் வைத்திலிங்கம்.

 

குடிநீர் வரி பாக்கி 25 லட்சம் ரூபாய் வசூல் 7 இணைப்பு துண்டிப்பு; கரூர் நகராட்சி அதிரடி

Print PDF
தினமலர்        17.04.2013

குடிநீர் வரி பாக்கி 25 லட்சம் ரூபாய் வசூல் 7 இணைப்பு துண்டிப்பு; கரூர் நகராட்சி அதிரடி


கரூர்: குடிநீர் வரி பாக்கி 25 லட்சம் ரூபாயை அதிரடியாக, கரூர் நகராட்சி வசூல் செய்தது. மேலும் ஏழு இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

கரூர் நகராட்சியில், 48 வார்டுகளில் 37,000 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரூர், தாந்தோனி, சணப்பிரட்டி, இனாம்கரூர் ஆகிய பகுதிகளுக்கு வாங்கல், நெரூர் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் போர்வெல் அமைக்கப்பட்டு, தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வீட்டு இணைப்பு தவிர, அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வங்கி, மருத்துவமனை, தனியார் மற்றும் அரசு கல்லூரிகள், பள்ளிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பழைய நகராட்சி பகுதிகளுக்கு, 93 ரூபாய், புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு 60 ரூபாய் என குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2012 நடப்பு 2013ம் நிதியாண்டு மார்ச், 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இதுவரை கரூர் நகராட்சியில் வீடு, அரசுதுறை, கல்விநிறுவனங்கள் என மொத்தம், நான்கு கோடியே, 14 லட்சத்து, 66 ஆயிரத்து, 684 ரூபாய் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.

இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணி, நகராட்சியில் திட்ட பணிகள், செலவினங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலுவை உள்ள குடிநீர் வரியை செலுத்தக்கோரி நகராட்சி சார்பில், நோட்டீஸ் அனுப்பியும் எந்த பலனுமில்லை.

கடந்த ஏப்ரல், 15ம் தேதியிருந்து நகராட்சிக்கு குடிநீர் வரி செலுத்தாத அனைத்து அலுவலகங்கள், வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு வருகின்றன. இந்த அதிரடி நடவடிக்கையால் நகராட்சி குடிநீர் கட்டணம் கணிசமான அளவு வசூலாகி உள்ளது.

இதுகுறித்து நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி கூறியதாவது:

குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு, 15ம் தேதி முதல் இணைப்புகள் துண்டிக்கும் பணி துவங்கியது. இதன்காரணமாக, 25 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலாகி இருக்கிறது. மேலும் அதிகளவில் நிலுவை வைத்துள்ள ஏழு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பாக்கியை செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு வரும், 27ம் தேதி வரை நடக்கும். பொதுமக்கள் இதை தவிர்க்க கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 


Page 238 of 506