Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள்: அமைச்சர் ஆய்வு

Print PDF
தினமணி          15.04.2013

பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள்: அமைச்சர் ஆய்வு


முதுகுளத்தூர், சாயல்குடி, அபிராமம், கமுதி ஆகிய பேரூராட்சிகளில்  வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதை அமைச்சர் சுந்தரராஜ்  ஆய்வு செய்தார்.

அபிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு வளாகத்துக்கு ரூ.9 லட்சம்  செலவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி, நரியன் சுப்பராயபுரத்தில் நபார்டு நிதி ரூ.20 லட்சம் செலவில் ஊருணி ஆழப்படுத்துதல், சுற்றுச் சுவர் கட்டுதல், படித்துறை கட்டுதல் ஆகிய பணிகளை அமைச்சர் சுந்தரராஜ் பார்வையிட்டார்.

அப்போது சிவகங்கை மண்டலப் பேரூராட்சிகள் உதவி செயற் பொறியாளர் சுரே ஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ராஜாராம் ஆகியோர் பணிகள் குறித்து விவரித்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, கவுன்சிலர்கள் முத்துச்செல்லம், சுப்பிரமணியன், புவனேஸ்வரி, பொன்னரசி பூபாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் கமுதி சென்ற அமைச்சர் பஸ் நிலையம் அருகே ரூ.40 லட்சம் செலவில்  பேரூராட்சி அலுவலகத்துக்கு கட்டடம் கட்டும் பணி, ரூ.25 லட்சம் செலவில் செட்டி ஊருணிக் கரையைப் பலப்படுத்தி நடைப் பயிற்சி பாதை அமைக்கும் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

அவரிடம் பேரூராட்சித் தலைவர் எஸ்.கே.சி. ரமேஷ் பாபு, உதவி செயற் பொறியாளர் சுரேஷ் குமார், செயல் அலுவலர் ஏ. தனபாலன் ஆகியோர் பணிகள் குறித்து விவரித்தனர்.

சாயல்குடி சென்ற அமைச்சர் தலா ரூ.50 லட்சம் செலவில் பேரூராட்சி அலுவலகம்  கட்டுதல், சிவன் கோயில் ஊருணி, ஆராட்டு ஊருணி மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சரிடம் பேரூராட்சித் தலைவர் ராஜலட்சுமி கண்ணப்பன், துணைத் தலைவர் குணசேகரன், உதவி செயற் பொறியாளர் சுரேஷ் குமார், செயல் அலுவலர் அபுகலாம் ஆசாத் ஆகியோர் பணிகள் குறித்து விவரித்தனர்.

கடைசியாக முதுகுளத்தூர் சென்ற அமைச்சர் சுந்தரராஜ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சரவணப் பொய்கை ஊருணியை நபார்டு வங்கி நிதி ரூ.85 லட்சம் மூலம் மேம்படுத்துதல், ஊருணியைச் சுற்றிலும் நடைப் பயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைப்புப் பணிகள் நடைபெறுவதைப் பார்வையிட்டார்.
 

பதாகைகள் வைக்க கட்சிகளுக்கு நிபந்தனை

Print PDF
தினமணி          15.04.2013

பதாகைகள் வைக்க கட்சிகளுக்கு நிபந்தனை


விழுப்புரத்தில், பதாகைகள் வைப்பதற்கு நகராட்சி மற்றும் காவல் துறையின் அனுமதி அவசியம் என்று விழுப்புரம் உட்கோட்ட காவல் துறை சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இக் கூட்டத்துக்கு டி.எஸ்.பி. சங்கர் தலைமை வகித்தார். நகர ஆய்வாளர் ராமநாதன், மேற்கு ஆய்வாளர் வாசுதேவன், தாலுக்கா ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீஸார் பலர் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் அதிமுக நகர முன்னாள் அவைத் தலைவர் அன்பழகன், தேமுதிக ஆதவன்முத்து, பாஜக சக்திவேல், இந்திய கம்யூனிஸ்ட் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் விழுப்புரம்-பாண்டி ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது. எனவே இரு சக்கர வாகனங்களை பூங்காத் தெரு, காந்திசிலை முதல் ஆஞ்சேநேயர் கோயில் வரை உள்ள பகுதிகளில் நிறுத்த வேண்டும். அதேபோல் அனுமதியின்றி யாரும் பதாகைகள் வைக்கக் கூடாது. பதாகைகள் வைப்பதற்கு முதலில் நகராட்சியிடமும், அதனைத் தொடர்ந்து காவல்துறையிடமும் அனுமதி பெற வேண்டும். நகராட்சி அனுமதி அளித்தால்தான் காவல் நிலையம் சார்பில் அனுமதி அளிக்கப்படும் உள்ளிட்ட கருத்துக்கள் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
 

சென்னையில் இரவு நேரங்களில் குப்பை அள்ளும் பணி மேயர் நேரில் ஆய்வு

Print PDF

தினத்தந்தி               14.04.2013

சென்னையில் இரவு நேரங்களில் குப்பை அள்ளும் பணி மேயர் நேரில் ஆய்வு


சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இரவு நேர குப்பை அள்ளும் பணியை மேயர் சைதை துரைசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இரவு நேர ஆய்வு

தமிழக முதல்–அமைச்சர் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் ஆணையாளர் விக்ரம் கபூர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் குப்பை எடுக்கும் பணியினை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுப்பணி இரவு 9 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை நடைபெற்றது.இந்த ஆய்வு குறித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:–தமிழக முதல்–அமைச்சர் குப்பை இல்லா சென்னை மாநகராட்சியை உருவாக்கிட வேண்டும் என்று உத்தரவிட்டதின் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

4,789 மெட்ரிக் டன் குப்பை


சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக, பகல் நேரங்களில் 3 ஆயிரத்து 266 மெட்ரிக் டன் குப்பைகளும், இரவு நேரங்களில் ஆயிரத்து 523 மெட்ரிக் டன் குப்பைகளும் ஆக மொத்தம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 789 மெட்ரிக் டன் குப்பைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் தமிழக முதல்–அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்காக கூடுதலாக 8 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்காக 9 ஆயிரத்து 537 நிரந்தர துப்பரவு பணியாளர்களும், தற்காலிகமாக 570 பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் 6 ஆயிரத்து 806 பேரும் துப்புரவு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

16,913 துப்புரவு பணியாளர்கள்

கடந்த ஆட்சி காலத்தில் 11 ஆயிரம் பேர் மட்டுமே துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது சென்னை மாநகராட்சியில் 16 ஆயிரத்து 913 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் சென்னை மாநகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 239 of 506