Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

போடி நகர்மன்றக் கூட்டம்

Print PDF
தினமணி       03.04.2013

போடி நகர்மன்றக் கூட்டம்


போடி நகர்மன்ற சாதாரண மற்றும் அவசரக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், ஆணையர் எஸ். சசிகலா, துணைத் தலைவர் ஜி. வேலுமணி, பொறியாளர் ஆர். திருமலைவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சங்கரபாண்டியன்: போடி நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் எப்போது தொடங்கும், முடங்கிப் போயுள்ள நவீன எரிவாயு தகன மேடை செயல்படுமா என, உறுப்பினர் சங்கரபாண்டியன் கேள்வி எழுப்பினார்.  நிதியமைச்சரை அணுகி பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது. மானியம் கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும் என தலைவர் பதிலளித்தார்.

நவீன எரிவாயு தகன மேடை பணியாளர்களுக்கு ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அது மீண்டும் முறையாக செயல்படும் என ஆணையர் தெரிவித்தார்.

முரசுபாலு: வஞ்சி ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர் தரமாக இல்லாததால், பல இடங்களில் சேதமடைந்துள்ளது. ஒப்பந்தப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என உறுப்பினர் முரசுபாலு தெரிவித்தார்.

அழகர்: தெரு விளக்குகளைப் பராமரிக்க, பழுது பார்க்க ஹைட்ராலிக் இயந்திர வாகனம் வாங்க வேண்டும். போடி நகரில் பல இடங்களில் குடிநீரை மின்மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்துகின்றனர். நடவடிக்கை தேவை என உறுப்பினர் அழகர் தெரிவித்தார். அதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதிலளித்தார்.

சங்கர்: போடி நகராட்சி வாரச் சந்தையில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. வாரச் சந்தைக்கு வருபவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகிலுள்ள பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. போடி நகரில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் விதிமீறல் உள்ளது என உறுப்பினர் சங்கர் புகார் தெரிவித்தார். அதற்கு, வாரச் சந்தையை சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்படும் என தலைவர் பதிலளித்தார்.

கோபிநாத்: சென்னை, கோவை, திருப்பதி செல்லும் ஆம்னி பேருந்துகள் முறையின்றி நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி அதற்கென தனியாக இடம் ஒதுக்கி கட்டணம் வசூலித்தால், நகராட்சி வருவாயும் அதிகரிக்கும் என உறுப்பினர் கோபிநாத் தெரிவித்தார்.
 

நகராட்சியாகிறது செம்பாக்கம் பேரூராட்சி

Print PDF
தினமணி          03.04.2013

நகராட்சியாகிறது  செம்பாக்கம் பேரூராட்சி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பாக்கம் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை, உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசுகையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை தாம்பரத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பாக்கம் பேரூராட்சி வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதியாகும். பல அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள இப்பகுதி பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று வருகிறது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செம்பாக்கம் பேரூராட்சியில் 47 ஆயிரத்து 771 பேர் வசிக்கின்றனர். பேரூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.5 கோடியாக உள்ளது. எனவே, செம்பாக்கம் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். அமைச்சர் முனுசாமி.
 

நகராட்சி ஆணையரகம், பேரூராட்சி இயக்குரகம் கட்ட ரூ. 25 கோடி

Print PDF

தினமணி               03.04.2013

நகராட்சி ஆணையரகம், பேரூராட்சி  இயக்குரகம் கட்ட ரூ. 25 கோடி


நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சி இயக்குநர் அலுவலகத்துக்கு நவீன வசதிகளுடன் ரூ. 25 கோடியில் புதிய அலுவலகம் கட்டப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை, உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசுகையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

9 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 7 நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகங்கள் ஆகியவற்றின் தலைமை அலுலகமாக நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதுபோல 529 பேரூராட்சிகள், 16 பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகங்களின் தலைமை அலுவலகமாக பேரூராட்சிகளின் இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இவற்றுக்கு, பணியாளர்களுக்கான இட வசதி, அலுவலர்கள் அறை, ஆவண காப்பகம், நூலகம், கூட்ட அரங்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடங்கள் ரூ. 25 கோடியில் கட்டப்படும்.

ரூ. 6.34 கோடியில் பஸ் நிலையங்கள்: நீலகிரி மாவட்டம் நெல்லியாளம், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஆகிய நகராட்சிகளில் ரூ.6.34 கோடியில் பஸ் நிலையங்கள் கட்டப்படும்.

பஸ் நிலைய உள்கட்டமைப்புக்கு ரூ.14.72 கோடி: குடியாத்தம், திருவத்திபுரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ராசிபுரம், கரூர், மேட்டுப்பாளையம், பல்லடம், பரமக்குடி, கொமாரப்பாளையம், திருத்துறைப்பூண்டி ஆகிய நகராட்சிகளில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையங்களில் கூடுதல் பஸ் நிறுத்தமிடங்கள், பொருள் பாதுகாப்பு அறைகள், நவீன கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ரூ. 14.72 கோடியில் ஏற்படுத்தப்படும்.

ரூ.14.66 கோடியில் கூடுதல் அலுவலக் கட்டடங்கள்: ஆற்காடு, திருவண்ணாமலை, மேல்விஷாரம், சிதம்பரம், காயல்பட்டினம், ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், பவானி, குழித்துறை, உடுமலைப்பேட்டை ஆகிய 10 நகராட்சிகளில் ரூ.14.66 கோடியில் கூடுதல் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்றார் அமைச்சர் முனுசாமி.

 


Page 257 of 506