Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் துவக்கம்

Print PDF
தினமணி       02.04.2013

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் துவக்கம்


பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, நகராட்சி சார்பில் மருத்துவமனையிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பொள்ளாச்சி உடுமலை சாலையில் அமைந்துள்ளது மாவட்ட தலைமை மருத்துவமனை.

இந்த மருத்துவமனைக்கு பொள்ளாச்சி, சுற்று வட்டார கிராமங்கள், வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் தினமும் 5 மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை நகராட்சி சார்பில் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திட்டத்தை தொடங்கி வைத்து நகர்மன்றத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் பேசியது:

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற, பாலக்காடு சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு வர வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதை தவிர்க்கும் விதமாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவர் பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்காக தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். தினமும் காலை 11 மணி முதல் 12 மணி வரை மருத்துவமனை வளாகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் அ.சுந்தராம்பாள், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொ) கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் மூசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

சென்னையில் துப்புரவுப் பணிகள் தனியார்மயமாக்கப்படும்: அமைச்சர் கே.பி. முனுசாமி

Print PDF
தினமணி       02.04.2013

சென்னையில் துப்புரவுப் பணிகள் தனியார்மயமாக்கப்படும்: அமைச்சர் கே.பி. முனுசாமி


சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணிகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அவர் தாக்கல் செய்த நகராட்சி நிர்வாகம் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. ஆனாலும், குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் சில தனியார் நிறுவனங்கள் மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 9, 10, 13 ஆகிய மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

துப்புரவுப் பணியாளர்கள் இல்லாததால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அனைத்து மண்டலங்களிலும் துப்புரவுப் பணிகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படும்.

இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ரிப்பன் மாளிகை, விக்டோரியா அரங்கம் சீரமைப்புப் பணி 2013-ல் முடிக்கப்படும்: சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மளிகை, விக்டோரியா பொது அரங்கம் ஆகியவை மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக இதுவரை ரூ. 11.06 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2013-ல் ரிப்பன் மாளிகைக்கு நூற்றாண்டு விழா என்பதால் இப்பணிகள் 2013-ல் முடிக்கப்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

பணிக் காலத்தில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி

Print PDF
தினமணி       02.04.2013

பணிக் காலத்தில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி


பணிக் காலத்தில் மரணமடைந்தவர்களின் வாரிசுகள் 17 பேருக்கு கருணை அடிப்படையில் பணி உத்தரவுகளை கோவை மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி திங்கள்கிழமை வழங்கினார்.

பதிவுரு எழுத்தர் 1, அலுவலக உதவியாளர் 2, தேர்ச்சித் திறனற்ற பணியாளர் 2, துப்புரவுப் பணியாளர் 12 பேர் என மொத்தம் 17 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி உத்தரவும், ஒருவருக்கு நகர சுகாதார செவிலியருக்கான உத்தரவும் வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மாநகர பொறியாளர் ஜி.கருணாகரன், தெற்கு மண்டல உதவிப் பொறியாளர் ஆர்.பத்மா, துப்புரவுப் பணியாளர் மயிலாத்தாள், மேற்கு மண்டல துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ், மத்திய மண்டல அலுவலக உதவியாளர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் மார்ச் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவர்களுக்கு பணிப் பலன்களை   வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் க.லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, நியமனக் குழு உறுப்பினர் ராஜேந்திரன், மண்டலத் தலைவர் கே.ஏ.ஆதிநாராயணன், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழுத் தலைவர் ஆர்.பிரபாகரன், பணிகள் குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், மாமன்ற உறுப்பினர் கே.ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


Page 259 of 506